இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசார் (NISAR) செயற்கைக்கோள் (NASA-ISRO Synthetic Aperture Radar), புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதிலும், பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதிலும் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.
புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், நில சுற்றுச்சூழல், கடல் பரப்பு, பனி உருமாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களைத் துல்லியமாகச் சேகரிப்பது என ஒரு நீண்டப் பனியினை மேற்கொண்டு வருகிறது நிசார்.
நிசார் செயற்கைக்கோள் 12 நாள்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாகச் சுற்றி வந்து, துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுடன் கூடிய புகைப்படங்களை வழங்குகிறது.
முதல் படம்: நிசாரில் உள்ள எஸ்-பாண்ட் ராடார் (S-Band Radar), ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி ஆற்றுப் படுகைப் பகுதிகளின் விவரங்களை முதன்முதலில் படமாக எடுத்து அனுப்பியுள்ளது.
படத்தில் உள்ள விவரங்கள்: இந்தப் புகைப்படத்தில் மங்குரோவ் காடுகள், வயல்வெளிகள், பயிரிடப்படும் இடங்கள், நீர்நிலைகள் என அனைத்தும் மிகத் துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் உலக நாடுகளின் முக்கியப் பகுதிகளை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வருகிறது.
இதுவரை நிசார் செயற்கைக்கோள் புவியின் சுற்றுவட்டப் பாதையை 100 முறை வெற்றிகரமாகச் சுற்றி வந்துள்ளது.
நிசார் செயற்கைக்கோளின் முக்கிய சிறப்பம்சம், அதில் பொருத்தப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் (SAR - Synthetic Aperture Radar) கருவிகள்தான்.
நிசாரில் ‘எல் பேண்ட்’ (L-Band) மற்றும் ‘எஸ் பேண்ட்’ (S-Band) ஆகிய இருவேறு வகை எஸ்ஏஆர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் தற்போது வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், ஜிபிஎஸ் ரிசீவர், அதிக திறன் கொண்ட சாலிட்ஸ்டேட் ரேடார் கருவி பதிவு மற்றும் சேமிப்புக் கட்டமைப்பு, தரவு துணைக் கட்டமைப்பு (டேட்டா சப் சிஸ்டம்) ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது.
புவியின் நிலம், நீர் மற்றும் பனிப்பரப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து, மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமை இதற்கு உண்டு.
இந்தச் செயற்கைக்கோள் இரவிலும் மற்றும் முழுக்க மேகக் கூட்டங்கள் மறைத்திருந்தபோதும் ஸ்கேன் செய்து தகவல்களைச் சேகரிக்கும் வல்லமை பெற்றது.
நிசாரின் தரவுகள் மூலம் பின்வரும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாகுபடி பகுதிகள், பயிர் ஆரோக்கியம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து மேம்பட்ட தகவல்கள் கிடைக்கும்.
வன அழிவைக் கண்காணித்தல், வனப்பகுதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல்.
இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்வது.
நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களின் போது ஏற்படும் புவி மேற்பரப்பு மாற்றங்களை விரைவாகக் கண்டறிந்து, மீட்புப் பணிகளுக்கு உதவுதல்.
நிசார் செயற்கைக்கோள், புவியைக் கண்காணிப்பதிலும், எதிர்கால சவால்களைச் சமாளிப்பதிலும் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு மகத்தான பங்களிப்பை அளிக்கும் என்று விஞ்ஞானிகள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
-S.B.


0 கருத்துகள்