Advertisement

Responsive Advertisement

சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு - 2 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடவுள் வழிபாடு, பக்தி உடையவர்களில் பலர் ஆன்ம சக்தியே இல்லாதவர்களாக, கொடியவர்களாகக் கூட இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடவுள் பக்தி மனிதர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல. மீனுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல, மனிதனுக்குக் கடவுள் பக்தி அமைய வேண்டும்.

ஆன்மாவின் தூய்மையே மனத் தூய்மை, மனத்தால் புலன்களும் அழுக்கற்றதாகும் புலன்களில் தூய்மை, பொறிகளில் தூய்மை, இதுவே சீரான வளர்ச்சி. பொறிகளின் தூய்மையால், ஆன்மா தூய்மையடைதலும் உண்டு. ஆனால் இது கடினம், பல சமயங்களில் வழுக்கல் ஏற்பட்டுத் தோற்றுப் போதலும் உண்டு. ஆன்மிக வாழ்க்கைக்கு இல்லறமா? துறவறமா? என்ற விவாதம் கிடையாது. இரண்டிலும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியமே. வாழ்பவர்களைப் பொறுத்ததே ஆன்மிக வளர்ச்சி.

ஆன்மிகம் என்பது துறவு நெறியைச் சார்ந்ததென்று பலர் கருதுகின்றனர். இது தவறு. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல; உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒரு சேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம். அப்பரடிகள் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை,

"அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ 
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ 
ஒரு குலமும் சுற்றமும் ஒரூரும்நீ 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ 
இப்பொன் நீ இம் மணிநீ இம்முத்துநீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே"

என்று அருளியுள்ளமையை அறிக. எவன் ஒருவன் தன்னையும், தன்னுடைய பொறி புலன்களையும், தன்னைச் சுற்றி உள்ள உலகத்தையும், தன்வசப்படுத்திப் பயன் கொள்கின்றானோ, அவன் ஆன்மிகத்தில் வளர்ந்தவன்; உயர்ந்தவன். ஆன்மாவிற்குள் ஆசை வெள்ளம், பொறிகள் வாயிலாக வந்து புகுந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மா அமைதியாக விளங்கும்; தேர்வு செய்யும்; ஏற்பன ஏற்கும். இதுவே ஆன்மிக வாழ்க்கையின் இயல்பு.

ஆன்மிகத்தில் வளர்ந்தவர்கள் மானுட சமூகத்தை இறைவன் ஒரு குடும்பமாக அமைத்தே வழி நடத்துகின்றான்; வாழ்விக்கின்றான்; என்று நம்புவார்கள். ஆன்மிகத்தின் கொள்கை ஒருமைப்பாடே! ஆன்மா சுருங்கிப் போவதல்ல. ஆன்ம மதிப்பீடு இல்லாத உடல் வாழ்வு மட்டுமே வாழ்பவர்கள் பிரிவினைவாதிகள்.

கடவுள் ஒருவரே. கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதுபோல முத்தியும் ஒன்றே. "கடவுள் ஒன்றல்ல; இரண்டு" என்று சொன்னால், அந்த நம்பிக்கை ஆன்மிகத்தின்-ஆன்மிக வாழ்க்கையின் குறிக்கோளை முறியடித்துவிடும். இத்தகைய பிரிவினைவாதிகள் மக்களை மதிக்க மாட்டார்கள், கெட்ட போரிடும் உலகத்தை உருவாக்குவர். இத்தகைய வெற்று மனிதர்கள் ஆன்மிக வேடம் கொண்டிருந்தாலும், ஆன்மிகவாதிகள் அல்ல.

ஆன்மிக வாழ்க்கையில் வளர்ந்தவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். எளிதில் மகிழ்வர்; அன்பு செய்வர் பிறருக்கு மகிழ்வூட்டுவர். ஆன்மா, அஹிம்சை, அஞ்சாமை, தியாகம், தயை, கள்ளாமை, நன்னடத்தை ஆகியவற்றைத் தனது அணிகலன்களாகக் கொண்டு பலருடன் கூடி வாழ்ந்தால் சமுதாயம் மேம்பாடுறும்.

இன்று பெரும்பாலும் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்து கூட இல்லை. மதங்களைச் சார்ந்திருக்கிறது. மதங்களைக் கூட அல்ல-மத நிஜவன அமைப்புக்களைச் சார்ந்திருப்பதையே இன்று ஆன்மிகம் என்று தவறாகப் பலர் கருதுகின்றனர். மதங்கள் தம்முள் முரண்பட்டே விளங்குகின்றன.

ஓரோ வழி மதங்கள் அன்பை, சமாதானத்தை, சகோதரத்துவத்தைப் போதிப்பது உண்மையானாலும், இந்தப் புனிதக் கொள்கைகளை விட, மதம் என்ற அமைப்பு-நிறுவனம் இவற்றின் ஆதிபத்திய அக்கறை மதங்களுக்கு மிகுந்து விட்டது. ஆதலால் மதங்களின் பெயரால், சண்டைகள், கலகங்கள், கொலைகள் தோன்றுகின்றன, கல்லாடம் சமயப் பிணக்கை மறுக்கிறது.

வள்ளற் பெருமான் சமயப் பிணக்குகளையும், பேதங்களையும் பார்த்து வெறுத்துப் போய் "மதமென்னும் பேய்" என்றார். இந்த உலகில் மதங்களின் பெயரால் நடந்த ஆதிபத்திய சண்டைகளே மிகுதி. ஆதலால், கடவுள் நம்பிக்கையையும் பிரார்த்தனையையும், கடவுள் வழிபாட்டையும், மதத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடாது. ஆன்மிக உலகம் வேறு; மத உலகம் வேறு.

ஒரு செடியிலிருந்து மணமுள்ள மலர், ஆரவாரமின்றி, முகிழ்த்து வெளிவந்து, எல்லோரும் மணத்தை அனுபவிக்கும்படி, மணத்தைப் பரப்புவதைப் போல, ஆன்மாவில் அன்பாக, அருளாக, தியாகமாக, சந்தடியின்றி, ஆரவாரமின்றி முகிழ்த்து, வாழ்வித்து வாழ்வது ஆன்மிகம்.

ஆன்மிகம் மற்றவர்களுக்கு உதவுவதில் முந்தும்; ஆறுதல் தரும். ஆன்மிகம் பயத்திற்கு அப்பாற்பட்டது: ஆளுமை உடையது. விசாலமான இதயம் உடையது. உறுதியும், உண்மையும் உள்ள உள்ளம், விருப்பத்துடன் வேலை செய்யும் பண்பு இவையே ஆன்மிகத்தின் அடையாளங்கள். இறைவன் கற்கோயிலில் எழுந்தருளுவதைவிட, மனக்கோவிலில் எழுந்தருளுவதையே விரும்புகின்றான். இறைவனை, "உடலிடங் கொண்டாய்", "மணத்தகத்தான்" என்றெல்லாம் திருமுறைகள் போற்றும். கற்கோயிலை விட மனக்கோயிலிலேயே இறைவன் எழுந்தருளுகின்றான் என்பதற்கு பூசலார் நாயனார் வரலாறே சான்று.

- தொடரும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்