Advertisement

Responsive Advertisement

பாவை நோற்ற பாவை நோண்பு - 4 - கோமான் ஶ்ரீ பாலாஜி


மார்கழி மாதத்தின் பனி படர்ந்த அதிகாலைப் பொழுது. ஆயர்ப்பாடியின் தெருக்களில் பாவை நோன்புக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. நான்காம் நாள் நோன்பை முன்னிட்டுத் தோழிகள் சிலர் ஒன்று கூடி நின்றனர். மெல்லிய தூறல் மட்டும் விழுந்து கொண்டிருந்தது.

முதல் தோழி: "கோதே, நீ பாட்டுக்கு இந்த பாவை நோன்பை நோற்றால், தீங்கின்றி மாதம் மும்மாரி பெய்யும் என்று சொல்லிவிட்டாய். ஆனால், என்ன? சின்னச் சின்னத் தூறலாகத்தானே பெய்கிறது. இப்படிக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்க, நீ என்னடான்னா, நல்ல மழை பெய்யும், செல்வ வளம் செழிக்கும் என்று சென்ற பாடலில் சொன்னாயே?" (குறை கலந்த குரலில்)

கோதை (ஆண்டாள்): (புன்னகையுடன்) "இருடி, அதற்குள் என்ன அவசரம்? இன்றுதானே நான்காம் நாள்? நம்முடைய இந்த நோன்புக்கு இடையூறாக அடைமழை பெய்து, நம் நியமத்தினைப் பாழாக்கப் போகுமே என்று நான் ஒரு பக்கம் நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீ வேற!"

ஆண்டாள், தனது பாடலைத் தொடங்க ஆயத்தமானாள். "ஆழிமழைக் கண்ணா..." என்று அவள் ஆரம்பித்ததும், மற்றொரு தோழி முணுமுணுத்தாள்.

மூன்றாம் தோழி: "இவளுக்குக் கண்ணன் மேல் இருந்த மோகத்தினால், பார்க்கும் அனைத்தும் கண்ணனாகவே தெரிவதைப் போல் பித்துப் பிடித்துவிட்டது. மழைக்கு அதிபதி வருணன் அல்லவா? அவனை அழைக்காமல் கண்ணனை அழைக்கிறாளே! இதனால் அவன் கோவித்துக்கொண்டு, மழையைத் தராமல் வெறுங்கையாய் திருப்பி அனுப்பிவிடப் போகிறான்."

பயத்தினாலும் நடுக்கத்தினாலும் தோழியின் குரல் சற்றே அதிகப்பட, இதைக் கேட்ட கோதை, அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

கோதை (ஆண்டாள்): "அடியே, பயப்படாதே! நான் பாடியதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. நமக்குச் சகலமும் கண்ணன் அன்றோ என்ற ஒரு பொருளும், அதைச் சற்றே பிரித்துப் பார்த்தால், 'ஆழி மழைக்கு அண்ணா' என்று வருணனையும் தான் குறிப்பிடுகிறேன். அவனால் நமக்குக் காரியம் ஆக வேண்டுமே! அதனால்தான் அவனை 'அண்ணா' என்று கூப்பிடுகிறேன். மேலும், அவனுக்கு மழையை எப்படிப் பெய்விக்க வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லப்போகிறேன்."

முதல் தோழி: "ஓகோ... கதை இப்படிப் போகிறதா? உன்னை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நீ நிறைய விஷயம் தெரிந்தவளாயிருக்கிறாய்!" (வியப்புடன்)

கோதை (ஆண்டாள்): "ஆழி மழைக்கு அதிபதியான அண்ணா, நீ ஒன்றை மட்டும் செய்யேன். நீ நேராகக் கடலுக்குச் சென்று, அங்கிருந்து நீரை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு அதிகளவு மொண்டு, வானத்துக்கு ஏற்றி..."

இரண்டாம் தோழி: "கொஞ்சம் பொறு, ஆண்டாள்! நீ வேகமாகப் பாடிவிட்டுப் போகிறாய். எங்களால் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மழை வருவதற்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்? அதுவும், நாம் இருக்கிறதோ ஆயர்ப்பாடி! இங்கே கடலே இல்லையே!"

கோதை (ஆண்டாள்): "ஆகா, நன்றாகக் கேட்டாய்! நம்மோட எல்லா நீர்நிலைகளிலிருந்தும் தண்ணீரை எல்லாம் உறிஞ்சி ஆவியாக்கி, தன்னுடைய மேகத்தில் சேர்த்து, குளிர்ந்து வேறோர் இடத்துக்கு மழை தருபவர்தாம் நம் அண்ணா. முதலில், வெள்ளென்று பஞ்சுபோல் இருக்கும் மேகத்தை, நீருண்ட மேகமாய், என் கடல் வண்ணன், கருமேகச் சியாமளனைப் போன்று கருக்கச் செய்ய வேண்டும்!"

"அந்தக் கருத்த மேகம் எப்படி இருக்கும் தெரியுமா? என்னுடைய நாதன் கண்ணன், ஊழிக் காலத்தே, ஓர் ஆலிலைமேல் பாலகனாய்ப் படுத்திருப்பானே, அவனுடைய கரிய நிறத்தில் இருக்கும்! அதுவும், கையில் பளபளவென்று மின்னும் திகழ் சக்கரம் போன்று மின்னல் மயமாயும், மற்றோர் கையில் இருக்கும் பாஞ்ச சன்னியம் ஒலிப்பதைப் போன்று இடி முழக்கத்தோடே இருப்பார் மழைக்கு அதிபதி!"

மூன்றாம் தோழி: "அடேங்கப்பா! அவ்வளவு கம்பீரமாவா...!" (பயமும் பிரமிப்பும் கலந்த குரல்)

கோதை (ஆண்டாள்): "ஆமாம்! அதோடு, நம் கண்ணன், இராமவதாரம் எடுத்தபோது கையில் வைத்திருந்த கோதண்ட வில்லிருந்து சரமாரியாக வரும் அம்புகளைப் போன்று, நாம் வாழ இவ்வுலகினில் அளவு குறையாமல் மழை பெய்திடுவார் நம் அண்ணா. நான் சொல்வது புரிகிறதா, அண்ணா? என் கண்ணா! நாங்கள் மார்கழி நீராடி மகிழ வேண்டும்."

இப்படித் தோழியர்களுக்கு விளக்கிய ஆண்டாள், விண்ணப்பமாக அந்தப் பாசுரத்தைப் பாடி முடித்தாள்.

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து,
பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்,
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்