Advertisement

Responsive Advertisement

'புளு டிக்' வரலையா? என்னவாக இருக்கும்? – நவீன மௌன மன அழுத்தம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்கள் வெறும் தொடர்புக்கான கருவிகள் அல்ல; அவை நமது மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆம் உண்மை தான். ஒரு இரட்டை நீல நிறக் குறியீடு – நாம் செல்லமாக அழைக்கும் அந்தப் “புளு டிக்” – எத்தனை மனங்களின் அமைதியை ஒரு நொடியில் குலைக்கிறதென்று நாம் யோசித்ததுண்டா? அது என்ன புளு டிக் என்கிறீர்களா? இது உங்களுக்கான கட்டுரை அல்ல. நீங்கள் இதை படிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பெரும்பான்மையோர் இந்த சுழலில் சிக்கியிருக்கிறோம் அவர்களுக்கானது தான் இந்த கட்டுரை. அது என்ன சற்று பார்ப்போம்.


Whatsappல் அல்லது ஏதோ ஒரு சாட்டில் (Chat) ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு காத்திருக்கிறோம். அது நம்மிடமிருந்து சென்றுவிட்டதற்கான ஒற்றை டிக், பின்னர் யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கு சென்று சேர்ந்ததற்கான இரட்டை டிக் வந்துவிட்டது. ஆனால், புளு டிக் வரவில்லை. அப்போது நம் மனதின் மூலையில் ஒரு நாடகம் ஆரம்பிக்கிறது. “அவர் பார்த்தாரா?”, "இல்லையேல் read receipts off செய்துள்ளாரா?" “அப்படி பார்த்தும் ஏன் ரிப்ளை செய்யவில்லை?”, “உண்மையில் அவர் என்னை மதிக்கவில்லையா?”, “நான் அவருக்கு அவ்வளவு முக்கியமில்லையா?”— இப்படி எண்ணங்களின் சுழற்காற்று நம்முள் எழ, ஒரே ஒரு “புளு டிக்” வராததற்காக நமது மனம் பல முறை உடைந்து, ஒட்டி, மீண்டும் உடைகிறது. சில சமயங்களில் கண்ணாடி போல் சிதருகிறது. உறவுகளின் மத்தியில், இந்த நீல டிக் வராததால் உருவாகும் மௌனம் ஒரு ஆழமான மன அழுத்தத்தை – கண்ணுக்குத் தெரியாத ஒரு சுமையை நம்முள் சுமத்தி விடுகிறது. ஒரு சிலர் காலையில் ஒரு Good Morning மெசேஜ் இரவில் ஒரு Good Night மெசேஜ் என அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.


நாம் இங்கே ஒரு முக்கியமான உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு நாம் மெசேஜ் அனுப்பினோமோ,  அவருக்கும் மிகுந்த வேலை பளு (Work Pressure) இருக்கலாம், அன்றைய தினம் ஏதேனும் முக்கியமான சந்திப்பில் அவர் இருக்கலாம், அல்லது தனிப்பட்ட சிக்கலில் இருக்கலாம். அதனால் தான் அவர் நாம் அனுப்பிய மெசேஜைப் பார்க்கவில்லை, அல்லது பார்த்தும் உடனே பதில் அனுப்ப முடியவில்லை. அவர்களின் இந்த மௌனம் நம்மை நிராகரித்து விட்டார்கள் என்பது பற்றி அல்ல, அவர்களின் வேலைப் பளுவைப் பற்றியது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

முன்னொரு காலத்தில் (என்ன செய்வது) தபாலில் ஒரு செய்தியையோ அல்லது வாழ்த்தையோ அனுப்பி அதற்கு அவர் பதில் சொல்லாமல் இருந்தால், அது பொதுவாக அஞ்சல் துறையின் தாமதம் என்றே எண்ணப்பட்டிருக்கும். ஆனால் அப்போதைய காத்திருப்பு ஒருவித இனிமையான எதிர்பார்ப்பை தன் கையில் கொண்டிருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள், நம்மைத் தெரியாமலேயே, நேரத்தின் அடிப்படையில், பார்வையின் அடிப்படையில், மற்றும் ‘ரீட்ஸ்’ எனும் அளவுகோல்களால் அளந்துவிடப் படுகின்றன. இரவு பகல் பாராமல் மொபைலில் ஈடுபட்டு இருப்பதால் ஏற்படும் குழப்பம் அது.

இது ஒரு பக்கமிருக்க இந்த இன்ஸ்டாவில் அல்லது Youtubeல் போடப்படும் வீடியோக்களுக்கு எவ்வளவு views, Likes, Shares என பார்த்துக் கொண்டேயிருப்பது இவை அனைத்தும், நம்முடைய தனிப்பட்ட மதிப்பை, சமூக அங்கீகாரத்தை, மற்றும் உறவுகளின் நெருக்கத்தை தீர்மானிக்கும் டிஜிட்டல் அளவுகோல்களாக உருமாறிவிட்டன. நமது சந்தோஷங்கள் மற்றவர்களால் 'கணக்கிடப்படும்' போது, உண்மையான உணர்வுகளின் மதிப்பு குறைந்துவிடுகிறது.

சில நேரங்களில், நாம் மிகுந்த உழைப்பால் உருவாக்கும் ஒரு பதிவிற்கோ, அன்புடன் பகிரும் ஒரு பதிவிற்கோ, அல்லது நேசத்துடன் அனுப்பும் ஒரு புகைப்படத்திற்கோ எதிர்பார்த்த அளவு பார்வைகளோ, அங்கீகாரமோ வராமல் போகலாம். அப்பொழுது, நமது மனதின் மூலையில் இருந்து, அந்த கூர்மையான வாக்கியம் நம்முள் எதிரொலிக்கிறது — “நான் அவ்வளவுதானா? எனக்கு மதிப்பில்லையா”

இந்த கேள்வி, நம் தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை மெதுவாகக் குலைக்கத் தொடங்குகிறது. மக்கள் நம்மைப் புறக்கணித்து விட்டார்கள் அல்லது கவனிக்கவில்லை என்ற எண்ணம், ஒரு சிறிய காயம்போல நம் மனதில் சேரத் தொடங்குகிறது. நாம் பகிரும் ஒரு 'ஸ்டேட்டஸ் அப்டேட்'க்கு வரும் Views எண்ணிக்கைக் கூட, நம்முடைய இருப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்ட ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.

இந்த நுணுக்கமான மனநிலையைத்தான் மனநல நிபுணர்கள் “மைக்ரோ-அங்க்ஸைட்டி” (Micro-Anxiety) என்று அழைக்கின்றனர் — அதாவது, சிறிய, ஆனால் தொடர்ந்து நம்மை அரிக்கும் கவலை. பதில் வராமை, பார்வைகள் குறைவாக வருவது, ஏன் அவர் நமக்கு பதில் அனுப்பவில்லை என்gது போன்ற சிந்தனைகள் எல்லாம் நம்முள் ஒரு அடங்காத, ஓயாத கவலையை உருவாக்குகின்றன. இது நம் அன்றைய நாளைச் சிதைக்கிறது; ஒரு நல்ல மனநிலையையும், நிஜ உறவுகளின் ஆழத்தையும் பாதிக்கிறது; நம்முடைய மொத்த மன அமைதியையே சத்தமில்லாமல் பறித்துவிடுகிறது. டிஜிட்டல் உலகம் இட்ட மௌனமான நிபந்தனைகளுக்குள் நாம் நம்மைச் சிறைப்பிடித்துக் கொள்கிறோம்.

இந்த டிஜிட்டல் சுழலில் இருந்து நம்மை விடுவித்து, மன அமைதியுடன் வாழ்வதற்கு நாம் சில எளிய, ஆனால் ஆழமான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட மதிப்பை லைக்குகளோ, ரீட்ஸ்களோ, கமெண்ட்களோ தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உணர்வுகள் ஒரு எண்ணாக (Number) அல்ல; ஒரு ஆழ்ந்த அனுபவமாக (Experience)வே இருக்கும். நீங்கள் பகிரும் உள்ளடக்கத்தின் நோக்கம், உங்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, வெளியில் இருந்து அங்கீகாரத்தைப் பெறுவதாக இருக்கக் கூடாது.

அவ்வப்போது, ஒரு டிஜிட்டல் விரதம் கடைப்பிடியுங்கள். சில நாட்கள் மெசேஜ், ஸ்டேட்டஸ், ரீல்ஸ் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள். அந்த அமைதியில், உங்கள் மனம் தன்னை மீட்டெடுக்கும். அந்தத் தூய்மையான மனநிலையில், நிஜ உலகின் அழகு புரியும்.

உங்கள் அருகில் இருக்கும் மனிதர்களிடம் பேசுங்கள். உங்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்து நடத்தும் ஒரு நேர்மையான உரையாடல், ஒரு கள்ளங்கபடமற்ற சிரிப்பு, ஒரு சிறிய நேரடிச் சந்திப்பு — இவைதான் நம்மை உண்மையில் நிறைவாகவும், முழுமையாகவும் ஆக்கும். மொபைல் தொடுதிரையில் அல்ல; தொட்டுப் பேசும் உறவுகளில் தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது.

இறுதியாக...

அந்தப் “புளு டிக்” என்பது ஒரு குறியீடே தவிர, உங்கள் உறவின் உண்மையான ஆழத்தை அளக்கும் அளவுகோல் அல்ல. ஒரு மெசேஜுக்குப் பதில் வர ஒரு மணி நேரம் ஆகலாம்; அதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்கள் உங்களைப் பற்றியது அல்ல; பதிலளிப்பவரின் சொந்த வாழ்க்கைப் பளுவைக் குறிப்பது.

ஒரு ரீல் எத்தனை பேர் பார்த்தார்கள் என்பதைக் காட்டிலும், நீங்கள் எத்தனை பேரின் மனதை நிஜமாகவே உங்கள் அன்பாலும், செயலினாலும் தொட்டீர்கள் என்பதே முக்கியம். டிஜிட்டல் உலகம் சத்தமாக, கவனத்தை ஈர்க்கும் வண்ணம், நம்மைச் சுற்றிச் சுழன்றாலும், அமைதியாக, நிம்மதியாக வாழ்வதற்கான சக்தி நம்முள், நம் மௌனத்தின் ஆழத்தில், ஒளிந்திருக்கிறது. அதை நாம் தேடிக் கண்டுபிடிப்பதே நவீன வாழ்வின் உண்மையான சவால். 

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்