ஒரு காலத்தில் செவ்வாய் கிரகம் சூடாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது, உயிரினங்கள் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் இன்று செவ்வாய் கிரகம் குளிர்ச்சியாகவும், வறண்டதாகவும் உள்ளது. அதன் மேற்பரப்பில் நீர் திரவமாக இருக்க முடியாத அளவுக்கு அதன் வளிமண்டலம் மெல்லியதாக உள்ளது. பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஆறுகள் அதன் நிலப்பரப்பில் பாய்ந்தன, ஏரிகள் அதன் பள்ளங்களை நிரப்பின. ஆனால் தற்போது வறண்டு காணப்படும் செவ்வாய் கிரகத்தின் காற்று மற்றும் தண்ணீருக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிவதன் மூலம், நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கிரகங்கள் வாழத் தகுதியானவையா என்பதையும், காலப்போக்கில் பூமியின் வளிமண்டலம் எவ்வாறு மாறக்கூடும் என்பதையும் நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகம் அதன் காந்தப்புலத்தை இழந்த பிறகு, சூரியக் கதிர்வீச்சு படிப்படியாக கிரகத்தின் பாதுகாப்பு வளிமண்டலத்தை அகற்றியது என்பதே முன்னணி கோட்பாடாகும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதில் ஏற்கனவே இந்தியாவின் மங்கள்யான் (Mars Orbiter Mission - MOM) பணி ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது.
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தையும், அது சூரிய கதிர்வீச்சுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்வது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டில் இஸ்ரோ இந்த விண்கலத்தை அனுப்பியபோது, செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடாகவும், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடாகவும் இந்தியா ஆனது. அதன் ஆயுட்காலமென திட்டமிடப்பட்ட ஆறு முதல் பத்து மாத காலத்தை விட மிக அதிகமாக, சற்றும் சிந்திக்கவே முடியாத எட்டு ஆண்டுகள் செயல்பட்டது.
தற்போது, ஜெஃப் பெசோஸ் தலைமையிலான தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் நாசாவின் சார்பாக ஏவப்படும் ESCAPADEன் செவ்வாய் கிரகப் பயணம், இந்த மாத இறுதியில் அல்லது நவம்பரில் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறிய விண்கலங்களை அனுப்பவதாக இருக்கிறது. ESCAPADE (ESCape and Plasma Acceleration and Dynamics Explorers) - செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல இழப்பினை செயல்பாட்டில் பிடித்து துல்லியமாக அளவிட்டுத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இஸ்ரோ அதன் அடுத்த செவ்வாய் கிரகப் பயணமான மங்கள்யான்-2 ஐத் ஏவ திட்டமிடுகிறது. முதல் திட்டத்தை விட மிகவும் லட்சியமாக இருக்கும் இந்தப் பணிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் கிடைத்தது. இதில் ஒரு ஆர்பிட்டர், ஒரு ரோவர், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ஒரு ஸ்கை கிரேன் தரையிறங்கும் அமைப்பு ஆகியவை அடங்கும். மங்கள்யான்-2 க்கான கருவிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைக்கும்போது, செவ்வாய் கிரக ஆய்வுக்கு ESCAPADE என்ன புதிய நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் கொண்டு வருகிறது என்பதைக் காண அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் மங்கள்யான் வெற்றிக் கதை நினைவில் கொள்ளத்தக்கது. இந்தியா தனது முதல் செவ்வாய் கிரகப் பயணத்தை வெறும் ரூ.450 கோடி பட்ஜெட்டில் நிறைவேற்றியது, இது ஒரு பெரிய தமிழ் ஸ்டாரின் திரைப்படத்தை உருவாக்கும் செலவை விடக் குறைவு. இதனை நினைவு படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2,000 ரூபாய் நாணயத் தாளில் மங்கள்யானின் படத்தைக் கூட வெளியிட்டது.
ESCAPADE வெற்றியடைந்தால், தனியார் அமெரிக்க விண்வெளி நிறுவனங்கள் மற்ற கிரகங்களுக்கு ஆழமான விண்வெளி ஆய்வுப் பணிகளைக் கையாள முடியும் என்பதையும் இது காட்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த பயணத்தின் மூலம் கிடைக்கும் டேட்டாக்களை தங்களிடம் உள்ள டேட்டாக்களுடன் இணைத்து அடுத்த மங்கள்யான்-2வினை ஏவுவதற்கு பயன்படுத்தும்.
-S.B.




0 கருத்துகள்