திருடியது யார்?
கண்ணனை நினைத்தால், அவன் தனது பதினோரு வயது வரை செய்த லீலைகள்தான், எவர் மனத்திலும் அரியாசனம் போட்டு உட்காரும். கண்ணனின் பால பருவ லீலைகள், சாதாரண மனிதர்களான நம்மைவிட சுகாச்சார்யார், லீலாசுகர், வேதாந்த தேசிகர், நாராயணப் பட்டத்திரி போன்ற மகான்கள் மற்றும் ஆழ்வார்கள் பலரை அதிகமாகக் கவர்ந்துள்ளன. இப்படிப்பட்ட கண்ணனின் லீலைகளை வருங்காலத் தலைமுறைகள் அறிந்து ஆனந்தம் அடைவதற்காக, அவற்றைப் பல்வேறு முறைகளில் வெளியிட்டுள்ளனர் அந்த மகான்கள்.
கண்ணனின் லீலைகளில், குறிப்பிடத் தக்கது வெண்ணெய் திருடியது. கண்ணன் வெண்ணெய் திருடியதற்கான காரணத்தைப் பார்த்த நாம், நாராயணப் பட்டத்திரி சொல்லும் காரணத்தைப் பார்ப்போம்.
அவர், கண்ணனின் பழைய அவதாரங்களிலிருந்து தொடங்குகிறார். ‘குருவாயூரப்பா... மஹாபலிச் சக்ரவர்த்தி பலம் வாய்ந்தவன். அவனிடம் திருட முடியாது. யாசிக்கத்தான் வேண்டும். ஆனால், கோபிகைகள் அபலைகள். அவர்களிடம் தைரியமாகத் திருடலாம் என்றுதான், யாசிக்காமல் விசித்திரமான முறையில் தயிரையும் வெண்ணெயையும் திருடினீர்களா?’ என பக்தியோடும் உரிமையோடும் கேட்கிறார்.
மேலும் தொடர்கிறார். ‘குருவாயூரப்பா... தங்களது தயிர், வெண்ணெய்த் திருட்டினால் கோபிகைகள் கோபமோ, வருத்தமோ அடையவில்லை. மட்டுமின்றி தாங்கள், கோபியரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களை ஆனந்தக் கடலிலும் மூழ்க அடித்தீர்களே? குருவாயூரப்பா... வெண்ணெய் திருடும் காரணத்தால் வீடுகள் தோறும் நுழைந்து, அவர்களின் உள்ளத்தில் ‘ஆனந்தம்’ என்னும் விலையுயர்ந்த பொக்கிஷத்தையும் அல்லவா வழங்கியிருக்கிறீர்கள்?’ என்கிறார் பட்டத்திரி.
‘இதன்படி, நாரதர் முதலான பாகவத உத்தமர்களின் ஏகபோக பாக்கியமான பரம்பொருளை, சின்னஞ்சிறிய இடமான ஆயர்பாடியில் இருக்கும் தங்களது வீடுகளுக்கு தினந்தோறும் வரவழைத்து, ‘பிரும்மானந்தம்’ எனும் அமிர்த ரசத்தை அளவில்லாமல் குடித்த கோபிகையர் அல்லவா உண்மையில் திருட்டுக் குற்றம் செய்தவர்கள். திருட்டுக் கொடுத்தவன் அல்லவா ஸ்வாமி?’ என்கிறார் மகான் ஒருவர்.
அதோ! ஸ்வாமி தன் கும்பலுடன் மறுபடியும் திருடக் கிளம்பிவிட்டார். இந்தத் தகவல், கோகுலத்தின் வீதிகளில் எல்லாம் பரவியது.
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

0 கருத்துகள்