அதோ! ஸ்வாமி தன் கும்பலுடன் மறுபடியும் திருடக் கிளம்பிவிட்டார். இந்தத் தகவல், கோகுலத்தின் வீதிகளில் எல்லாம் பரவியது. அதனால் முடிந்தவரையில் அவர்கள் தங்களது வீட்டைப் பாதுகாத்துக் கொண்டனர்.
வீட்டின் பின்புறம் போய் பால் கறந்தால், கண்ணன் வருவது தெரியாமல் போகுமே என்று கருதி பெண் ஒருத்தி, வீட்டின் வாயிற் பக்கத்திலேயே மாட்டைக் கட்டிப் பால் கறந்தாள்.
கண்ணன் அவள் முன்னால் வந்து நின்றான். ‘எப்போதும் பத்துப் பேருடன் சுற்றுபவன், இப்போது தனியாக வந்திருக்கிறானே! என்ன நடக்கப் போகிறதோ?’ என்று பயத்துடன், அவள் கண்ணனைப் பார்த்தவாறே பால் கறந்தாள். கண்ணனும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான்.
‘இவன் கள்ளன்; ஏதாவது செய்து விடுவானோ!’ என்று கண்ணனின் கருணை முகத்தையே பார்த்தாள் அவள்.
கண்ணனின் விழிகளும் சற்றே குனிந்திருந்த திருமேனியும் இரு திருவடிகளும் அவற்றில் ஊன்றியிருந்த இரு கைகளும் அவள் மனதைக் கொள்ளை கொண்டன. பால் கறப்பது நின்றுவிட்டது. கைகள் ஆட வில்லை, அசையவில்லை. அவனது வடிவழகையே விழுங்கிக் கொண்டிருந்தன அவள் கண்கள். இவ்வளவும் ஒரு சில நொடிகளில் நடந்தன.
வீட்டுக்குள் ‘கடபுடா’ என்று பானைகள் உடையும் சத்தம். ஒன்றும் புரியவில்லை. ‘கண்ணன் இங்கே இருக்கும் போது உள்ளே என்ன சத்தம்?’ என்று குழம்பினாள். உடனே உட்புறம் ஓடினாள்.
அங்கே... பாலும் தயிரும் ஆறாக ஓடின. அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த பானைத் துண்டுகள் அசைந்தன. கண்ணனின் நண்பர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.
அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. ‘‘இனி உங்களை விட்டு வைக்கப் போவதில்லை!’’ என்று கத்தியபடி ஓடினாள். அது பலனளிக்கவில்லை. அங்கிருந்தவர்கள், கொல்லைப்புற வழியாகப் பறந்துவிட்டனர். ‘அவர்கள் தப்பித்து விட்டார்களே!’ என்ற ஆற்றாமை, வாயிலில் இருந்த கண்ணன் மேல் திரும்பியது.
‘‘கள்ளக் கண்ணா! நண்பர்களை வீட்டுக்குள் அனுப்பி விட்டு, ஒன்றும் தெரியாதவனைப் போல வாசலில் என்னை வேவு பார்த்தாயா? இதோ வருகிறேன். வசமாக மாட்டிக் கொண்டாய்!’’ என்றபடி வெளியே ஓடி வந்தாள்.
அங்கே கண்ணன் இல்லை. போகும்போது கன்றுக்குட்டியையும் அவிழ்த்து விட்டிருந்தான். அது, தன் இஷ்டம் போல தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தது. மீண்டும் உள்ளே ஓடினாள். ‘கண்ணன் வந்திருப்பானோ?’ என்று திரும்பவும் வெளியே வந்தாள். இப்படியே அலைந்தாள்.
‘வாழ்க்கைக் களேபரத்தில் அகப்பட்ட ஜீவன், அதிலிருந்து மீள்வதற்காக தெய்வத்தைத் தேடி அலைவதையும் வாழ்க்கைக் களேபரம் மறுபடியும் அந்த ஜீவனை உள்ளே இழுப்பதையும் ஜீவன் மீண்டும் தெய்வத்தைத் தேடுவதுமாக இருக்கும் உலக இயலைச் சுட்டிக் காட்டுவது போல அந்த நிகழ்ச்சி இருந்தது!’ என்கிறார் மகான் ஒருவர்.
தேடுபவர்களின் கண்களில் சிக்காதிருப்பதும், தேடாதவர்களைத் தேடிப்போய் அருள் செய்வதும் தெய்வத்தின் இயல்பு. அதை நிரூபிப்பது போல் கண்ணனும் அவன் தோழர்களும் அடுத்த தெருவில் நுழைந்து விட்டனர்.
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006


0 கருத்துகள்