Advertisement

Responsive Advertisement

தியாகத்துக்கு ஒரு திலீபன் - கௌதம நீலாம்பரன்


திலீபன் என்னும் மாமன்னன், மிகச் சிறந்த பண்பு நலங்கள் ஒருங்கே அமையப் பெற்றவனாகத் திகழ்ந்தான். வைவஸ்வதமனுவின் தூயவம்சத்தில் வந்த அரசனான திலீபனுக்கு மகப்பேறு நெடுங்காலம் வாய்க்காமலிருந்தது. அவனுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்ததால், தன் குலகுருவிடம் சென்று விசாரிக்க விரும்பினான். உடனே தன் மனைவி சுதட்சிணையை அழைத்துக்கொண்டு, இமயமலை அடிவாரத்திலிருந்த வசிஷ்டரின் ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டான்.

பட்டத்தரசியுடன் வந்து நின்ற அரசன் திலீபனை வரவேற்று உபசரித்த வசிஷ்டர், அவனுடைய மனக்குறையை அறிந்ததும் ஞானநோக்கில் அதுபற்றி ஆராய்ந்தறிந்து, ‘‘திலீப மன்னா, நீ ஒருமுறை தேவருலகம் சென்று திரும்பும்போது, அங்கே வழியில் கற்பக விருட்சத்தின் அடியில் நின்றிருந்த காமதேனுவை வலம் வந்து வணங்காமல் அலட்சியம் செய்து விட்டாய். அப்பசு, ‘என் சந்ததியை மதித்து வணங்கி வழிபட்டாலன்றி உனக்கு சந்ததி வாய்க்காது’ எனக் கூறியுள்ளது. அந்தக் காமதேனுவின் பெண்ணான நந்தினிதான் என் ஆசிரமத்திலுள்ள பசு. இதை நீ உபசரித்து மனம் குளிர்வித்தால் போதும்; உன் சாபம் விலகி, சந்தான பாக்கியம் உண்டாகும்’’ என்றார்.

குலகுருவின் கட்டளையை ஏற்ற அரசன் திலீபன், அங்கேயே தன் அரசியுடன் தங்கியிருந்து, நந்தினிப் பசுவை நன்கு கவனித்துப் பணிவிடைகள் செய்தான். அதைக் குளிப்பாட்டுவது, தண்ணீர் அருந்தச் செய்வது, உணவளிப்பது என ஒவ்வொன்றையும் அன்பொழுகச் செய்தான். அவனுடைய அரசி சுதட்சிணாதேவியும் உடன் இருந்து, உதவிகள் பல செய்தாள்.

திலீபன் அப்பசுவைத் தானே மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வான். அரசியும் கூடவே சிறிது தொலைவு செல்வாள். பிறகு ஆசிரமம் திரும்பிக் காத்திருப்பாள். மாலையில் அப்பசுவுடன் அரசன் திரும்பும்போது, எதிர்கொண்டு வரவேற்பாள். மாலையில் பூஜை நடக்கும். நந்தினியை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கையில், திலீபன் அதை அடிக்கவோ, விரட்டவோ மாட்டான். அது இஷ்டப்படி போகவிட்டு, அதன்பின்னே சென்று வருவதே அவன் வழக்கம். நந்தினி மீது ஈக்கள் அமர விடவே மாட்டான். ஓர் உண்ணிகூட அதன்மீது அமராதபடி அவ்வப்போது விசிறியபடியே இருப்பான். பாசத்தோடு அதன் கழுத்தைக் கட்டித் தழுவி, உடலின் தினவு நீங்க வருடிக் கொடுப்பான். பசும்புற்களை நிறைய எடுத்து வந்து ஊட்டிக் கொண்டேயிருப்பான்.

இவ்வாறு இருபத்தொரு நாட்கள் சென்றன. நந்தினி மிகவும் மனம் குளிர்ந்து போயிருந்தது. அப்போதுதான் ஒருநாள் அந்த சோதனை நிகழ்ந்தது. அன்று நந்தினிப் பசு இமயமலை அடிவாரத்தில் ஒரு குகைக்கு எதிரே புல் மேய்ந்து கொண்டிருந்தது. அரசன் திலீபன் அந்தப் பனிமலையின் அழகில் ஒரு கணம் மனம் தோய்ந்து நின்றான். அவனுடைய பார்வை அதன் உயரிய சிகரங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. மனமோ ‘இது ஈசன் வாழும் மலையல்லவா?’ என எண்ணிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குகைக்குள்ளிருந்து ஒரு சிங்கம் திடீரென வெளிப்பட்டு, நந்தினிப் பசுவின் மீது பாய்ந்து விட்டது. பசு எழுப்பிய ஓலத்தால் அப்பனிமலையே கிடுகிடுத்தது.

அந்த ஓலம் திலீபனின் உள்ளத்தில் பாய்ந்து அவன் உயிரையே உலுக்கியது. அவன் சடாரெனத் தன் தோளில் தொங்கிய வில்லை எடுத்து வளைத்தான். அதன் நாணில் பூட்ட அம்பை எடுக்கக் கையை உயர்த்தினான். வலக்கரம் அப்படியே நின்றுவிட்டது. அவனால் அதை அசைக்கவே முடியவில்லை. அப்படியே வடித்து வைத்த சிலைபோல் நிற்க நேர்ந்த அவனைப் பார்த்த சிங்கம், மானுடக்குரலில் பேசத் தொடங்கியது.

‘‘ஏ அரசனே! உன் வீரம் இங்கு செல்லுபடி ஆகாது. நான் சாதாரணக் காட்டுவிலங்கல்ல. உன் பாணங்களால் என்னைக் கொல்லவோ, காயப்படுத்தவோ முடியாது. நான் சிவசேவகன். நீ இப்போது எந்த தேவதாரு மரத்தின் அடியில் நிற்கிறாயோ, இதன் காவலனாக என்னை ஈசன் நியமித்துள்ளார். இம்மரம் கன்றாக இருந்தபோது, இதை இங்கே நட்டு வளர்த்தது சாட்சாத் பார்வதி தேவியாகும். ஒரு முரட்டு யானை இம்மரக் கன்றின் மீது தன் கன்னத்தை உரசியதால் இதன் பட்டைகள் உரிந்து போயின. மேலும் அவ்வாறு நிகழாதிருக்க, ஈசன் என்னை இங்கு பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்த எல்லைக்குள் வரும் ஜீவன்களைக் கொன்று உண்பது எனக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். இன்று இப்பசுதான் என் உணவு. என்னைத் தடுக்க வீணாக முயல வேண்டாம். விலகிச் செல்’’ என்றது அச்சிங்கம்.

திலீபன் யோசித்தான். சிங்கம் தெய்வீக ஆற்றலுடன் உள்ளது. அதை வெல்வதோ, வீழ்த்துவதோ, விரட்டுவதோ ஆகக்கூடிய காரியமல்ல என்பது நன்கு புரிந்ததும் அவன், ‘‘ஓ மிருகராஜனே! நீ எனக்கு உண்மையை உணர்த்தியதற்கு நன்றி. என் மனம் நீ அறிவாய். நான் அரசன். நேர்மை தவறாதவன். என் குருவின் பொருட்டு இப்பசுவின் ரட்சகனாக இப்போது நான் இங்கு வந்துள்ளேன். இப்பசு அழிவதைக் காண என்னால் ஆகாது. நீயே கூறியபடி நானும் இப்போது உன் அதிகார எல்லைக்குள்தான் வந்து நிற்கிறேன். என்னை உண்டு நீ பசியாறலாமே? பாவம் இப்பசு. இதன் கன்று வேறு ஆசிரமக் கொட்டிலில் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும். இதைப் போக விட்டுவிடு’’ என மன்றாடினான்.

‘‘திலீபா, நீ அரசன். இன்னும் கட்டுடல் மாறா யவ்வனப் பருவத்திலேயே இருக்கிறாய். கேவலம் இந்த ஒரு பசுவிற்காக உன் உயிரை இழக்க வேண்டுமா? இது உனக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நீ ஏன் உணராது இருக்கிறாய்? விவேகம் என்பதே உனக்கு இல்லையா? நீ உயிரை விடுவதன் மூலம் இப்பசுவின் உயிர் மட்டுமே காப்பாற்றப்படும். நீ உயிருடன் இருந்தால், உன் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மகிழ்வர். உன் மனைவி மகிழ்வாள். அதெல்லாம் உனக்குப் பெரிதாகத் தோன்றவில்லையா? குருவைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. நீ அரசன் என்பதால், இந்த ஒரு பசுவிற்கு ஈடாக ஆயிரம் பசுவை அவருக்கு அளிக்கலாம். வசிஷ்டரின் கோபம் தணிந்து விடும். உன்மீது பரிதாப்பட்டே இவ்வளவும் சொல்கிறேன். நீ இந்த நந்தினியை விட்டு விலகிச் செல்.’’

‘‘அபூர்வ சிங்கமே! உன் பரிதாபம் மற்றும் கருணைக்கு நன்றி. நான் க்ஷத்திரியன். சத்தியத்திற்கு அன்றி வேறெதற்கும் அஞ்ச மாட்டேன். நான் ஏற்ற கடமையை நான் ஒழுங்காகச் செய்தாக வேண்டும். இப்பசுவைக் காக்கும் கடமையை ஏற்றே இங்கு வந்தேன். நீ எப்படி இந்தத் தேவதாரு மரத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுள்ளாயோ, அதேபோன்று இப்பசுவின் காவலனாக நான் இருக்கிறேன். என் உயிரைக் கொடுத்தும் அதைச் செய்து முடிப்பேன். உன் பரிவு உண்மையெனில், நீ என் உடலை உண்டு பசியாறு, இப்பசுவை விட்டுவிடு. இதைத்தவிர நான் வேறு எதையும் உன்னிடம் யாசிப்பதாக இல்லை.’’

திலீபனின் பேச்சைக் கேட்ட அச்சிங்கம், ‘‘சரி.. உன் இஷ்டப்படியே ஆகட்டும். நான் உன்னையே உண்டு மகிழ்கிறேன். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, என்னருகில் வா’’ என்றது.

அரசன் திலீபன், வில்லையும் அம்பறாத்தூளியையும் கழற்றியெறிந்துவிட்டு, முகமலர்ச்சியுடன் வந்து, சிங்கத்தின் முன்னால் தலைகுனிந்து, மண்டியிட்டு நின்று, தன் உடலை அர்ப்பணம் செய்தான். அவன் கண்கள் மூடிக் கிடந்தன.

அடுத்த கணம் சிங்கம் அவன் மீது பாய வேண்டும். ஆனால் திலீபன் தலைமீது தேவர்கள் பூமழை பொழிந்தனர். திகைப்பும் வியப்புமாக அவன் விழிகளைத் திறந்தான். எதிரே சிங்கம் இல்லை. நந்தினி மட்டுமே நின்றிருந்தது. அது வாய்திறந்து, ‘‘திலீப மன்னா! உன் தியாக உணர்வு மெச்சத் தகுந்தது. இங்கே நடந்தது அனைத்தும் உன்னை சோதிக்க நடந்த பரீட்சை. எல்லாமே மாயத்தோற்றம். நான் காமதேனுவின் மகள். வசிஷ்டரின் அருள் எனக்கு எப்போதும் கவசமாக உள்ளது. என்னை எமனும் நெருங்க முடியாது. என்மீது நீ காட்டிய தயை, இரக்கம், உன் குருபக்தி ஆகியவை கண்டு நான் மகிழ்கிறேன். உன் விருப்பத்தைக் கூறு, நான் உனக்கு வரமளிக்கிறேன்’’ என்றது.

நந்தினியிடம் தன் மனக்குறையைக் கூறினான் திலீபன். அப்பசுவும் அவனுக்கு வரம் நல்கியது. அதன்பிறகே அவனுடைய தேவி சுதட்சிணை கருவுற்றாள். உயரிய கீர்த்தி நலங்கள் வந்து வாய்க்கும் ஒரு புனித வேளையில், ரகுவம்ச நாயகனான ரகு பிறந்தான்.

இப்படி எளிதில் எண்ணிப் பார்க்க முடியாத அரிய தியாக வரலாறுகள் நம் பாரததேச அரசர்கள் பெயரால் திரும்பத் திரும்ப உரைக்கப்படுகின்றன. அவ்வளவு ஏன், ஈசனையே நாம் தியாகராஜன் என்று கூறித்தானே போற்றி வணங்குகிறோம்! உலக உயிர்களைக் காக்க ஈசன், கடலில் பொங்கிய ஆலகால விஷத்தைத் தாமே உண்ட வரலாறு கேட்டாலே நம் மெய்சிலிர்க்குமே!

மலைமீது மழை பொழிந்தால், எல்லா நதிகளிலும் வெள்ளம் பெருகுமல்லவா? அதைப்போல மனிதகுலத்தவரின் உள்ளங்களில், காலங்கள் தோறும் பிறர் நலம் பேணும் தியாக சிந்தை மலர வேண்டும், வளர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில்தான் இதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்களை நமது பெரியோர்கள் என்றென்றும் புகழ்ந்து பேசி மகிழ்கின்றனர்.

நன்றி - ஆன்மிகம் ஜனவரி 2012

கருத்துரையிடுக

0 கருத்துகள்