Advertisement

Responsive Advertisement

இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” – நூல் அறிமுகம் - செ. தமிழ்ராஜ்


புத்தக வாசிப்பாளர்கள் யாவரிடமும் தவறாமல் கேட்கப்படும் ஒரு கேள்வி “வால்காவிலிருந்து கங்கை வரை” வாசித்தீர்களா? என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவு இந்த புத்தகம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அபாரமானது. நதிக்கரையோரங்களில் நாகரீகம் வளர்ந்த கதையை, புராண இதிகாச கதைமாந்தர்களின் பெயரையும், காலத்தையும் வைத்து ரஷ்யா நாட்டில் பாயும் வால்கா எனும் நதியிலிருந்து, நாடோடிகளாய் புலம்பெயர்ந்து கங்கைச் சமவெளி வரை, ஆரியர்கள் வந்து சேர்ந்த வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மிகுபுனைவாக, வாசகர்களுக்கு எளிதாக கடத்தப்பட்ட நூலே வால்காவிலிருந்து கங்கை வரை.

கிமு 6000த்தில் இருந்து துவங்கி கிபி 1942 வரை நீள்கிறது அதன் பயணம். 20 கதைகளாக பிரித்து ஒவ்வொரு கதைக்கும், காலம் நிகழ்விடம் மக்கள் கூட்டம் குறித்த விவரணைகளோடு, தாய்வழிச் சமூகத்திலிருந்து பிரிந்து தந்தைவழிச் சமூகமாக மாறி உற்பத்தி, நிலவுடமை, குழுக்கள், நாடுகள், அரசர்கள், அடிமைகள், இஸ்லாமிய ஆங்கிலேயப் படையெடுப்பு என்று காலத்தின் பெருஞ்சித்திரத்தை வரைந்து காட்டியுள்ளார்.

ஆரியர்கள் நாடோடிகளாய் இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து, இங்குள்ள பூர்வகுடிகளை மந்திர, தந்திர மூட நம்பிக்கைகளால், காலத்திற்கும் கட்டுப்பட்டு நிற்கும் வண்ணம், பொய்யும் புராணப் புரட்டுகளையும் இதிகாசங்களையும் எழுதி வைத்து, இன்று வரை மிகப் பெரும் அடிமை கூட்டத்தை வழிநடத்திச் செல்கிறது என்றால் மிகையில்லை.

விஷ்வாமித்திரர் போன்ற கற்பனை பெயர்களும், புத்தர் அசோகர் காளிதாசர் என்ற தத்துவ மேதைகளும் தொட்டெழுதிச் செய்கிறார். இந்திய சுதந்திர போராட்டம், ஆங்கிலேயர்கள், அம்பேத்கர், காந்தி வரை நதியின் நீரோட்டம் போல் நீளுகிறது நாகரிகம் நடந்து வந்த பாதை. ஏராளமான நூல்களை கற்று வால்கா வரை சென்று ஆய்வுகள் பல செய்து இந்நூலை எழுதியுள்ளார்.

எனக்கு விமர்சனமாக தோன்றுவது, ஒரு இனக்குழு நாகரிகம் தேடி நகர்ந்து வந்த வரலாற்றை, பொய்யும் புரட்டுகளால் ஆன புராணங்களை வைத்து எழுதுவது அதன் நம்பகத்தன்மையையும், அறிவியல் பூர்வமற்ற பார்வையும் அதன் உண்மைத்தன்மையை சிதைக்கின்றது. ஆரிய இனக்குழுவை சார்ந்த ஒருவரால் எழுதப்பட்டிருப்பதால், அதன் இன மேன்மை சற்று தூக்கிப் பிடித்து எழுதியிருக்கிறாரோ என்று எண்ணும் படி பல இடங்களில் தோன்றுகிறது.

இந்தியாவைப் பற்றி எழுதிய பல வரலாற்றாசிரியர்கள் வடக்கோடு பின்தங்கி விடுகிறார்கள். தெற்கு பக்கம் ஒரு மனிதக்கூட்டம் இருக்கிறது என்பதைப்பற்றியோ, அதுவும் இந்திய நிலப்பரப்போடு சேர்ந்தது என்பதைப் பற்றியும் எழுத மறுக்கிறார்கள். அந்த துயர நிகழ்வு இந்த புத்தகத்திலும் நிகழ்ந்து இருக்கிறது. இந்நூலாசிரியர் எழுதி அடுத்த புத்தகத்தின் தலைப்பு கூட, சிந்து முதல் கங்கை வரைதான். அது ஏன் வைகை வரை நீண்டு ஓடவில்லை என்ற வருத்தம் எழுகிறது.

வரலாற்றாசிரியர் ஒரு பொது உடமைச் சிந்தனையாளராய் இருப்பதால், வால்காவில் இருந்து வரலாற்றைத் துவங்கி காந்தி வரை அன்றைய மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சித்திருக்கின்றார். இன்றைய நிலைமையில் மறுவாசிப்பில் பல செய்திகளும் மாறுபாட்டுத் தன்மையுடன் விளங்குகிறது. எல்லாம் மாறும் என்ற மார்க்கியப் பார்வையில் இப்புத்தகமும் விவாதத்திற்கு உட்பட்டது. நற்றிணைப் பதிப்பகம் மக்கள் பதிப்பாக யாவரும் வாசிக்க வேண்டி மிக எளிய விலையில் வெளியிட்டு இருப்பது பாராட்டிற்குரியது. மிகவும் அருமையான மொழி நடையில் வாசிக்கச் சுவாரசியமாக மொழிபெயர்த்த சி.எஸ்.தேவநாதன், சிவகாமி நடராஜன் வாழ்த்திற்குரியவர்கள்.

நூலின் விவரங்கள்:
நூல்: வால்காவிலிருந்து கங்கை வரை
ஆசிரியர்: இராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில் சி.எஸ்.தேவநாதன் – சிவகாமி நடராஜன்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்
விலை: ரூ. 150
ஆண்டு 2024

நன்றி - bookday.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்