தமிழனின் வரலாறு அவனே சொல்லிக் கொள்ளாத காரணத்தினால்தான் எதிர்காலத் தமிழர்களுக்கு கிடைக்காமல் போயிற்று. இன்றைக்கு வடபுலத்திலே உள்ள மொகலாய மன்னர்களின் வரலாறு நமக்குத் தெரியும். அங்கேயிருக்கின்ற கட்டிடங்களைப் பார்த்தவுடன் இது பாபருடைய அரண்மனை, அக்பருடைய அரண்மனை என்றெல்லாம் சொல்லுகிறோம். இங்கே அப்படிச் சொல்ல முடியுமா என்றால் முடியாது.
திருமலை நாயக்கர் மன்னர் ஆண்டதைச் சொல்வோம். அவனுடைய கோட்டை எங்கேயிருந்தது என்ற விபரம் தெரியாது.
மனுநீதி சோழன் திருவாரூரை ஆண்டான் என்று சொல்வோம். அவனுடைய கோட்டை எங்கே இருந்தது என்பது பற்றிய விபரம் தெரியாது.
தஞ்சாவூர் கோட்டை தூள் தூளாகிக் கிடக்கிறது. அகழியும், ஒரேயொரு கோபுரமும் தவிர தஞ்சையில் வேறு எதுவும் கிடையாது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் கல் வெட்டுக்கள் இல்லை. நம்முடைய வரலாறுகளை நாம் பதிய வைக்கத் தவறிவிடுகிறோம். அது ஏதோ சுயநலமாக ஆகிவிடும். சுயவிளம்பரமாக ஆகிவிடும் என்று கருதி அதை எழுதாமல், அதை வெளிப்படுத்தாமல் இருந்து விடுகின்ற காரணத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இருக்க வேண்டிய வரலாற்று உண்மைகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. அப்படி மறையாமல் காக்கப்பட வேண்டிய ஒன்று என்ற நிலைமையிலேதான் கல்வெட்டுக்கள் இன்றைக்கும் இருக்கின்றன.
இப்போது சொல்கிறோமே, ஊராட்சிமன்றத் தேர்தல்களை நாம் நடத்துகிறோம் என்றால் அதற்கு அடிப்படை எது என்று கண்டுபிடிக்கிறோம். உத்திர மேரூரிலே இருக்கின்ற கல்வெட்டு - அந்தக் கல்வெட்டுத்தான் தமிழ்நாட்டில் பராந்தகச் சோழன் காலத்தில் ஊராட்சிமன்றத் தேர்தல் எப்படி நடைபெற்றது என்பதை இன்றைக்கும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
ஒழுக்கம் உள்ளவர்கள்தான் தேர்தலிலே நிற்க வேண்டும், வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்தவர்கள்தான் தேர்தலிலே நிற்கவேண்டும். கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. ஒழுக்கம் இல்லாதவர்கள் நிற்க முடியாது. நாணயமில்லாதவர்கள் நிற்க முடியாது என்றெல்லாம் நிபந்தனைகள் போட்டு, அந்த வரிசையிலே யார் தகுதி உடையவர்களோ அவர்கள்தான் தேர்தலில் நிற்பதற்கு அன்றைக்கு அருகதை உடையவர்கள் என்று கூட நம்முடைய பராந்தகச் சோழன் காலத்திலேயே தமிழ்நாட்டிலே தேர்தல் முறை இருந்தது.
அந்தத் தேர்தல் முறையில் ஒரு குடம் வைக்கப்படும். அந்தக் குடத்திற்குள் ஊரிலே உள்ளவர்கள் ஓலையிலே ஒரு பெயரை எழுதி, அந்த ஊருக்கு யாரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒரு பெயரை எழுதிப் போடுவார்கள். அந்த ஓலையை எடுத்துப் பிரித்துப் பார்த்து அந்தப் பெயர்களை எல்லாம் எண்ணி யாருக்கு அதிக வாக்கு கிடைக்கிறதோ அவர்களைத் தலைவர்களாக தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த முறை பராந்தகச் சோழன் காலத்திலேயே தமிழ்நாட்டிலே இருந்தது என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோமென்றால், ஒரே ஒரு கல் வெட்டு இருக்கிறது. உத்திரமேரூரில் இருக்கின்ற ஒரு கல்வெட்டைப் படித்துப் பார்த்து இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நம்முடைய புறநானூறு, அகநானூறு போன்ற நூல்கள் கல்வெட்டாக இல்லாவிட்டாலும்கூட, எழுத்தாக இந்தச் செய்திகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.
எப்படி அவை சொல்லப்பட்டிருக்கின்றன என்றால், ஒரு புலவன் போர்க்களத்தின் வழியாக நடந்து செல்கிறான். செல்லும்போது அந்தப் போர்க்களத்தில் கழுகுகள் அங்கே விழுந்து கிடக்கின்ற ஒரு போர் வீரனின் பிணத்தை தோண்டுகின்றன. தோண்டும் போது வயிற்றைத் தோண்டுகிறது. குடலை எடுக்கிறது. அதைப் புலவன் வர்ணிக்கிறான், போர் வீரனின் பிணத்தைத்தோண்டி, அவனுடைய குடலை அந்தக் கழுகு உருவுவது எப்படி இருக்கிறதென்றால், நம்முடைய ஊர்த்தேர்தல்களில் குடவோலைகள், குடத்திலே போடப்பட்ட ஓலைகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு ஓலையாக வெளியே எடுக்கிறார்களே, அதைப் போல அந்தக் கழுகு அந்த குடலை ஒவ்வொன்றாக எடுக்கிறது என்று அதை உதாரணம் காட்டுகிறான். எப்படி நாம் நம்முடைய சரித்திரங்களையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது? எவ்வளவு கஷ்டப்பட்டு, இலக்கியத்தைத் தேடி, கல்வெட்டைத் தேடி நாம் நம்முடைய பழைய வரலாறுகளையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது?
-உளியின் ஓசை திரைப்படத் துவக்கவிழாவில் பேசியதிலிருந்து.

0 கருத்துகள்