உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் ஒன்றினோடு ஒன்று கலந்து உறவாடிட உறவுமுறைச் சொற்களும், உரிமைவழிச் சொந்தங்களும் உருவாயின. எத்தனை வகையான ரத்தவழிச் சொந்தங்கள் உருவாகிப் பிணைந்து நின்றாலும் 'நட்பு' என்கிற உணர்வுவழி உறவுக்கு ஈடாக உலகில் வேறொன்றும் இதுவரை உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.
ரத்தவழிச் சொந்தங்களும் உறவுமுறைகளும் பிறப்பின்வழியே உருவானவை; இந்தவகை உறவுகள் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவை; விதிவழியே உருவானவை. ஆனால் ரத்தவழிச் சொந்தமற்ற மனிதர்களுக்கிடையே உருவாகும் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், பெருகிவரும் பாச உணர்வைப் பரிமாறிக்கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையைப் புலப்படுத்திக் கொள்ளவும் 'நட்பு' என்கிற புதிய உறவு புனித உணர்வாய்ப் போற்றப்படுகிறது.
எத்தனை விதமான உறவுகள் இயல்பாகவே அமைந்து சூழ்ந்து நின்றாலும், உருவாக்கி உறவுகொள்ளும் சிறப்புத் தன்மை வாய்ந்த நட்பை வெல்வதற்கு மற்றெவற்றாலும் முடியாது. ஏனெனில், நாம் செய்கிற எந்தவொரு செயலாக இருந்தாலும், அது உறவுகளால் சூழ்ந்து நிற்பதைவிட நட்புகளால் சூழ்ந்து நிற்பதே பெரு வெற்றிகளைக் குவிக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. திருவள்ளுவர் தமது திருக்குறளை 133 அதிகாரங்களாக வகுத்து ஆகச்சிறந்த பொருண்மைகளுக்கு அதிகாரங்களைப் பகுத்துக் கொடுத்திருந்தாலும், 'நட்பு' என்பதற்கு மட்டும் ஐந்து விதமான அதிகாரங்களைத் தாராளமாக வழங்கியுள்ளார். 'நட்பு', நட்பாராய்தல்','தீ நட்பு', கூடா நட்பு', 'பழைமை' என்பவை அவ்வதிகாரங்கள்.
மனித உறவாடல்களில் ஆகச் சிறந்த உறவாடல் 'நட்பு' மட்டுமே என்பதால், அதனை ஆராய்ந்து தெளிந்து, தீயவற்றையும், கூடாதவற்றையும் விலக்கி, கொள்வனவற்றை ஏற்று, நட்பைக் கொள்ள வேண்டும் என்பதற்காக வள்ளுவர் ஐந்து அதிகாரங்களை மனித குலத்திற்கு வழங்கி வழிகாட்டி உள்ளார்.
நல்லவர்களோடு கொள்கிற நட்பு வளர்பிறை போல வளருமாம்; தீயவர்களோடு கொள்கிற நட்பு, தேய்பிறை போலத் தேய்ந்து போகுமாம். நல்ல நண்பர்களோடு நட்புக்கொண்டு பழகுவதும், நல்ல இலக்கிய நூல்களை நாள்தோறும் பயில்வதும் ஒருதன்மையான நன்மை பயப்பவை ஆகும். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்கப் புதிது புதிதான சிந்தனையோட்டங்களும் நலம் நலமான நயமான திறங்களும் வெளிப்பட்டுத் தோன்றும். அவை நமது வாழ்வியல் போக்குகளைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கும் தன்மையைத் தரும். அதைப்போல நல்ல பண்பு நலனும் அன்பு நயமும் உடைய நண்பர்களோடு பழகத் தொடங்கினால், அந்த நட்பும், தடைகளாலும் தோல்விகளாலும் துவண்டு நிற்கும் தருணங்களிலெல்லாம் நம்மைத் தூக்கி நிறுத்தும் ஊக்கிகளாகச் செயல்படும்.
உலகியலில், மனித உறவுகளுக்கென சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. தாய், தந்தை பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உரிமைகள், சகோதர- சகோதரிகள், அத்தை-மாமா, மாமனார்-மாமியார், அங்காளி பங்காளிகள், மாமன்-மைத்துனர்கள் இவர்களுக்கிடையேயுள்ள உரிமைகளும் கடமைகளும்… இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்த உறவுகளுக்கு இடையேயுள்ள உரிமைகளும் கடமைகளும் விதிகளுக்கு உட்பட்டவை; தவறினால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படும் சமூகத்தன்மை வாய்ந்தவையும்கூட.
ஆனால் நட்பிற்கு எந்த வரையறுக்கப்பட்ட உரிமையும் கிடையாது; கட்டாயப்படுத்தப்பட்ட கடமையும் கிடையாது. மகிழ்ச்சித் தருணங்களில் கொண்டாடி மகிழ்வதற்கு மட்டுமல்ல நட்பு; வாழ்நெறி தவறிப் பிழையான பாதையில் செல்லத் தொடங்கும்போது, இடித்துக்கூறித் திருத்தும் தன்மை வாய்ந்தது நட்பு. நாள்தோறும் நேரில் சந்தித்து மணிக்கணக்கில் அரட்டையடித்து மகிழ்ந்துபேசி முகத்தளவில் சிரித்துப், பிரிந்து போவதல்ல நட்பு; சந்தித்தாலும் சந்திக்காவிட்டாலும் அகத்தளவில் அடைகாத்து வளர்க்கப்படுவதே இனிய நட்பு.
நண்பர்கள் என்றால் அடிக்கடி கூடி மகிழ்வதும் உண்டு மகிழ்வதும் மட்டுமே நினைவுக்கு வந்தால் அவர்கள் நட்பைப் பொழுதைக் கழிப்பதற்கான கருவியாக மட்டுமே கருதுகிறார்கள் என்று பொருள். நட்பைத் திருவள்ளுவர், இருவகைப்படுத்திப் பெருமைப் படுத்துகிறார்; 'அல்லல் அழிப்பதாம் நட்பு', 'இடுக்கண் களைவதாம் நட்பு' என்கிறார்.
ஒரு நண்பனுக்குத் துன்பம் என ஒன்று வந்தவுடன் ஓடிச்சென்று, அவனுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நீக்கி, அந்தத் தீமையிலிருந்து வெளியேறும் வழிமுறைகளைக்கூறி, தேவைப்பட்டால் அவனது துன்பத்தில் பங்கு போட்டுத் தாங்கிக் கொள்வதுதான் நட்பாம்.
"அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு"
ஒரு நண்பன் துன்பத்தில் தவிக்கும்போது, அவன் உதவிசெய் என்று கேட்காமலேயே, அவனையுமறியாமலேயே ஓடிச்சென்று உதவி செய்து துன்பத்தைத் தீர்ப்பதுதான் நட்பாம். எப்படியென்றால், உடுத்தியிருக்கிற ஆடை நழுவும்போது, நமது கைகள், நம்மையுமறியாமலேயே அனிச்சையாக ஓடிச்சென்று ஆடையைச் சரி செய்வதுபோலத் துயரப்படும் நண்பனுக்கு உதவ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நட்பு, விளம்பரங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு".
நட்பின் மேன்மையை விளக்கும், 'கிம்' மற்றும் 'டிம்' என்கிற இரண்டு மேனாட்டு நண்பர்களின் கதை மிகவும் உருக்கமானது.
-தொடரும்...
நன்றி மாலைமலர் 22-09-2024

0 கருத்துகள்