Advertisement

Responsive Advertisement

ரஷ்யாவின் "புரேவெஸ்த்னிக்" - உலகைச் சுற்றும் ஆயுதமா? உலகை அச்சுறுத்தும் அபாயமா?

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த சோதனைகளுக்குப் பிறகு, ரஷ்யா தனது அணுசக்தியால் இயங்கும், அணு வெடிபொருள் ஏந்தக்கூடிய நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணையான "புரேவெஸ்த்னிக்" (Burevestnik) – தற்போது ரஷ்ய இராணுவத்தில் சேரும் நிலைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மேற்குலக நாடுகளின் மீது ரஷ்யா விடுக்கும் ஒரு வலுவான அணு ஆயுத எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


கிரெம்லின் வெளியிட்ட வீடியோ அறிக்கையின்படி, ரஷ்ய இராணுவத் தலைமைத் தளபதி வலெரி ஜெரசிமோவ், புரேவெஸ்த்னிக் ஏவுகணை ஒரு சோதனையின்போது 14,000 கிலோமீட்டர் தூரம் பறந்ததாகவும், தொடர்ந்து 15 மணி நேரம் முழுவதுமாக அணுசக்தியால் இயங்கியதாகவும் புதினிடம் தெரிவித்தார். "இது இன்னும் அதன் முழு திறன் அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதின் இந்த ஏவுகணையின் திறனைப் பற்றிப் பெருமிதம் தெரிவித்தபோது, "இது தற்போதைய அல்லது எதிர்கால எந்த ஏவுகணை பாதுகாப்பையும் தாண்டி செல்லும் திறன் கொண்டது," எனக் குறிப்பிட்டார்.


புரேவெஸ்த்னிக் என்பது ஒரு சிறிய அணு உலையைக் (miniature nuclear reactor) கொண்ட அணுசக்தியால் இயங்கும் க்ரூஸ் ஏவுகணையாகும்.

வழக்கமான ஏவுகணைகள் ஜெட் எரிபொருளைப் பயன்படுத்தி வானில் பறக்கும் ஆனால் புரேவெஸ்த்னிக் அதன் உள்ளே சேர்க்கப்பட்டுள்ள அணு உலையின் வெப்பத்தைப் பயன்படுத்தி காற்றை வலுவாக வெளியேற்றி வானில் பறக்கும் சக்தியைப் பெறுகிறது.

இதன் காரணமாக, எரிபொருள் முடிவடையாமல் மிக நீண்ட நேரம் பறக்க முடிகிறது. இதன் தாக்குதல் தூரம் கோட்பாட்டளவில் "அளவில்லா" (Unlimited Range) எனக் கருதப்படுகிறது, அதாவது இது உலகத்தைச் சுற்றி எந்தவொரு நாட்டையும் அடையக்கூடியது என புதின் 2018ஆம் ஆண்டே அறிவித்திருந்தார்.


இது சப்-சோனிக் (Subsonic) வேகத்தில் (சுமார் 800–900 km/h) பயணிக்கிறது. இந்தத் தொழிர்நுட்ப வரிசையில் இது Mach 1 தொழில்நுட்பம். செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டலுடன், எதிரி ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் சிக்கலான பறக்கும் பாதையைக் கொண்டுள்ளது. யார் கண்ணுக்கும் படாமல் இலக்கை தாக்கக்கூடியது.

புரேவெஸ்த்னிக் தொழில்நுட்பம் குறித்து மேற்குலக நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்பிவரும் நிலையில், இதன் அபாயம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது 2019 ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யாவின் நெனோக்சா (Nyonoksa) கடற்படை சோதனை மையத்தில் நடைபெற்ற புரேவெஸ்த்னிக் சோதனையின்போது ஏவுகணை வெடித்தது. இந்த விபத்தில் ஐந்து அணுவியல் பொறியாளர்கள் மற்றும் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர். அருகிலுள்ள சேவரோட்வின்ஸ்க் (Severodvinsk) நகரத்தில் அணு கதிர்வீச்சு அளவு தற்காலிகமாக உயர்ந்தது. அணு உலை கொண்டது என்பதால், கடலில் அல்லது நிலத்தில் ஏவுகணை விழுந்தாலும் கதிர்வீச்சு வெளியிடும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யா தனது புதிய அணு திறன்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பானது, அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு எதிரான வலுவான சமிக்ஞை எனப் பார்க்கப்படுகிறது. புரேவெஸ்த்னிக் வெற்றிகரமாக அதன் இராணுவ சேவையில் சேர்ந்தால், ரஷ்யா உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறனைப் பெறும், மேலும் எந்த நாட்டின் பாதுகாப்பு முறைமைகளும் பயனற்றதாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

தனியாக அணுகுண்டு எதுவும் இதனுடன் இணைக்கத் தேவையில்லை இந்த ஏவுகணை ஒன்றே போதும். 

சென்ற வாரம் ஆர்க்டிக் கடற்கரை ஒட்டிய இடங்களிலிருந்த அனைவரையும் அப்புறப்படுத்தியது, அங்கே சோதனை நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிபர் புதின் தலைமையில் சமீபத்தில் ரஷ்யாவின் Nuclear Triad முப்படைகளின் ஒருங்கிணைந்த பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில், "நாங்கள் இன்னும் அணு ஆற்றல் மிக்க சக்தி, உங்களனைவரையும் விட சிறந்தவர்கள்" என்ற செய்தியை ரஷ்யா இதன் மூலம் உலகிற்கு அழுத்தம் திருத்தமாக அனுப்பியுள்ளது.


தற்போது நமது இந்திய இராணுவம் தயாரிப்பில் உள்ள பிரம்மோஸ் II இதனைவிட சிறப்பு, hypersonic, Mach 8 தொழில்நுட்பம். இதன் பாயும் வேகம் ஒலியின் வேகத்தைவிட 8 மடங்கு அதிகம். ஆனால் அதனால் தொடர்ந்து பயணிக்க முடியாது ஏனென்றால் எரிபொருளை நம்பி அதன் இயக்கம் உள்ளதால், ஆனால் ரஷ்யாவின் இந்த ஏவுகணை வேகம் குறைவு ஆனால் சென்று சேரும் தொலைவு கணக்கிட முடியாததாக உள்ளது.

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்