முன்பெல்லாம் நமக்கு உணவு சாப்பிட வேண்டுமெனில் நாம் விரும்பிய உணவகங்களை தேர்ந்தெடுத்து அங்கு சென்று குடும்பத்தினருடன் ரம்யமாக பொழுதைப் போக்கி விரும்பிய உணவு வகைகளை சாப்பிட்டு வந்தோம். கால ஓட்டத்தில் மக்கள் எண்ணங்களில் ஏற்பட்ட மாற்றத்தினாலும், தொழில்நுட்ப புரட்சிகளாலும் குயிக்காமர்ஸ் - QCommerce எனப்படுகின்ற துறை உருவாக்கப்பட்டது. கடந்த 2008ல் சிறந்த உணவகங்களையும், உணவகங்களில் கிடைக்கும் மெனுக்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் ZOMATO. 2014ல் ஸ்விக்கி (swiggy) வாடிக்கையாளர் விரும்பும் உணவுகளை அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று சேர்க்கும் டெலிவரி முறையை அறிமுகப்படுத்தியது.
இதில் கண்ட அபரிமிதமான வளர்ச்சியை பார்த்து ZOMATO நிறுவனமும் இந்த சந்தையில் காலடி வைத்தது. கிடைக்கும் உணவு பொருட்களை நமது இல்லத்தில் வீட்டின் வரவேற்பு அறையில் தொலைக்காட்சி முன்பு நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிட முடியும் என்பதை இந்த QCommerce தளங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. உணவு பழக்கத்தில் ஒரு பெரிய மாற்றத்தையே இத்தகைய குவிக்காமர்ஸ் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
பொதுவாக நுகர்வு கலாச்சாரம் அதிகமாக இருக்கின்ற இந்த சந்தைச் சூழலில் பொருட்கள் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டு தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பது என்பது பெருகி வருகிறது. இதே நிலைதான் உணவுச் சந்தையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நமக்கு பிடித்த உணவை உண்பது என்பது மாறி விட ட்ரெண்டிங்காக உள்ள உணவை உண்பது என்பதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றப்பட்டுள்ளது. உள்ளபடியே நமது ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவாக இருந்தாலும் அவற்றை நம் உணர்வுகளுக்கு கடத்தி கட்டுப்பாடு அற்ற உணவு பழக்கத்தில் நாம் சிக்கி கொள்ள இந்த தளங்களும் ஒரு காரணம் என்றே நான் கருதுகிறேன்.
கடந்த வருடங்களில் இந்த நிறுவனங்களால் டெலிவரி செய்யப்பட்டுள்ள உணவு பண்டங்களை பட்டியலிட்டு பார்த்தாலே இந்த உண்மை புரியும். இந்தியாவில் அதிக ட்ரெண்டிங் ஆகவும் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டு மக்கள் வாங்கி தின்னு தீர்க்கும் உணவாகவும் பிரியாணி விளங்கியுள்ளது.
ஆரம்பத்தில் பிளாட்பார்ம் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லாமல் இலவசமாகவே உணவு பொருட்களை விநியோகம் செய்துவிட்டு நம்மை இத்தகைய ஒரு சூழலுக்கு ஆட்படுத்தி விட்டு ஒரு பழக்கமாக இதனை நாம் மாற்றி கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் பல கட்டணங்களை புகுத்தியுள்ளன. இத்தகைய ஒரு நுகர்வு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி விட்ட பிறகு கட்டண உயர்வு என்பதெல்லாம் நம்மை பாதித்ததாக தெரியவில்லை. ஆரம்பத்தில் வணிகத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்கள் தற்பொழுது தங்கள் வணிகத்தை பல மடங்காக பெருக்கி விட்டன. மேலும் இலாபத்திலும் தங்கள் தலையை நுழைக்க ஆரம்பித்து விட்டன. இது உண்மையில் இந்தத் துறை வளர்ச்சி பெறுவதை காட்டுகிறது.
தற்போது அடுத்த நடவடிக்கையாக வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பால் உள்ளிட்ட மளிகை சாமான் அத்தியாவசிய பொருட்களையும் டெலிவரி செய்வதற்காக இந்த QCommerce நிறுவனங்கள் இறங்கி உள்ளன. BLINKIT, ZEPTO, INSTAMART, BIGBASKET, என இப்பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது சந்தையில் உள்ள வியாபார வாய்ப்புகளை எதிர் நோக்கிதான். மக்களுக்கு தேவையான நுகர்வோர் துறையில் கொடி கட்டி பறக்கும் ITC போன்ற நிறுவனங்கள் கூட இத்துறையை நோக்கி தனது கவனத்தை திருப்பி உள்ளது இத்துறைக்கு உள்ள நல்ல எதிர்காலத்தை குறிப்பிடுகிறது.
இத்துறையில் பணிபுரியும் பல ஊழியர்களுக்கு நிறைவான நிரந்தர ஊதியம் என்பதெல்லாம் உறுதி செய்யப்படவில்லை. அதிக அளவில் டெலிவரி செய்பவர்களுக்கே அதிக ஊதியம் வழங்கப்படும் என்பதால் பலரும் பல மணி நேரங்களை கடந்தும் வேலை செய்ய வேண்டியதும் இங்கு மிக சாதாரணமாக மாறி விட்டது. உயர்ந்து வரும் கட்டணங்களும் வாடிக்கையாளர்களுக்கும் கவலை அளிக்கும் விஷயமே. மேலும் பல ரெஸ்டாரண்டுகள் தள்ளுபடி விலையில் உணவுப் பொருட்களை தரச் சொல்லி இந்த நிறுவனங்கள் போட்டியின் காரணமாக நிர்பந்தப்படுத்துவதால் உணவுப் பொருட்களின் தரம் குறைந்து போவதற்கும் சாத்தியம் ஏற்படுகிறது.
படித்த மற்றும் படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கும் பல வயது உடையவர்களுக்கும் உடனடி வேலைவாய்ப்பை தரும் துறையாக இந்த துறை மாறி உள்ளது. பல இல்லத்தரசிகள் தங்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக்கொள்ள வீட்டில் இருந்தபடியே கிளவுட் கிட்சன் முறையில் தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும் என்பதையும் இந்த நிறுவனங்களே நமக்கு உணர்த்தியுள்ளன. மேலும் டெலிவரி செய்யும் ஊழியர்களாக பல மகளிர் பணி புரிவது நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதுவும் ஒரு வரவேற்கத் தகுந்த அம்சமாகும். சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை கட்டமைப்பதில் உணவுக்கும் ஒரு பெரும் பங்கு இருந்தது அதை உடைத்து அனைத்து உணவுகளும் அனைவருக்குமானது என்பதை உறுதி செய்ததில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு நாம் புறந்தள்ள முடியாது.
இத்துறையை நம்பி இதில் பணி புரியும் பல ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மற்றும் குறைவான பணி நேரம் என்பதை எல்லாம் உறுதி செய்யும் வகையில் அரசு இதில் கவனத்தை செலுத்த வேண்டும். 64,000 கோடிக்கு மேல் பணம் புழங்கும் இந்த சந்தை நிச்சயம் லட்சக்கணக்கான கோடிகளை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே இந்த சந்தையில் கம்பெனிகளோடு இணைகின்ற வணிகர்களையும் இதில் பணி புரியும் ஊழியர்களையும் பாதுகாக்கும் வகையில் அரசு இவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா.
A.கேசவன்,
DO (PLI) காஞ்சிபுரம்
Mobile : 9894473600


1 கருத்துகள்
நேரமின்மை காரணமாக, மக்கள் வாங்கும் முன் பொருட்களை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் குறைந்து விட்டது. இதனால் அத்தியாவசியம் மற்றும் அநாவசியம் என்ற வேறுபாடு மங்கிவிட்டது. இதைச் சுறுசுறுப்பாகப் பயன்படுத்தி, இ-காமர்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகள் வேகமான வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் இதன் விளைவாக நடுத்தர மக்களின் சேமிப்பு பழக்கம் குறைந்து, செலவுகள் கட்டுப்பாட்டை இழந்துள்ளன. இதுவே குடும்ப நிதி நிலைமையும் நீண்டகால பொருளாதார பாதுகாப்பையும் பாதிக்கிறது.
பதிலளிநீக்கு