Advertisement

Responsive Advertisement

பீஹாரின் வால்மீகி புலிகள் சரணாலயம்: அறியப்படாத காட்டுப் பொக்கிஷம்


இந்தியா–நேபாள எல்லையில், பீஹாரின் வடமேற்கு மூலையில் புதைந்து கிடக்கும் இயற்கை அதிசயம் தான் வால்மீகி புலிகள் சரணாலயம் (Valmiki Tiger Reserve). இது மாநிலத்தின் ஒரேயொரு புலிகள் சரணாலயம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் குறைவாக ஆராயப்பட்ட மற்றும் அதிக பல்லுயிர் வளம் கொண்ட காட்டுப் பகுதிகளில் ஒன்றும் ஆகும்.

சுமார் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள இச்சரணாலயம், இமயமலை மற்றும் தேராய் (Terai) பிராந்தியங்களின் சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதால் தனித்துவம் பெறுகிறது. காடுகள், ஆறுகள், மலை அடிவாரங்கள் மற்றும் புல்வெளிகள் எனப் பல்வேறு நில அமைப்புகள் இங்கு ஒருங்கே அமைந்துள்ளன.


புலிகளின் வழித்தடம்:
நேபாளத்தின் புகழ் பெற்ற சித்வன் தேசியப் பூங்கா மற்றும் பர்சா வனவிலங்கு சரணாலயத்துடன் வால்மீகி சரணாலயம் இணைந்திருப்பதால், இது புலிகளின் இடம்பெயர்ச்சிக்கு ஒரு முக்கிய வழித்தடமாகச் செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 50-க்கும் மேற்பட்ட புலிகள் பதிவாகியுள்ளன.

இங்கு காணப்படும் சோமேஸ்வர் மலைத் தொடர்கள், ஈரமான இலைபடர்ந்திருக்கும் காடுகள் (Moist Deciduous Forests), ஆற்றுப் படுகைகள் ஆகியவை வனவிலங்குகள் சுதந்திரமாக வாழ ஏற்ற சூழலை வழங்குகின்றன.


புலிகள் தவிர, இங்கு யானைகள், கரடிகள், லங்கூர் மற்றும் பல சிறு விலங்கினங்களையும் காணலாம். மேலும், 220-க்கும் மேற்பட்ட வகைப் பறவைகளின் இருப்பிடமாகவும் உள்ளது.

காந்தக் நதியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில், சிலசமயம் நேபாளத்தில் இருந்து காண்டாமிருகங்கள்கூட வால்மீகி பகுதிக்கு வருவது இங்குள்ள இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்றாகும்.

வனவிலங்குகளைக் காண அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சபாரி ஏற்பாடு செய்யப்படுகிறது. புலிகளைப் பார்க்க அதிகாலை நேரம் சிறந்தது.

வால்க்ரீப்பர், ரெட் ஹெடட் ட்ரோகன், ரெட்-பில்ட் ப்ளூ மேக்பை போன்ற இமயமலை மற்றும் தேராய் பிராந்தியங்களின் அரிய வகைப் பறவைகளை இங்கு பார்க்கலாம்.

இங்குள்ள தாரு பழங்குடியினர் சுற்றுலா மற்றும் வனப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகின்றனர். அவர்களின் தனித்துவமான வாழ்க்கைமுறையையும், கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பு.


சோமேஸ்வர் மலை உச்சிகளில் இருந்து சரணாலயத்தின் விரிந்த காட்டு காட்சிகளை ரசிக்க முடியும்.

சுற்றுலாப் பயணிகள் அக்டோபர் முதல் மே மாதம் வரை வால்மீகி சரணாலயத்திற்கு வருகை தரலாம்.

சிறந்த காலம் நவம்பர் முதல் மார்ச் வரை – குளிர்ச்சியான காலநிலை, குறைவான பசுமையால் விலங்குகள் அதிக அளவில் தெரியும்.

தவிர்க்க வேண்டிய காலம் - மழைக்காலம் (ஜூலை – செப்டம்பர்) – வெள்ளப்பெருக்கு மற்றும் சேறு நிறைந்த பாதைகளால் பயணம் சிரமமாகும்.


தங்குமிட வசதிகள்: வனத்துறை பராமரிக்கும் கானவுலி, மங்குராஹா, கோபர்தானா, வால்மீகிநகர் ஆகிய பகுதிகளில் வன ஓய்விடங்கள் உள்ளன. இது தவிர, சுற்றுப்புறங்களில் எகோ-லாஜ்கள், அரசு காடேஜ்கள் மற்றும் ஹோம் ஸ்டே வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கின்றன.

அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்
வால்மீகி சரணாலயத்தின் சுற்றுவட்டாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஆன்மீக இடங்கள் உள்ளன:

வால்மீகிநகர் அணை: காந்தக் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த அணையானது, ஒரு அழகான காட்சித் தளமாகும்.


லௌரியா நந்தங்கர் ஸ்தூபி: மௌரியப் பேரரசர் அசோகரின் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பௌத்த வரலாற்றைக் குறிக்கும் இடம்.

பிதிஹர்வா காந்தி ஆசிரமம்: இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு சின்னம்.

சோமேஸ்வர் கோவில்: ஆன்மீக அமைதியுடன், மலைப்பாங்கான காட்சிகளையும் வழங்குகிறது.

நேபாளத்தின் சித்வன் தேசியப் பூங்கா: காட்டுப் பயணத்தை விரிவுபடுத்த விரும்பினால், நேபாளத்தின் சித்வன் பூங்காவிற்குச் செல்லலாம்.

வால்மீகியை அடைவது எப்படி?

விமானம்: அருகில் உள்ள விமான நிலையங்கள் கோரக்பூர் (150–190 கி.மீ) மற்றும் பாட்னா (270–290 கி.மீ).

ரயில்: அருகிலுள்ள ரயில் நிலையங்கள் நர்கட்டியாகஞ்ச், பகஹா, வால்மீகிநகர் ரோடு.

சாலை: பீஹாரின் முக்கிய நகரங்களான பெட்டியா மற்றும் பகஹா வழியாக சாலை மார்க்கமாக எளிதாக வால்மீகியை அடையலாம். பாட்னாவிலிருந்து சாலைப் பயணம் சுமார் 6 முதல் 8 மணி நேரம் ஆகும்.

வால்மீகி புலிகள் சரணாலயம், நகர்ப்புற பரபரப்பில் இருந்து விலகி, இந்தியாவின் வன உயிரின மரபையும், தாரு பழங்குடியினரின் பண்பாட்டுச் செல்வத்தையும் ஒருங்கே அனுபவிக்கக் கூடிய ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்