பக்தர்கள் கோயில்கள் கட்டி, அவற்றில் உன்னை பிரதிஷ்டை செய்வார்கள். உனக்கு துர்க்கா, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்னிகா, மாயா, நாராயணி, ஈசனா, சாரதா, அம்பிகா என்ற பெயர்கள் உண்டாகும். உன்னை வழிபடும் மக்களுக்கு எல்லா விதமான செல்வங்களையும் கொடுப்பவளாக இருப்பாய். தூபம், தீபம் மற்றும் பல வகையான உபசாரங்கள் செய்து உன்னை பூஜிப்பார்கள்.
ஒரு வயிற்றில் இருந்து மற்றொரு வயிற்றில் ஆகர்ஷிக்கப்படுவதால் அந்தக் குழந்தை சங்கர்ஷணன் என்றும், மிகுந்த பலசாலியானதால் பலபத்ரன் என்றும், மக்களை மகிழச் செய்வதால் ராமன் என்றும் பெயர் பெறும்! போ! சொன்னதைச் செய்!’’ என்று உத்தரவிட்டார்.
யோகமாயை அவ்வாறே செய்தாள். ‘‘தேவகியின் ஏழாவது கர்ப்பம் தோன்றி மறைந்து விட்டது!’’ என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. நிலையான ஆனந்த வடிவனான ஸ்வாமி, இவ்வாறு தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் குழந்தையாக வடிவம் கொண்டார்.
தங்களுக்காகத் தேவகியின் கர்ப்பத்தில் வாசம் செய்யும் ஸ்வாமியை தரிசிக்க தேவர்கள் அனைவரும், கம்சனின் சிறைச்சாலைக்கு வந்தனர். ஸ்வாமியைத் துதித்தார்கள்.
இந்த இடத்தில் நாராயண பட்டத்திரி, நாராயணீயத்தில் அற்புதமான வேண்டுகோள் ஒன்றை ஸ்வாமியிடம் சமர்ப்பிக்கிறார்.
பகவான் நாராயணனின் அவதார லீலைகளை பக்தி மயமாக வர்ணித்து, நேரடியாக குருவாயூரப்பனின் ஒப்புதல் பெற்ற ஒப்பற்ற நூல் நாராயணீயம். தனது நோய் நீங்குவதற்காக நாராயண பட்டத்திரி எழுதிய இந்த நூல் அவரது நோயை நீக்கியதுடன், இதைப் பாராயணம் செய்யும் பலரது நோய்களையும் தீர்த்து வைப்பது அனுபவபூர்வமான உண்மை.
இதோ, பட்டத்திரியே தேவகியின் வயிற்றில் இருந்த கண்ணனிடம் வேண்டுகிறார்.
‘குருவாயூரப்பா! எங்கும் நிறைந்திருக்கும் தாங்கள் தேவகியின் கர்ப்பத்தில் நுழைந்த மாத்திரத்தில் தேவர்கள் அனைவரும் கம்சனின் சிறைச்சாலையைத் தேடிவந்து தங்களைத் துதித்தார்கள் அல்லவா? அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான தாங்கள் எனது வியாதிக் கூட்டத்தை நீக்குங்கள். மேலும் தேவகி, தங்களைத் தன் கர்ப்பத்தில் தரித்தாள். (அதுபோல) நான் தங்களை என் இதயத்திலே தரிசிக்க வேண்டும். அதற்குத் தேவை, அசையாத பக்தி. அதையும் தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’ என வேண்டுகிறார். அந்த வேண்டுதலை குருவாயூரப்பன் நிறைவேற்றியது அனைவருக்கும் தெரியும்.
வாருங்கள்! கண்ணனைத் தன் வயிற்றில் சுமக்கும் பாக்கியம் பெற்ற தேவகியிடம் போவோம்.
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

0 கருத்துகள்