அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒப்புதல் அளித்துள்ளார். ஹமாஸ் இதை ஏற்று, மீதமுள்ள சிறைபிடித்த இஸ்ரேலியர்களை விடுவிக்க சம்மதித்துள்ளது. ஆனால், சில அம்சங்கள் தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட 20 அம்ச திட்ட விவரங்கள் பின்வருமாறு:
- காசா பயங்கரவாதம் இல்லாத, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காத பகுதியான “தீவிரவாதமற்ற மண்டலம்” ஆகும்.
- காசா மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்த துயரங்களை முடிவுக்கு கொண்டு வந்து, அப்பகுதி மறுசீரமைக்கப்படும்.
- இரு தரப்பும் ஒப்புக்கொண்டவுடன், போர் உடனடியாக நிறுத்தப்படும். இஸ்ரேல் படைகள் ஒப்பந்தப் பகுதிக்குத் திரும்பும் வரை அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.
- ஒப்புதல் அளித்த 72 மணி நேரத்திற்குள் அனைத்து சிறைபிடிக்கப்பட்டவர்கள் (உயிருடன் மற்றும் இறந்தவர்கள்) திருப்பி அனுப்பப்படுவார்கள்.
- அனைத்து சிறைபிடிக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்ட பின், இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 7 அக்டோபர் 2023-க்குப் பின் கைதான 1,700 காசா மக்களை (பெண்கள், குழந்தைகள் உட்பட) விடுவிக்கும். ஒவ்வொரு இஸ்ரேலியருக்குப் பதிலாக 15 காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.
- அமைதியான வாழ்வை உறுதிப்படுத்தி, ஆயுதங்களை கைவிடும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பான வழி ஏற்பாடு செய்யப்படும்.
- ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், மனிதாபிமான உதவிகள் உடனடியாக காசா பகுதிக்குள் அனுப்பப்படும். குடிநீர், மின்சாரம், மருத்துவமனைகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்படும்.
- ஐ.நா., ரெட் கிரசண்ட் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் வழியாக உதவிகள் எந்தத் தடை இல்லாமல் வழங்கப்படும். ரஃபா எல்லைச்சாவடி திறக்கப்படும்.
- காசா, தற்காலிகமாக அரசியல் சார்பற்ற தொழில்நுட்ப நிபுணர் குழுவின் கீழ் நிர்வகிக்கப்படும். இதற்கான மேற்பார்வை புதிய சர்வதேச அமைப்பு “போர்டு ஆஃப் பீஸ்” மூலம் நடைபெறும். இதன் தலைவராக டொனால்ட் டிரம்ப் இருப்பார். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் உட்பட பிற தலைவர்களும் இடம்பெறுவர்.
- காசா மறுசீரமைப்புக்கான டிரம்ப் பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்படும். வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நகர்ப்புற முன்னேற்றம் செய்யப்படும்.
- சிறப்பு பொருளாதார மண்டலம் (Special Economic Zone) உருவாக்கப்படும்.
- யாரும் காசாவை விட்டு செல்லக் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள். செல்ல விரும்புவோருக்கு சுதந்திரமாக அனுமதி வழங்கப்படும்.
- ஹமாஸ் மற்றும் பிற அமைப்புகள் இனி காசா நிர்வாகத்தில் பங்கேற்க முடியாது. அனைத்து சுரங்கங்கள், ஆயுத உற்பத்தி மையங்கள் அழிக்கப்படும். சர்வதேச கண்காணிப்பின் கீழ் ஆயுத ஒப்படைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- பிராந்திய நாடுகள், ஹமாஸ் மற்றும் பிற அமைப்புகள் ஒப்பந்த நிபந்தனைகளை பின்பற்றுவதை உறுதி செய்வார்கள்.
- சர்வதேச நிலைநிறுத்தப் படை (ISF) காசாவில் நிறுத்தப்படும். இது புதிய பாலஸ்தீன போலீசாருக்கு பயிற்சி அளிக்கும். எல்லை பாதுகாப்பில் இஸ்ரேல், எகிப்துடன் இணைந்து செயல்படும்.
- இஸ்ரேல் காசாவை கைப்பற்றாது அல்லது இணைத்துக்கொள்ளாது. ISF கட்டுப்பாடு பெற்ற பின், இஸ்ரேல் படைகள் படிப்படியாக பின்வாங்கும்.
- ஹமாஸ் இந்தத் திட்டத்தை தாமதப்படுத்தினாலும் அல்லது நிராகரித்தாலும், IDF – ISF கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் உதவிகள் முன்னெடுக்கப்படும்.
- பல் மதத்தவர்களுக்கிடையேயான உரையாடல் செயல்முறை தொடங்கப்படும், பரஸ்பர அமைதியான வாழ்வு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில்.
- காசா மறுசீரமைப்பு வெற்றிகரமாக நடைபெறும் போது, பாலஸ்தீனர்களின் சுயாட்சி மற்றும் மாநில அந்தஸ்திற்கான பாதை உருவாகும்.
- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துடன் இணைந்து அமைதியான, வளமான எதிர்காலத்திற்கான அரசியல் உரையாடலை ஆரம்பிக்கும்.
இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே சொன்னது இதுதான்: ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் குலைக்கப்படாதபோது உண்மையான பேச்சுவார்த்தை நடத்த முடியாது. பொது மக்களின் உயிர் மற்றும் நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை முன்னுரிமையாகக் கொண்டு, தீவிரவாதிகளின் ஆயுதங்களை அகற்றி, பொது மக்களின் அமைதிக்காக தேவையான வசதிகள் ஏற்படுத்துவது என இந்த பேச்சுவார்த்தை மூலம் நடந்து அங்கே அமைதி திரும்பினால் நல்லது. டிரம்ப் முன்மொழிந்த திட்டம் இதுபோன்ற ஒரு பரிமாணத்தை சொல்வதாகத் தெரிகிறது; இதன் மூலம் தற்காலிக அமைதி மற்றும் காசாவின் மறுசீரமைப்புக்கு வழி உருவாகலாம். இந்த முயற்சிக்கு வெற்றி அடைய வாழ்த்துகள். உலகில் நடக்கும் அனைத்து போர்களையும் நிறுத்தியதாக சொல்லிக் கொள்ளும் டிரம்ப்பிற்கு இது ஒன்றாவது நடத்தி காட்டுங்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ். பாவம் அவர் ஒரு நோபல் பரிசாவது வாங்குவார்.
-S.B.

0 கருத்துகள்