இதனை விளக்குவதற்கு நம் தாத்தா–பாட்டிகள் சொல்லித் தந்த பஞ்சதந்திரக் கதைகள் போதும். கதைக்குள் செல்வோமா…
ஒரு காட்டில் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றான். அன்று அவனுக்கு எந்த வேட்டையும் கிடைக்காததால் மிகுந்த வருத்தத்துடன் கிளம்பினான். அப்போது, வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தைப் பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் கையிலிருந்த நெல்மணிகளைத் தரையில் பரப்பினான், அதன் மேல் தன்னிடமிருந்த வலையையும் விரித்தான். அவற்றைப் பிடித்துச் செல்ல ஒரு பெரிய கூடையைக் கொண்டு வரச் சென்றான்.
மேலேயிருந்த பறவைகளுக்கு, 'ஆகா! நல்ல உணவு கிடைத்தது!' என்று எண்ணி, அந்த நெல்மணிகளை கொத்தி திண்ண ஆரம்பித்தன. ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பறவைக்கு மட்டும் இதில் ஏதோ சதி இருப்பதாகப் பட்டது. 'வேடன் வருவதற்குள் நாம் பறந்துவிட வேண்டும்' என்று மற்ற பறவைகளை அது எச்சரித்துக் கொண்டேயிருந்தது. ஆனால், கூட்டமோ அதைக் கேட்கவில்லை.
வேடன் தூரத்தில் வருவதைப் பார்த்த நம் ஹீரோ பறவை, 'வாருங்கள், சென்றுவிடலாம்!' என்று குரல் எழுப்பியது. ஆனால், எந்தப் பறவையாலும் பறக்க முடியவில்லை. அவை அனைத்தும் வலையில் சிக்கியிருந்தன. பயத்தில் அனைத்துப் பறவைகளும் அலற, நம் கதாநாயகன், ஒரு நிமிடம் யோசித்தது. தன் கூட்டத்தாரைப் பார்த்து, 'பயப்படாதீர்கள்! நாம் அனைவரும் ஒன்றுபட்டால் இதிலிருந்து தப்பித்துவிடலாம். ஒரு சேரப் பறக்கத் தொடங்கினால், வலையுடன் பறந்து சென்று இந்த வேடனிடமிருந்து தப்பித்துவிடலாம்!' என்றது.
மற்ற பறவைகள் அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டின. 'ஒன்று... இரண்டு... மூன்று...' என்றதும், ஒன்றாகப் பறக்கத் தொடங்கின. வேடனும் ஏமாந்து போனான். இக்கதையில் இரண்டு முக்கியமான கருத்துகள் உள்ளன: ஒற்றுமை அவசியம் மற்றும் தேவைப்படும் நேரத்தில் செயல்பட்ட அந்தப் பறவையின் சமயோசித புத்தி. இன்னும் சற்று நேரம் தாமதித்திருந்தால், வேடனிடம் அனைத்தும் சிக்கியிருக்கும். ஆனால், அந்தப் பறவையின் சமயோசித புத்தி அனைவரையும் காப்பாற்றியது.
பழைய கதைகள் வேண்டாம் என்கிறீர்களா, தற்காலத்திற்கு ஏற்ற ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
கல்லூரிப் படிப்பை முடித்த ஒரு இளைஞன், குளிர்சாதனப் பெட்டி (Fridge) விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தான். தன் சமயோசித புத்தியால் அவன் நல்ல விற்பனை சாதனையை (sales record) எட்டினான். இதைக்கண்டு அவனோடு பணிபுரிபவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. 'நம்மைவிடச் சிறியவன் இவ்வளவு சிறப்பாக விற்பனை செய்கிறானே!' என்று எண்ணி, எப்படியாவது அவனைச் சிக்க வைக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர். அதுதானே செய்வார்கள்.
அனைவரும் மேலாளரிடம் சென்று, 'இந்த இளைஞன் ஒன்றும் பெரிய விற்பனை செய்யவில்லை. இது நம் பிராண்டின் இயல்பான விற்பனை தான். இவனை வேறு மாநிலத்திற்கு மாற்றினால் எப்படிச் செயல்படுகிறான் என்று பார்ப்போம்' என்றனர். மேலாளரும் அந்த இளைஞனை அழைத்து காஷ்மீருக்கு மாற்றினார். அந்த இளைஞனும் சரியென்று கிளம்பினான்.
கடும் பனிக்காலத்தில், அவன் காஷ்மீருக்குச் சென்ற ஒரு மாதத்திற்குள், அங்கே அதிக அளவில் குளிர்சாதனப் பெட்டிகள் விற்பனையாகின. இது எப்படி சாத்தியம் என அனைவரும் வியந்தனர். மேலாளர் நேராக அந்த இளைஞனிடம், 'இது எப்படி சாத்தியம்? அதுவும் ஊரே பனி சூழ்ந்திருக்கும் இந்த வேளையில் உன்னால் எப்படி இப்படி விற்பனை செய்ய முடிந்தது?’ என்று கேட்டார்.
அவன் சிரித்துக்கொண்டே, 'உண்மையைச் சொன்னேன், எல்லோரும் வாங்கிவிட்டார்கள்!' என்றான். இதைக்கேட்டு அனைவரின் வாயும் பிளந்துபோனது. அவன் மேலும் சிரித்துக்கொண்டே, 'குளிர்சாதனப் பெட்டி என்ன வேலை செய்யும்? நாம் என்ன வெப்பநிலையை (temperature) அதனுள் செட் பண்ணி வைக்கிறோமோ, அந்த வெப்பநிலையிலேயே பொருளை வைத்திருக்கும், இல்லையா? நான் அவர்களிடம், 'வெளியே தண்ணீர் வைத்தால் அது பனிக்கட்டியாகிவிடும். ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அது திரவ நிலையிலேயே (liquid state) இருக்கும்' என்று சொன்னேன். அவ்வளவுதான், எல்லோரும் வாங்கிவிட்டனர். இதுதான் ரகசியம்!' என்றான்.
உண்மையில், காஷ்மீரில் பனிக்காலத்தில் தண்ணீரை உறைந்து போகாமல் வைக்கவேண்டிய தேவை அதிகம் இருக்கும். அதைச் சரியாகப் புரிந்து கொண்டு விற்பனை செய்த அந்த இளைஞனின் சமயோசித புத்தி பாராட்டுக்குரியது. மேலாளர் அவனைப் பதவி உயர்த்தி விற்பனை மேலாளராக்கினார்.
சமயோசித புத்தி ஏன் அவசியம்?
சமயோசித புத்தி என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நமக்குத் தேவைப்படும் ஒரு கருவி. உதாரணமாக, நீங்கள் ஒரு நேர்காணலுக்குச் செல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது நீங்கள் பதற்றமடைந்து, திக்கித் திணறிப் பேசினால், அது உங்களின் தன்னம்பிக்கை இன்மையைக் காட்டும். ஆனால், சமயோசித புத்தியுடன், "இது ஒரு புதிய கோணம், இதைப்பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. ஆனால் என் அனுபவத்தின் அடிப்படையில் இதற்கு இப்படி ஒரு தீர்வு காணலாம்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தால், அது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டும்.
அதுபோல, வாகனத்தில் செல்லும்போது திடீரென ஒரு விபத்து ஏற்படும் சூழ்நிலை வந்தால், பதட்டத்தால் தவறான முடிவை எடுப்பதற்குப் பதிலாக, சமயோசித புத்தியுடன் சரியான நேரத்தில் பிரேக் போட்டு விபத்தைத் தவிர்ப்பது நம் உயிரைக் காக்கும். வேலை செய்யும் இடத்தில் ஒரு திட்டத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்படும்போது, அனைவரையும் திக்குமுக்காடச் செய்யாமல், நிதானமாகச் சிந்தித்து, ஒரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிப்பது, உங்களின் தனிப்பட்ட மதிப்பையும், தலைமைப் பண்பையும் உயர்த்தும்.
சமயோசித புத்தியை வளர்ப்பதற்கான வழிகள்
சமயோசித புத்தி என்பது பிறவியிலேயே வரும் ஒரு குணம் அல்ல. அதை நாம் பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு சில எளிய வழிகள் இங்கே:
ஒரு பிரச்சனை ஏற்படும்போது, அது ஏன் நடந்தது, அதை எப்படித் தீர்க்கலாம் என்று ஒரே கோணத்தில் யோசிக்காமல், பல்வேறு வழிகளில் சிந்தியுங்கள். 'இப்படிச் செய்தால் என்னவாகும்?', 'அப்படியொரு சூழ்நிலை வந்தால் என்ன செய்வது?' எனப் பல கேள்விகளைக் கேட்டு, ஒவ்வொரு நிலைக்கும் ஒரு திட்டத்தை மனதில் உருவாக்குங்கள். இது உங்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்தும்.
நிறைய வாசிப்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, பல்வேறு நபர்களுடன் உரையாடுவது போன்றவை உங்கள் அறிவைப் பெருக்கும். இது உங்கள் மூளையின் செயல்பாட்டு வேகத்தை அதிகரித்து, திடீர் சூழ்நிலைகளில் சரியான முடிவை எடுக்க உதவும். காஷ்மீர் இளைஞன், குளிர்சாதனப் பெட்டியைப் பற்றி மட்டுமல்லாமல், அங்குள்ள தட்பவெப்பநிலை குறித்தும் அறிந்திருந்ததால்தான் அந்த விற்பனை தந்திரம் அவனுக்குத் தோன்றியது.
பதட்டம் என்பது சமயோசித புத்தியின் மிகப்பெரிய எதிரி. ஒரு இக்கட்டான சூழ்நிலையில், முதலில் ஆழமாக மூச்சு விடுங்கள். உங்களின் பயம், பதட்டம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துங்கள். அமைதியான மனநிலையில் மட்டுமே சரியான தீர்வைக் காண முடியும். எப்படி அந்த பறவைக் கூட்டம் தப்பித்தது என்று சிந்தியுங்கள்.
புதிர் விளையாட்டுகள் (Puzzles), செஸ், சுடோகு போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள், உங்கள் சிந்தனைத் திறனையும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறனையும் கூர்மைப்படுத்தும். இவை உங்கள் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.
நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் ஒரு பாடம்தான். கடந்த காலத்தில் நீங்கள் ஒரு சூழ்நிலையை எப்படி எதிர்கொண்டீர்கள், அதில் என்ன தவறு செய்தீர்கள், அதை எப்படிச் சரி செய்திருக்கலாம் என ஆராயுங்கள். இந்தத் சுயபரிசோதனை எதிர்காலச் சவால்களைச் சிறப்பாக எதிர்கொள்ள உதவும்.
சமயங்களில், சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அனைத்தையும் நம்மால் சரிசெய்ய முடியாது. ஆனால், நாம் சரியாகப் பதிலளிக்கும் ஒரு திறன் நம்மிடம் இருக்கிறது. அந்தத் திறன் தான் சமயோசித புத்தி.
இந்த வழிகளை நீங்கள் பின்பற்றிப் பார்க்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
பின்குறிப்பு - இந்த கட்டுரையை எழுதிய உடன் எனது தந்தைக்கு அனுப்பினேன், அவர் படித்து அதற்கு அளித்த பதிலை இத்துடன் இணைத்துள்ளேன்.
“உன்னுடைய சமயோசித புத்தி என்பதை படித்ததும் என்னுடைய சிந்தனையில் வந்தது இது ஒன்றுதான். அந்த காலத்து பாட்டி கதை. ஒரு குளத்தில் நிறைய தவளைகள் இருந்தன. மாலை நேரங்களில் அவைகள் நீரிலிருந்து வெளிவரும். ஒரு நாள் மாலை, ஒரு நரி கூட்டம் அவைகள் கரையில் இருப்பதை கண்டன. உடனே மூத்த நரி ஒன்று தம் கூட்டத்தினை பார்த்து "தத்தம் தமக்கு ரெண்டு ரெண்டு அமுக்கு" என்று சொன்னதாம் .அதாவது ஒவ்வொரு நரியும் இரண்டு இரண்டு தவளைகளை விழுங்குமாறு சொன்னதாம். இதை கேட்ட மூத்த தவளை ஒன்று தன் கூட்டத்தினை பார்த்து சொன்னதாம் "அவரவர் சமத்து வர வர நகத்து" அதன்படி அனைத்து தவளைகளும் தரையில் இருந்து தண்ணீருக்குள் துள்ளி குதித்து தப்பித்ததாம். இந்த கதை கூட நீ சொன்ன இந்த சமயோசித புத்தி என்பதற்கு சரியாக இருக்கும்.
- Kayveeyes



1 கருத்துகள்
Arumai
பதிலளிநீக்கு