Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை என்ற புத்தகம் - 10 - ஜே.கிருஷ்ணமூர்த்தி


காலத்திற்கு முடிவுகட்டாவிட்டால் அச்சம் அதன் சகல விளைவுகளோடும் நீடித்து நிற்கும். எப்படி எதற்கு முடிவுகட்டுவது என்று யாரிடமும் கேட்காதீர்கள். அவர் இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. அவரால் சித்தாந்தத்தைத்தான் கூற முடியும். இது உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இதுதான் நிஜமான தியானம். காலத்தின் ஓட்டத்தை நிறுத்த முடியுமா என்று ஆராய்வதற்காகத்தான் தியானம். நிறுத்த முடியும்; நிறுத்த முடிந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன். நான்தான் சொல்கிறேன்; இந்தப் புத்தகம் சொல்லவில்லை முடியும் என்று நான் சொல்கிறேன். ஆனால் புத்தகத்தை நீங்கள் நம்பினால், அதை நீங்கள் படிக்கவில்லை என்று அர்த்தம்; நீங்கள் வெறும் வார்த்தைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் வார்த்தைகளில் வாழ்வதன் மூலம் அச்சத்தைத் தீர்க்க முடியாது. எனவே காலம் என்ற புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். அதைப் படியுங்கள். காலத்தின் இயல்பு பற்றி ஆராயுங்கள். உங்கள் உறவு எப்படி காலத்தின் அடிப்படையில் கட்டுப்பட்டிருக்கிறது; காலத்தின் செயல்பாடுகளுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்று ஆராயுங்கள். தொடர்ந்து தேடுங்கள். அறிவுதான் காலம் என்பது தெரிய வரும். அறிவை முன்னேறுவதற்கான கருவியாகப் பயன்படுத்தினால் காலத்தின் பிடியில், அதன் மூலம் அச்சத்தின் பிடியிலும் பதற்றத்தின் பிடியிலும் சிக்கிக்கொள்வீர்கள். பிறகு அதை இப்படியே தொடரும். காலத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவும் அதன் ஓட்டத்தை நிறுத்தவும் வேண்டுமானால் அதற்கு அமைதியான மனம் தேவை. கவனிப்பதற்கு ஏற்ற, தடைகளற்ற, அச்சமற்ற மனம் தேவை. உங்களுக்குள் நிகழும் காலத்தின் இயக்கத்தை, காலத்தை நீங்கள் எந்த அளவு சார்ந்திருக்கிறீர்கள் என்பதையும் கவனிக்கும் அளவுக்கு சுதந்திரமான மனம் தேவை. நம்பிக்கை என்று எதுவும் இல்லை என்று யாராவது உங்களிடம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பயமாக இருக்கும் அல்லவா? நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நம்பிக்கை தான் காலம்.

ஆக, காலத்தின் இயல்பு என்ன என்பதை நீங்கள் ஆராய வேண்டும். அதன் மூலம், உங்கள் மூளை, மனம், இதயம் ஆகியவை-இவை மூன்றும் ஒன்றுதான் - காலத்தினுள் இயங்கிக் கொண்டிருப்பதை உணர வேண்டும். இவை காலத்தால் கட்டுப்படுத்தப்பட்டவை. மூளையையும் மனதையும் வித்தியாசமாக செயல்படும்படி நீங்கள் சொல்கிறீர்கள். இதற்கு, உங்கள் வாசிப்பில் நீங்கள் அபாரமான கவனத்தை செலுத்த வேண்டும்.

தமிழில்: அரவிந்தன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்