கடந்த 22.8.25 அன்று இந்தியாவில் பரஸ்பர நிதி சேவையை அளித்து வரும் பரஸ்பர நிதி நிறுவனங்களை ஒழுங்கு படுத்தும் அமைப்பான AMFI - Association of mutual funds in India வுடன் இந்திய அஞ்சல் துறை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இனி இந்தியாவில் உள்ள அஞ்சலகங்கள் வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சேர முடியும். இது கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள முடிவாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அஞ்சல் துறை மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஒரு முக்கிய முகவராக செயல்படும். இந்திய அஞ்சல் துறையின் உடைய மிகப்பெரிய கட்டமைப்பு என்பது இதற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த ஒப்பந்தம் என்பது அடுத்த மூன்று வருடங்களுக்கு அமலில் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் விற்பது என்பது தபால் துறைக்கு ஒரு புதிய விஷயம் இல்லை. ஏற்கனவே 15 முதல் 20 வருடங்கள் முன்பு தபால் அலுவலகத்தில் Finance Mart என்ற பிரிவு இயங்கியது. இந்த பிரிவில் மியூச்சுவல் ஃபண்ட் விற்பனை நடைபெற்றது. அப்பொழுது UTI மற்றும் SBI என்ற இரண்டு நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் சேவைகள் அஞ்சல் துறையில் வழங்கப்பட்டது. தற்போது பொது மக்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு பெருமளவு பெருகி உள்ளத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டில் விநியோகஸ்தர்களுக்கு தகுதி தேர்வு என்பது கட்டாயம். கடந்த காலத்தில் கூட அஞ்சல் ஊழியர்கள் AMFI தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் வழியாக இந்த சேவையானது வழங்கப்பட்டது. தற்போது தபால்காரர்களை இந்த பணிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கென அனைவருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. பரிட்சார்த்த முறையில் இது முதலில் நான்கு, ஐந்து மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக இத்திட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கடந்த ஜூலையில் ஏற்கனவே இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் இணைந்து உள்ளவர்களுடைய KYC- Know Your Customer Application யை சரிபார்க்கும் பணியை ஏற்றுக் கொள்வதற்காக இந்திய அஞ்சல் துறை ஒரு புரிந்துணரவு ஒப்பந்தத்தை செய்திருந்தது. இதில் UTI மற்றும் SBI KYC ஆவணங்கள் சரி பார்ப்பினை மிக விரைவாக அஞ்சல் துறை முடித்து கொடுத்ததன் விளைவாக தற்பொழுது அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் KYC சரி பார்க்கும் பணி என்பது இந்திய அஞ்சல் துறைக்கு வழங்கப்படுகிறது.
அஞ்சல்துறையின் பல சேவைகளில் இது ஒரு மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும். எனவே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீட்டு சேவையை வீட்டு வாசலிலேயே மிக விரைவில் பொது மக்கள் எதிர்பார்க்கலாம். பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்துவதற்கு AMFI எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Source : Press Information Bureau, press release dates - 17.7.25 & 22.8.25.
A.கேசவன்,
DO (PLI) காஞ்சிபுரம்
Mobile : 9894473600

0 கருத்துகள்