Advertisement

Responsive Advertisement

சைவமா? வைணவமா? - சத்குரு பதில்!


கேள்வியாளர்:
நீங்கள் சைவ மதத்தைச் சேர்ந்தவரா? எல்லாக் கடவுள்களையும், மற்ற எல்லோரையும் உங்கள் வழி ஏற்றுக் கொள்கிறதா?

சத்குரு: நீங்கள் சைவரா? வைஷ்ணவரா? என்று கேட்கிறீர்களா? நான் எப்படி என்றால் எந்தப் பிரிவுமே என்னை விரும்புவதில்லை (சிரிக்கிறார்). ஏனென்றால் எல்லாப் பிரிவினருக்குமே நான் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறேன். முதலில், நீங்கள் ஏன் ஒரு பிரிவை அமைக்க விரும்புகிறீர்கள்? உங்கள் தன்மையில் உள்ள ஒரு குறைபாட்டினாலேயே உங்களுக்கு ஒரு பாகுபாடு, பிரிவு உருவாக்கும் எண்ணம் தோன்றுகிறது.

உங்களுக்குள் ஒரு முழுமையான தன்மை இல்லாததால்தான் நீங்கள், குடும்பம் சார்ந்த பாகுபாட்டையோ, மதம் சார்ந்த குழுவையோ, சாதி சார்ந்த பிரிவையோ அல்லது வேறேதேனும் சார்ந்த சங்கத்தையோ ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்குள் பொருள் பொதிந்த எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் ஒரு குழுவை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் யார் என்பதையோ, உங்கள் உயிர்த்தன்மையை அனுபவபூர்வமாக உணரவோ நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவேதான் நீங்கள் ஒரு குழுவை உருவாக்குகிறீர்கள்.

மக்கள் தங்களுக்கு உள்ளே உள்ள தெய்வீகத் தன்மையை அனுபவபூர்வமாக உணர உதவி புரிவதே என் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளின் குறிக்கோளாக உள்ளது.

எப்போது நீங்கள் உங்களுக்கு உள்ளே உள்ள தெய்வீகத் தன்மையை உணர்கிறீர்களோ, அதற்குப் பின் உங்களுக்கு எந்தக் குழுவையும் சேரவேண்டிய அவசியம் இருக்காது. 

வாழ்க்கையில் உள்ள மற்ற உயிரினங்களிலிருந்து உங்களை வேறுபடுத்தி மனிதப் பிறவியாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது. வாழ்க்கை ஏற்கனவே நிறைவான தன்மையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் சைவராகவோ, வைஷ்ணவராகவோ, இந்துவாகவோ, முஸ்லீமாகவோ இருக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் இங்கே உட்கார்ந்தால் இந்த உயிர்த்தன்மையே போதுமானது.

மக்கள் வெளிச் சூழலை வைத்து தங்களை மதிப்பிட முயற்சிக்கின்றனர். இவ்வாறு இருப்பது மக்களுக்கு எப்போதுமே போராட்டமாகத்தான் இருக்கிறது. அவர்கள் எப்போதுமே கல்வியின் மூலமோ, அணியும் ஆடைகளின் மூலமோ, அணிந்திருக்கும் நகைகள் மூலமோ அல்லது அவர்கள் எடுத்துச் செல்லும் அறிமுக அட்டைகள் மூலமோ தங்கள் வாழ்க்கைக்கு மேலும் மதிப்பூட்டவே முயற்சி செய்கின்றார்கள். உங்கள் இயல்பான தன்மையை நீங்கள் இன்னமும் அனுபவ பூர்வமாக உணராததால்தான் இதையெல்லாம் செய்கின்றீர்கள். அந்தத் திசையில் இதுவரை நீங்கள் முயற்சி செய்யவே இல்லை. எந்த ஒரு குழுவில் சேர்வதும் உங்கள் உள்நோக்கிய வளர்ச்சியை பின்னோக்கியே கொண்டு செல்கிறது. நீங்கள் ஈஷா சேர்ந்த குழுவை உருவாக்கினாலும் சரி. அதுவும் உங்கள் உள்நோக்கிய வளர்ச்சியை பின்னோக்கித்தான் எடுத்துச் செல்லும்.

-தொடரும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்