ஏற்கெனவே எனக்குக் கெட்ட பெயர். வீணை நமது புராதன வாத்தியம். சகல கலா வல்லியின் வாத்தியம். பஞ்சணை மெத்தையில் வைத்துக் கொஞ்ச வேண்டிய வாத்தியம். அது உருவத்தில் பெரியது. ஏன் பெரிதாய் இருக்கிறது? ரொம்ப சிம்பிள். அதன் இரண்டு பக்கங்களிலுமே இரண்டு குடங்கள் இருக்கின்றன. இடது பக்கத்தில் இருப்பது சுமைதாங்கி. அது அவ்வளவுதான். அதற்கும் இசைக்கும் சம்பந்தமில்லை. வலது பக்கத்தில் இருப்பது ஒலி பெருக்கி. அந்தக் குடம் எவ்வளவு ஒலியைப் பெருக்கினாலும் ஓர் அறைக்குள்ளேதான் கேட்கும். ஆகவே அதற்கு கான்டாக்ட் மைக் வைத்து விடுகிறார்கள். அதை எடுத்துக்கொண்டு எங்கும் போக முடியாது. எங்கு போனாலும் அதற்கும் சேர்த்து டிக்கெட் வாங்க வேண்டும்.
சம்பிரதாயத்தைச் சாக்காகச் சொல்லி அந்த இரண்டு குடங்களையும் கட்டிக் கொண்டு அழுவதில் அர்த்தமே கிடையாது. அந்த ஒன்றரை அடி மாண்டலின், வீணையை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. இரண்டாவது, ஸ்வரங்களைத் தாங்கும் நடுக்கட்டையின்மேல் அரக்கு பதித்து அதன் மேல் ஸ்வர ஸ்தானங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அரக்கு ஓர் அரக்கன். திரேதாயுகத்துக் கலவை. சற்று வெயில் அடித்தால் உருகி மெட்டுகள் நகர்ந்து விடும். அதைத் திருப்பி நேர் ஆக்குவதற்கு ஏகச் செலவு.
வீணை வித்வான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அகாதமியிலிருந்தோ, கேந்திரத்திலிருந்தோ ஒரு கணிசமான மானியம் வாங்கி, விஞ்ஞான நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து வீணைக்கு சீர்திருத்தம் செய்யலாம் அல்லவா? சீதோஷ்ணத்தினால் பாதிக்கப்படாத அரக்கும் அசையாத ஸ்வர ஸ்தானங்களும் அமைத்துவிட்டால் இப்போது கேட்பாரற்றுக் கிடக்கும் வீணை அதன் பழைய மகோன்னத ஸ்தானத்துக்கு வந்து விடும்.
சுருதி சேர்ப்பதற்காக இடது பக்கத்தில் முன் தண்டில் பிரடைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கட்டையினால் செய்யப்பட்டிருக்கின்றன. சிறிய சீதோஷ்ண மாறுதல் இருந்தாலும் ஜளிப்பு பிடித்து விடும் (ஜலதோஷம்) அதைத் திருகத் திருகத் தொள தொளா ஆகிவிடும்.
நான் எவ்வளவோ முறை எழுதி இருக்கிறேன். மேற்கத்திய வாத்தியங்களில் இருப்பதுபோல் திருகாணி (ஸ்க்ரூ) போட்டுவிட்டால் இந்தக் குறை நீங்கி விடும். மேலும் சுருதி சேர்ப்பது சுலபமாகவும் இருக்கும். துல்லிதமாகவும் இருக்கும். சம்பிரதாயம், சம்பிரதாயம் என்று சொல்லியே நாம் அசலை விட்டுவிட்டு சடங்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
எம்பார் ஒரு கதை சொல்லுவார். ஓர் அக்ரஹாரத்தில் ஒரு பெருமாள் கோயில். அந்தப் பெருமாளுக்கு ஒரு நாள் ஒரு விபரீத ஆசை தோன்றியது. மாறுவேஷம் போட்டுக்கொண்டு இரவு வெளியே சென்று மக்கள் நலன் எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று... முடிவு செய்தார்.
ஆனால் இவர் வெளியே போய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் கோயிலுக்குத் திரும்பியபோது பட்டர் கோயிலைப் பூட்டிக்கொண்டு யானைக்கால் சாவியைத் தோளில் சாத்திக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டார். இரவுப் பொழுதை எங்கே கழிப்பது என்று பெருமாள் வீடு வீடாய்ப் போய்ப் பார்த்தபோது ஒரு வீட்டில் திண்ணை காலியாக இருந்தது. அகலமாக, வாட்டமாக ஆனந்தமாய்ப் போய் படுத்தார். தூக்கம் வரவில்லை. உள்ளிருந்து மல்லிகைப் பூ வாசம் வந்து பெருமாளைக் கிறங்க வைத்தது. அது ஒரு கணிகை மாதின் வீடு, சற்று நேரம் கழித்து அந்தப் பெண்மணி வாசலில் வந்து மகா தேஜஸுடன் ஓர் ஆசாமி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு "ஸ்வாமி, வாசலிலே குளிர், உள்ளே வந்து சயனிக்கலாமே'' என்று விண்ணப்பித்தாள். பெருமாளும் மனமிரங்கி உள்ளே சென்று அந்த இரவை அங்கேயே கழித்துவிட்டு விடியற்காலை எழுந்து யதா ஸ்தானத்திற்குப் போய்விட்டார். எம்பார் இந்தக் கதையைச் சொல்லிவிட்டு ஒரு நிமிஷம் சஸ்பென்ஸ் வைத்து விட்டுச் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சொன்னார்,
"அன்று முதல் இன்றுவரை அந்த ஊருக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் தரிசனம் ஆனவுடன் அந்த வீட்டிற்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்''.
சம்பிரதாயம் என்பது அவரவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது. அது எப்போதும் நிறையாய் இருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
'சுப்புடு தர்பார்' என்ற நூலிலிருந்து.
0 கருத்துகள்