பல காலகட்டங்களில் அவ்வப்போது நிகழ்ந்த, வாழ்க்கையின் அனுபவங்களும், எழுகின்ற எண்ணங்களும் குறிக்கப்பட்டுப் பின்னால் பல நூல்களாக வெளிவந்தன!
அவை அனைத்தும் தொகுத்து இன்று ஒரே நூலாக வெளிவருகிறது. அதுவே இந்த ‘யாருக்கு யார் எழுதுவது” என்ற நூல்.
உண்மையைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகள் மாறும்! உண்மை மாறவே மாறாது!
மாற்றங்களே நிலையான ஒன்றாக இருக்கும் இந்த உலகில், மாறாத ஒன்றாக நமது உள்ளுணர்வு மட்டுமே இருக்கிறது!
என் உடல் மாற்றத்திற்குள்ளானது! எண்ணங்கள், செய்யும் வேலைகள், அதன் பலனை அனுபவித்த அனுபவங்கள், இவையெல்லாம் தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளானாலும் உள்ளே சிறுவனாக இருந்தபோது இருந்த நான், இன்னும் அதே உணர்வுபூர்வமான மாறாத தன்மையிலேயே இருக்கிறேன். நீங்களும் அப்படித்தான்!
இது
உலகம் என்ற ஒன்று அப்படியே இருக்க, அதில் உள்ள மாற்றங்கள் தொடர்வதைப் போல!
இந்த மாற்றங்களில் நேற்று எழுதியது - இன்றைய நடைமுறைக்குப் பொருந்தாது போகலாம் அல்லது இன்றைய நடைமுறையையும் நாளையையும் தாண்டி, அதற்கு அப்பாலும் போகலாம்.
அது எழுதுபவர்களின் பக்குவத்தைப் பொறுத்து இருக்கிறது. படிப்பதற்கும் ஒரு பக்குவமான நிலை வேண்டும்.
இது இரண்டும் சரியான, சமநிலையில், வந்து விட்டால் யாருக்கும் யாரும் எழுதவேண்டாம்.
யாரும் யாரையும் படிக்கவும் வேண்டாம்!
எப்போதும் எழுதுபவன் படிப்பவனைக் கீழ் நிலையில் இருத்திவைக்கும் கலையில் வெற்றி பெற்றால்தான் - படிப்பவனுக்கு உற்சாகமாய் இருக்கும்.
இந்தக் குறுக்குவழியான உத்திகளை விட, பாரதியைப்போல், உணர்வுமயமாக எழுத்து அமைந்ததென்றால் எந்த வேறுபாடுகளும் இல்லாது படைத்தவனும், படைப்பும், படிப்பவனும் ஒன்றாய் ஒருமித்துவிடுகிறார்கள். அதுவே உயர்ந்தது!
இதில் - என் எழுத்து அப்படிப்பட்டதோ இல்லையோ என்பதை நானறியேன். எங்காவது ஓரிடத்தில் நீங்கள் ஒன்றிப்போய்விட்டால் அந்த இடத்தின் வெளிப்பாடு இயல்பாக நடந்தது என்று கொள்ளலாம். அதாவது என் முனைப்பின்றி அதுவாக வந்ததாகக் கொள்ளலாம்!
எனக்குத் தெரியும் பல இடங்களில் நான் முனைந்திருக்கிறேன். பற்பல இடங்களில் நான் ஏதும் செய்ய இயலாதவனாகவும் இருந்திருக்கிறேன்.
எல்லாம் அறிந்தவர்களுக்கு எதுவும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றும் அறிய இயலாதவனுக்கு என்ன எழுதினாலும் புரியப் போவதில்லை!
யாருக்கு யார் எழுதுவது?
ஆக, எழுத்து எல்லாம் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்குத்தான் என்பது என் அனுமானம்! அதாவது என்னைப் போன்றவர்களுக்கு! ஏன் எனக்கு நானே எழுதிக்கொண்டது என்றாலும் சரியே!
இதில், ஓர் இசைப்பயணமும், வாழ்வின் பல சம்பவங்களும், மெய்நோக்குகளின் கோணங்களும், அப்போது நான் தேடிய, மெய்யான மெய்யுமாக, பல விஷயங்கள் இருக்கின்றன! உங்களுக்கும் இதற்கும் இடையில் என்னுரை என்ற பெயரில் இங்கே நிறுத்தி வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!
இறைவனடி
இளையராஜா
(கவிதா பதிப்பகம் வெளியிட்ட இசைஞானி இளையராஜாவின் யாருக்கு யார் எழுதுவது புத்தகத்தின் முன்னுரை)

0 கருத்துகள்