Advertisement

Responsive Advertisement

கம்பரின் 'துமி' - கவிஞர் மகுடேசுவரன்


“ஐயா… கம்பர் துமின்னு ஒரு வார்த்தையைப் போட்டு எழுதிட்டாராம். அப்படி ஒரு சொல் இல்லைன்னு ஒட்டக்கூத்தர் மறுத்தாராம். நாட்டார் வழக்கில் அப்படி ஒரு சொல் இருக்கிறது என்று கம்பர் வாதிட்டாராம். மக்கள் மொழியில் அப்படி ஒரு சொல் இருந்தால் காட்டு, ஏத்துக்கிறோம்னு ஒட்டக்கூத்தர் சொன்னாராம். கூத்தர், கம்பர், சோழன் ஆகிய மூவரும் வீதியில் உலா வந்தாங்களாம். உண்மையில் அப்படி ஒரு சொல்லே இல்லையாம். கம்பருக்காக சரஸ்வதி தேவியே வந்து தயிர் கடைஞ்சாங்களாம். அங்கே பிள்ளையார் வெண்ணெய்க்காகக் கூடவே உட்கார்ந்திருந்தாராம். “அப்பாலே போ, துமி தெறிக்கும்” என்று சரசுவதி சொன்னாங்களாம். பிறகுதான் கூத்தர் ஏத்துக்கிட்டுத் தெளிஞ்சாராம். அதனால் கவிஞன் ஒரு சொல்லைச் சொன்னாலே ஏத்துக்கணுமாம். நீங்கள் என்ன சொல்றீங்க, ஐயா ?”

“நல்ல கதை சொன்னீங்க, தம்பி! நம்ம கவிஞர்களைப் புதுசா ஒரு சொல்லையேனும் சொல்லச் சொல்லுங்கன்னுதானே நாமும் சொல்றோம்? கம்பர் ஒரு தமிழ்ச்சொல்லைத்தான் உருவாக்கறார்.

மன்னனின் மூத்த அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் அந்தச் சொல் மீதான ஐயத்தை எழுப்புகிறார். இது இரண்டு புலவர்களுக்கிடையிலான சண்டை. இது நானே உருவாக்கிய சொல் என்று கம்பன் கூறியிருக்கலாம். அதையும் அவர் சொல்லல. ஏன்னா அந்தச் சொல்லை அவர் விளக்கவேண்டி வரும். மக்கள் பயன்பாட்டில் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்பது அவர்க்குத் தெரியும். ஏனென்றால் பன்னெடுங்கால வாழ்க்கையிலிருந்து தோன்றுவது ஆழ்ந்த பயன்பாட்டுச் சொல் ஆகிவிடுகிறது. அதனை யாரும் மறுக்க மாட்டாங்க. மக்கள் பயன்பாட்டில் நிலவுவது பழஞ்சொல். அதனை ஒரு புலவர் கண்டடைந்து பயன்படுத்துவது என்றாகிறது. அந்த வலிமையானது கம்பருக்குத் தேவைப்பட்டது. 

மக்களுடைய பேச்சு மொழியில் ஒரு தமிழ்ச்சொல் இருந்தால் அதனை  ஏற்றுக்கொள்வதில் யார்க்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? இங்கே ஒட்டக்கூத்தர் ஏற்றுக்கொண்டுவிட்டாரே. இது முறையான புலமை உரையாடலாக முடியுது. 

இங்கே துமி என்றுதான் ஒரு சொல்லை உருவாக்க முடியும். டுமி என்று உருவாக்க முடியாது. இதுவும் கம்பனுக்குத் தெரியும். இன்றைக்கு எழுதுபவர்கள் துமி, டுமி அளவிற்காவது இருக்கிறார்களா என்பது கேள்வி. அவர்கள் டஸ்ட், ஸ்ப்ரே என்று போய்ட்டாங்க. அதனால சரசுவதி தேவியும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் தென்படுவதில்லைங்க.”

கவிஞரின் முகநூல் பக்கத்திலிருந்து....

கருத்துரையிடுக

0 கருத்துகள்