ஆசிரியர்: Roy Schwartz, Mike Allen, Jim VandeHei
பதிப்பகம்: Nicholas Brealey Publishing
உலக வரலாற்றிலேயே தற்போதுதான் நாம் அதிக வார்த்தைகளைப் பேசவும் எழுதவும் படிக்கவும் செய்கிறோம். ஏன் தெரியுமா? தொழில்நுட்பம்தான் இதற்குக் காரணம். நம்மைச் சுற்றி இருக்கும் இந்த வார்த்தைக் குவியலாலேயேதான் நம்முடைய கவனம் சிதறி, பொறுமையை மொத்தமாக இழந்து, வார்த்தை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறோம். இந்தச் சூழலில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் புத்திசாலித் தனமான கலையை அறிவது முக்கியம். இது குறித்த வழிமுறைகளை ‘ஸ்மார்ட் ப்ரெவிட்டி’ (Smart Brevity) என்கிற புத்தகம் சொல்லித் தருகிறது. இந்தப் புத்தகத்தை ஜிம் வன்டேஹெய், மைக் ஆலென் மற்றும் ராய் ஷ்வார்ட்ஸ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
சுருங்கச் சொல்லுதல் என்பது...
சுருங்கச் சொல்லுதல் என்பது நம் திறமையின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை. நீளமாகச் சொல்லுதல் என்பது நம் திறமையின் மீது நாம் கொண்டிருக்கும் பயம் என்கிற வாசகமே இந்தப் புத்தகத்தின் முதல் வாசகமாக எழுதப்பட்டுள்ளது.
‘‘கம்யூனிகேஷன் என்பதில் பழைய நடைமுறையை நாம் பின்பற்றினால் அதை ஒருவரும் படிக்கவோ, கேட்கவோ போவதில்லை. இன்றைக்குத் தேவைப்படும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முதலில் கம்யூனிகேஷன் குறித்த எண்ணங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இன்றைய தேவையைப் புரிந்து கொண்டு மாற்றி அமைத்தால் நீங்கள் எழுதும் முறை முற்றிலுமாக மாறிவிடும். உதாரணமாக, நீங்கள் எழுதும் விஷயங்களை முற்றிலுமாக வரிக்கு வரி பலரும் படிக்க மாட்டார்கள். மேலோட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் படிப்பார்கள் என்பதை முதலில் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இதனாலேயே குறைந்த நேரத்தில் அதிகப்படியான விஷயங்களைக் கொண்டு சேர்க்க நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
கவனத்தைப் பெறும் கலை...
நம் அனைவரின் முன்னாலும் இருக்கிற ஒரே ஒரு மிகப் பெரிய சவால் எப்படி மற்றவர்களின் கவனத்தைப் பெறுவது என்பதுதான். இதற்கு இன்றைக்கு அவர்கள் எப்படி விஷயங்களை (content) நுகர்கிறார்கள் என்பதைப் பற்றி அடிப்படையாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும். அது என்ன இன்றைக்கு என்கிறீர்களா?
ஆம், கடந்த காலத்தில் மக்கள் எப்படி விஷயங்களை நுகர்ந்தார்கள் என்பது பற்றி தெரிந்துகொண்டு எந்தவித உபயோகமும் இல்லை. இப்போது எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய கம்யூனிகேஷனை வடிவமைக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் வார்த்தைகளின் குவியலுக்கு நடுவே நாம் புதைந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நம் அனைவருக்கும் தேவைப்படும் கலை இது.
வார்த்தைச் சிறைகளில் சிக்கும் மனிதன்...
ஒளிவுமறைவில்லாமல் நியாயமாக சிந்தித்தால் நம் அனைவருக்குமே தெளிவாக ஒன்று புலப்படும். நாம் அனைவருமே வார்த்தைகளால் (பேசி, எழுதி, படித்து என) அமைக்கப் பட்ட சிறையில் வசிக்கும் கைதிகளாய் இருக்கிறோம். சோஷியல் மீடியாவில் வரும் வார்த்தைகள், இ-மெயில் செய்யப்படும் வார்த்தைகள், ட்வீட் செய்யப்படும் வார்த்தைகள், மெமோவாக வரும் வார்த்தைகள், கதையாக வரும் வார்த்தைகள் என நாம் வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம்.
நம்முடைய மூளை இப்படி வார்த்தைகளை எதிர்கொண்டு நொந்துபோய் கிடக்கிறது. இதை நாம் அன்றாடம் உணரவும் பார்க்கவும் செய்கிறோம். கண்களின் போக்கைக் கணக்கிடும் கருவிகளைக் கொண்டு ஆராய்ந்ததில் நம் கண்கள் எந்த ஓர் இணையதள பக்கத்தையும் 15 விநாடிகளுக்கு மேல் படிப்பதில்லை என்கிற தகவல் நமக்கு தெரிய வருகிறது. இதில் இன்னொரு ருசிகரமான விஷயம், இப்படி 15 விநாடிகள் படிக்கும் விஷயத்தைக்கொண்டு நம்முடைய மூளையானது 17 மில்லி செகண்டுகளில் அது நமக்குப் பிடித்ததா, இல்லையா என்பதை முடிவு செய்கிறது என்பதுதான் அது. பிடிக்காவிட்டால் அடுத்த பக்கத்தை நாம் க்ளிக் செய்துவிடுகிறோம்.
நம் கண்முன்னே தோன்றும் விஷயங்களை நாம் ஸ்கேன் செய்கிறோமே அன்றி படிப்பதே இல்லை. நாம் சராசரியாக ஒரு நாளில் 344 முறை ஸ்மார்ட் போனை செக் செய்கிறோம்– அதாவது, 4 நிமிடத்துக்கு ஒரு முறை குறைந்த பட்சமாக. ஆனால், நான் அப்படியெல்லாம் செய்வதில்லை என்று பலரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறோம்.
மனித மூளையின் இயல்பு...
மனித மூளை என்பது கவனச் சிதறலுக்கு சுலபத்தில் ஆட்படுவது என்று பண்டைய கால ஆய்வுகளே கூறுகின்றன என்றாலும், டிஜிட்டல் யுகத்தில் இந்தக் கவனச்சிதறல் என்பது உச்சத்துக்குச் சென்று விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் கவனம் சிதறுவது என்பது இன்றைக்கு மிகச் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இந்தக் கவனச் சிதறல் என்பது மனிதனிடம் இருக்கும் இரண்டு விஷயங்களுக்குத் தீனி போடுவதாக இருக்கிறது.
ஒன்று, மனிதர்களாகிய நாம் பிறவியிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை ஒரே நேரத்தில் (மல்ட்டி டாஸ்க்கிங்) செய்ய விரும்பும் நபராக இருக்கிறோம். இரண்டாவது, ஒரு விஷயத்தில் இருந்து மற்றொரு விஷயத்துக்கு மாறி, அதில் கவனம் செலுத்த 20 நிமிடம் நமக்குத் தேவைப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து நம்மை முழுக்க முழுக்க கவனச்சிதறல் கொண்ட ஆளாக மாற்றிவிடுகிறது. இதனாலேயே முற்காலத்தில் செய்ததைப் போன்று நீண்ட நெடிய கடிதங்களும் கட்டுரைகளும் இப்போது பயன் தருவதாக இருப்பதில்லை.
டெக்னாலஜியும் இன்டர்நெட்டும்...
அதிகாலை நடைபயிற்சியில் இருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரையில் நம்மை நோக்கி வார்த்தைப் புயல்களாக அடித்துக்கொண்டே இருக்கின்றன. இது நிற்காமல் பார்த்துக்கொள்வதற்கு நம்மிடம் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒன்று, டெக்னாலஜி. மற்றொன்று, மனிதர்களின் டெக்னாலஜி சார்ந்த கெட்ட பழக்கங்கள். இன்டெர்நெட்டும் ஸ்மார்ட் போனும் இந்த அலையை ஓயாது இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றன. நாம் சிரித்தாலும் அழுதாலும் பாராட்டப்பட்டாலும் கண்டிக்கப் பட்டாலும் அதை உடனடியாக ஷேர் செய்து விடுகிறோம். ஏனென்றால், நம் அனைவருக்கும் ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், இன்ஸ்ட்டா என எல்லாவற்றுக்கான வசதியும் சரிசமமாக இருக்கிறது.
நினைத்ததை ஷேர் செய்து, தெரியாததை கூகுளில் தேடி, எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் யூடியூப் பார்ப்பது என அனைத்துக்கும் நாம் ஏதோ ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்துகிறோம். இப்படி எப்போதுமே பரபரப்பாக இருப்பதால், மனிதர்கள் யாருக்கும் நேரமில்லை. இருக்கிற நேரத்தில் பலவற்றையும் பார்த்தாக வேண்டும் என்கிறபட்சத்தில் என்ன நடக்கும்? கவனச்சிதறல்தான் அதிகமாகும்.
இப்படி எக்கச்சக்கமான மெசெஜ்கள், ஸ்டேட்டஸ்கள், செய்திகள், கட்டுரைகள் எனப் பல லட்சம் வார்த்தைகள் நம்மீது படையெடுத்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடுகிறது. பணியிடத்தில் வரும் இ-மெயில்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு அதற்குக் கொடுக்கப்பட வேண்டிய கவனம் கொடுக்கப்படாமல் போவதற்கான காரணம், இதுதான். சின்ன ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, ஆப்பிள் போன்ற மிகப் பெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இதுதான் நிதர்சனமான உண்மை. பல செய்திகளில் பெரும் பகுதி படிக்கப்படாமல் போவதற்கும் இதுவே காரணம்.
எந்த வார்த்தை முக்கியம்..?
இந்தக் குழப்பத்தில் நம்முன்னே நிற்கும் முக்கியமான கேள்வி இதுதான். இத்தனை வார்த்தைகளுக்கு நடுவே எதை முக்கியம் என்று கண்டுபிடிப்பது எப்படி, கண்டுபிடித்து, அதில் கவனம் செலுத்துவது எப்படி, அதேபோல் நாம் சொல்லும் விஷயங்களில் மற்றவர்களைக் கவனம் செலுத்த வைப்பது எப்படி? எனப் பல கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர், பதிலையும் சொல்கிறார்.
‘‘ஒரு விஷயத்தை நீங்கள் சொல்ல நினைக்கும்போது எப்படி அதை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள் என்று பார்க்காமல், எப்படி மற்றவர்கள் அதைப் படிப்பார்கள்/கேட்பார்கள் என்று பார்க்க ஆரம்பிக்க வேண்டும். புதியது, புதியது, புதியது என்று தேடும் குணம் கொண்ட மூளையால் கண்ணுக்கு முன்னே நிற்கும் விஷயம் சற்று நேரமே கவனத்தில் கொள்ளப்படும். அந்தக் குறைவான நேரத்தில் நாம் தகவல்களை மற்றவர்களின் மூளைக்குள் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் சவாலான விஷயமே.
கோவிட்-19-க்குப் பின் வந்த வொர்க் ஃப்ரம் ஹோம் எனும் நடைமுறை கம்யூனிகேஷன் என்பதை இன்னமும் சிக்கலான ஒன்றாக மாற்றிவிட்டது. என்னதான் தெளிவான ஸ்ட்ராட்டஜியை நிறுவனங்கள் கொண்டு இருந்தாலும் அதைச் சிறப்பாக நடைமுறைப் படுத்த மிகச் சிறப்பான கம்யூனிகேஷன் தேவைப்படுகிறது.
‘சம்பளத்துக்காகவே ஆண்டொன்றுக்கு சாராசரியாக 1 பில்லியன் டாலர் செலவிடப் படும்… 10,000 பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனத்தில், பணியாளர்களின் 50% முதல் 60% அளவிலான நேரம் ஏதாவது ஒருவகை கம்யூனிகேஷனை செய்வதிலேயே செலவிடப் படுகிறது’ என்று ஸ்லாக் நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளார். ஆனாலும், இதை சரிவர செய்வதற்கான டூல்கள் மற்றும் பயிற்சியைத் தருவதற்குத்தான் ஆளில்லை என்கிறார் அவர்.
ஸ்மார்ட் ப்ரெவிட்டி என்றால் என்ன..?
“‘ஸ்மார்ட் ப்ரெவிட்டி’ என்பது கம்யூனிகேஷனில் இருக்கும் இந்தப் பிரச்னையை நேரடியாக மோதும் ஒரு விஷயமாகும். எப்படி சரியான வார்த்தைகள், குறுகிய வாக்கியங்கள், கவனத்தைக் கைது செய்யக்கூடிய சின்னச் சின்ன கேலிகள், பார்வையை நகரவிடாமல் செய்யும் விஷுவல்கள் மற்றும் ஸ்மார்ட்டாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட ஐடியாக்கள் மக்களால் படிக்கவும் நினைவில் வைக்கவும் படுகின்றன என்பதைப்புரிந்து கொள்வது அவசியம்’’ என்று சொல்லும் ஆசிரியர், ‘‘இதைப் பற்றி விளக்கமாகக் கூறுவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்கிறார்.
சிறியதாகவும், ஸ்மார்ட்டாகவும் மற்றும் இலகுவாகவும் (shorter, smarter and simpler) சொல்லப்படும் விஷயங்கள் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
எப்படி இவற்றை உங்கள் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதையும் இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது. ஒரு தனிநபராக எப்படி இந்தத் திறனை வளர்த்துக்கொள்வது என்பதையும் இந்தப் புத்தகம் கற்றுத் தருகிறது.
நீங்கள் பேசுவதும் எழுதுவதும் சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய பேர் கேட்கவும் படிக்கவும் வேண்டும். சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? இந்தப் புத்தகம் உங்களுக்கானது தான். இரைச்சல் நிறைந்ததாக மாறிவிட்ட இந்த உலகில் கம்யூனிகேஷனில் தெளிவு, கவனம் பெறும் உத்தி மற்றும் திறன் வளர்த்தல் என்கிற மூன்றையும் விளக்கமாகப் பல்வேறு உதாரணங்களை மேற்கோள்காட்டி விளக்கிக் கூறும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.
நன்றி - நாணயம் விகடன் 13-10-2024

0 கருத்துகள்