எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ் ஏஐ (xAI), Grokipedia என்ற புதிய ஆன்லைன் தகவல் களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இணைய உலகின் மிகப் பெரிய இலவசத் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச வரலாற்றில் புகழ்பெற்ற பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்திற்கும் சவால் விடுப்பதாக அமைகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள கூகுள் மற்றும் விக்கிப்பீடியாவையே நம்பியுள்ளனர். சில விஷயங்களை கூகுளில் கண்டெடுத்தாலும் முதற் பக்கமாக அது விக்கிப்பீடியாவையே காட்டுகிறது. ஏனெனில் விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 6.5 கோடிக்கும் மேல் இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வர்களால் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது.
இதேபோன்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் (Encyclopedia Britannica) என்பது பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தைக் கொண்டது. இது உலகின் மிகவும் அதிகாரப்பூர்வமான மற்றும் நம்பகமான அறிவு மூலங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இதில் உள்ள கட்டுரைகள், அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களால் எழுதப்பட்டு, ஆழமான ஆய்வு மற்றும் மேற்பார்வைக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அச்சு வடிவில் வெளியிடப்பட்டு வந்த பிரிட்டானிகா, பின்னர் டிஜிட்டல் தளத்திற்கு மாறியது. இது தரத்திற்கும், துல்லியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
விக்கிப்பீடியாவின் ஒற்றைச் சார்பு அரசியல் காரணமாகவும், பிரிட்டானிகாவைப் போல ஆழமான, ஆனால் அதே சமயம் வேகமான மற்றும் சார்பற்ற தகவல்களை வழங்கவும் எலான் மஸ்க் Grokipedia-வை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரிட்டானிகா பல மாதங்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிடும் நிலையில், Grokipedia-வில் கட்டுரைகள் மற்றும் புதுப்பிப்புகள் அனைத்தையும் AI-யே உடனடியாக உருவாக்குகிறது மற்றும் சரிபார்க்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும், "Grok-ஆல் உண்மை சரிபார்க்கப்பட்டது" ("fact-checked by Grok") என்ற கால முத்திரை இடப்படுகிறது.
Grokipedia-வில் தகவல்களைச் சேர்க்கவும், திருத்தவும் பயனர்கள் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும். இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்த வேண்டுமா என்பதை Grok AI-யே தீர்மானிக்கும். இது விக்கிப்பீடியாவின் பொதுத் திருத்த முறைக்கும், பிரிட்டானிகாவின் நிபுணர் திருத்த முறைக்கும் இடைப்பட்ட ஒரு அணுகுமுறையாக உள்ளது.
விக்கிப்பீடியா மனிதர்களை நம்பியிருக்க, பிரிட்டானிகா நிபுணர்களை நம்பியிருக்க, Grokipedia முக்கியமாக xAI-ன் Grok எனப்படும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் பெரிய மொழி மாதிரியை (Large Language Module) நம்பியுள்ளது.
Grokipedia, மனிதர்களின் சார்புகளை நீக்கி, "உண்மையை" மட்டுமே வழங்கும் என்று மஸ்க் கூறினாலும், AI-ன் உள்ளடக்கங்களில், மஸ்க்கின் சொந்த கருத்துக்களையும், வலதுசாரிச் சார்பையும் கொண்ட உள்ளடக்கங்கள் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அத்துடன், இதன் உள்ளடக்கங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து பிரதி எடுத்தது போல இருப்பதும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
நானும் உபயோகித்துப் பார்த்தேன் எனக்கென்னவோ அதன் முகப்பு கூகுள் பக்கம் போன்றே உள்ளது. ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் பிரிட்டானிகா நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தைக் குறிக்கிறது. விக்கிப்பீடியா கூட்டு அறிவாற்றலைக் குறிக்கிறது. ஆனால் Grokipedia, விரைவான, ஆனால் நிரூபிக்கப்படாத AI-ன் தொகுக்கப்பட்ட அறிவினை அறிமுகப்படுத்துகிறது.
-S.B.



0 கருத்துகள்