இந்த நினைவு ஏன் மனிதனின் அடிமன ஆழத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றது? நாம் யாரும் இந்தப் பூமிக்குப் புதியவர்கள் அல்ல என்பதுதான் அதன் காரணம்.
நாம் திரும்பத் திரும்ப இங்கே பிறந்து கொண்டே வந்திருக்கிறோம். நாம் இல்லாத காலமே இல்லை. கடந்துபோன நாட்கள் நம் நினைவில் நிலைப்பதில்லை. நமது ஆயிரக்கணக்கான நினைவு அடுக்குகளுக்குள் பழைய நாட்கள் மறைந்து போய்விடுகின்றன.
பழைய நாட்களில், ஓர் ஆலயத்தின் ஆழ்ந்த மர்மமும், நமது உள்ளறைகளைத் திறந்த அனுபவமும் நமக்கு இருந்திருந்தால், நமது அடிமன ஆழத்தில், அந்த நினைவு நம்மை இன்றும் உறுத்திக் கொண்டேதான் இருக்கும். அறிவு ஜீவி அது இல்லையென்றே மறுப்பதால், அந்த நினைவுகளின் அடியாழத்திற்கு அவரால் சென்று பார்க்க முடிவதில்லை. அந்த நினைவுகளை மீட்டெடுக்க அவரால் முடியாமல் போய்விடுகிறது.
எவ்வளவோ தடைகள் இருந்தாலும் அவை அர்த்தமற்றதாய்த் தோன்றினாலும் ஏதோ ஒன்று அழுத்தமாய் மனதில் பதிந்திருக்கிறது. அதை அகற்ற முடியாது. அது புதிய வடிவங்களை எடுக்கின்றது, என்றாலும் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. எல்லையற்ற காலப்பெருவெளியில் பிறப்புகள், இறப்புகளாய்த் தொடரும் நமது நெடும் பயணத்தில் நாம் அதை இன்று நினைவு கொள்ள முடியாவிட்டாலும் கூட, அந்த அடிமன உந்துதல் இருந்து கொண்டேதான் வருகிறது.
அவற்றிற்கான புறப் பயன்பாடும் அது முடிவுக்கான ஒரு வழி என்பதும் மறந்து போனாலும்கூட, அவற்றிற்கான ஆழமான முக்கியத்துவமும் நோக்கமும் இன்னும் இருக்கவே செய்கின்றன.
கோயில்கள் கட்ட வேண்டும் என்ற உலகளாவிய தவிப்பு, மனிதனிடம் மட்டும் காணப்படும் உள்ளார்ந்த பண்பு. விலங்குகள் தம் இருப்பிடங்களை அமைத்துக்கொள்கின்றன. பறவைகள் கூடுகள் கட்டிக் கொள்கின்றன. ஆனால், அவை கோயில்கள் கட்டுவதில்லை. மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள பிரதான வேறுபாடுகளில் ஒன்று இது. மனிதன் கோயில் கட்டும் விலங்கு!
ஒன்று, தனக்கான வாழிடத்தை அமைத்துக் கொள்வது இயல்பான பண்பு. ஒவ்வொரு விலங்கும் அதைச் செய்து கொள்கிறது. பறவைகளும், விலங்குகளும், புழுப்பூச்சிகளும்கூட அவ்வாறே செய்து கொள்கின்றன. ஆனால், தெய்வத்திற்கு ஒரு வீடு அமைக்க வேண்டும் என்பது, மனிதனிடம் மட்டுமே காணப்படும் முக்கியமான பண்பாகும்.
தெய்வத்தைப் பற்றிய ஆழ்ந்த விழிப்புணர்வு இல்லாமல் ஆலயங்கள் உருவாகியிருக்க முடியாது. ஆழ்ந்த ஆன்ம அனுபவம் இல்லாமல் ஆலயங்கள் உருவாகியிருக்க முடியாது என்பது மட்டும் உறுதி. அந்த விழிப்புணர்வு போய்விட்டது. ஆனால், கோயில்கள் மட்டும் நின்று கொண்டிருக்கின்றன.
நீங்கள் விருந்தினர் விடுதிகளை உருவாக்குகிறீர்கள், விருந்தினர் வந்துபோய்க் கொண்டிருப்பதால். விருந்தினரே இல்லையென்றால் வீண் செலவு செய்து விடுதிகள் அமைப்பீர்களா? விருந்தினர் இல்லாமற் போய்விட்ட காலத்திலும், விடுதிகள் நிற்பது போலவே, இப்போது ஆலயங்கள் நின்று கொண்டிருக்கின்றன.
அதனால், கோயில்கள் கற்பனை மீது கட்டப்பட்டவை அல்ல. வாழ்வனுபவத்தால் உருவாக்கப்பட்டவை. பூமியின் மீது தெய்வ அவதாரம் நிகழ்ந்ததன் காரணமாகவே, பூமி முழுவதிலும் மூலை முடுக்குகளில் எல்லாம் கடவுளின் இருப்பிடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. யாரை வரவேற்பதானாலும் அதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்துதானே ஆகவேண்டும்?
அதை இப்படிப் புரிந்து கொள்ளலாம். வானொலி அலைகள் நம்மைச் சுற்றிலும் போய்க் கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் வானொலிப் பெட்டியால்தான் அந்த அலைகளை உள்வாங்கி வெளிப்படுத்த முடியும். நாளை மூன்றாவது உலகப்போர் மூண்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். எல்லாத் தொழில் நுட்பங்களும் அழிந்து போய்விடும். ஆனால், ஒரே ஒரு வானொலிப் பெட்டி நம்மிடம் அழியாமல் தங்கி விடுகிறது என்றால், அதை வைத்துக்கொண்டு எதையும் கேட்க முடியாது. ஏனென்றால் வானொலி நிலையங்களே இராது. என்றாலும், நாம் அதைத் தூக்கி எறிந்துவிட மாட்டோம். மனம் வராது!
பல தலைமுறைகளாக அது நம்மிடமே இருக்கும். அது என்ன, எதற்கு என்பதுகூடத் தெரியாமல் போய்விடும். யாராவது கேட்டால், ‘என்னவோ தெரியவில்லை. எங்கள் முன்னோர்கள் காலம் காலமாகப் பாதுகாத்து வைத்திருந்தது. நாங்களும் வைத்திருக்கிறோம்’ என்றுதான் சொல்வோம்.
முன்னோர்களாவது அது என்னவென்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அவர்கள் அதையும் செய்யவில்லை. அது பயனுள்ளதாகவும் நமக்குத் தோன்றவில்லை. அதேசமயம் கைகழுவி விடவும் மனம் வரவில்லை. வானொலிப் பெட்டியைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்தாலும் ஒன்றும் தெரிவதில்லை. ஒரு காலத்தில் அது பேசியிருக்கிறது. பாடியிருக்கிறது. எங்கிருந்தோ அனுப்பப்பட்ட ஒலி அலைகளை வாங்கி, கேட்பவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், இன்று ஒலியற்றுக் கிடக்கிறது. கோயில்களும் அப்படித்தான்.
நன்றி கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17
நன்றி - ஆன்மிகம் - ஜனவரி 2012

0 கருத்துகள்