‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றாள், தமிழ் மூதாட்டி ஔவை. இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார், ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என உலக நீதி பாடிய உலகநாதனார்.
தொல் பழங்காலத்திலிருந்தே ஆலயங்கள் அமைத்து, இறை வழிபாடு நிகழ்த்தும் பண்பையும் பழக்கத்தையும் பெற்றிருந்தார்கள் நம் தமிழ்க்குடிப் பெருமக்கள். சங்ககாலத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் கோயில்கள் இருந்திருக்கின்றன. அன்றைய புகழ்மிக்க புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்திலே அப்படிப் பல ஆலயங்கள் இருந்ததை-
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்...
-என்னும் வரிகளால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
மண் குடிசைகளாகவும் மரவீடுகளாகவும் சுட்ட செங்கற் தளிகளாகவும் பூங்கொடிகளால் அமைந்தவையாகவும் பழைய ஆலயங்கள் இருந்திருக்கின்றன. பிறகு சுண்ணச் சாந்துகளால் மெழுகப்பட்டு, நவீன கட்டடக்கலை வளர்ச்சி பெற்றும் திகழ்ந்திருக்கின்றன. சங்க காலத்துக்குப் பின் வரலாற்றில் ஒரு நீண்ட இடைவெளி, ‘இருண்ட காலம்’ எனப் பேசப்படுகிறது. தமிழகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் தொடர்பில்லாத ஒரு மக்கள் கூட்டம் தமிழ் நிலத்தில் வந்து தங்கி, ஆட்சி அதிகாரங்களையும் கைப்பற்றி, காட்டாட்சி நடத்தியிருக்கிறது. ‘களப்பிரர்கள்’ என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இதன் பிறகுதான் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என நமது வரலாற்றுப் புகழ் பெற்ற தமிழ்மன்னர்கள் பலரும் எழுச்சி கண்டிருக்கின்றனர். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த இந்த அரசர்களின் எழுச்சியினூடே நமது சமயம், வழிபாடு, பண்பாடு, கலை வளர்ச்சி முதலியனவும் எழுச்சி கண்டன. இந்தக்கால கட்டத்தில்தான் தமிழ்நிலம் நெடுக, முந்நூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு மறைந்து, பாழ்பட்டுக் கிடந்த நமது பண்டைத் தமிழ் ஆலயங்கள் மீட்டெடுக்கப்பட்டு, புது வடிவில் சமைக்கப்பெற்றன. குகைகள், குடைவரைகள் எனத் துவங்கி, அடுக்கு முறைகளில் பெருங்கருங்கற்களைத் தொகுத்துப் புதிய ஆலயங்கள் அமைக்கப்பெற்றன.
இவற்றின் பிரமாண்டங்களைக் கண்டு பிரமித்துப் போகும் பிற்கால மக்கள், ‘இதெல்லாம் சாதாரண மனுஷங்க கட்டினதாக இருக்க முடியாது. நிச்சயம் பூத, பைசாசங்கள் தான் வந்து, இவ்வளவு பெரிய கற்களைத் தூக்கி அடுக்கியிருக்க முடியும்’ என்று விழி விரிய வியந்து பேசி மகிழ்கிறார்கள்.
அரசர்களின் எழுச்சி, ஆன்மிக எழுச்சி என்பதோடு மக்கள் சமுதாய வளர்ச்சியும் இரண்டறக் கலந்திருப்பது மிகமிக அவசியமல்லவா? மக்களுக்காகத்தானே நாடு, அரசு, ஆன்மிகம் என்பதெல்லாம்!
தமிழ் நிலம் பண்டைக் காலத்தில் ஐவகைப் பகுப்புகளாகக் குறிப்பிடப்பட்டதை நமது சங்ககால இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் அந்த ஐவகை நிலங்களிலும் ஐவகைத் தெய்வங்கள் வழிபடப்பட்டிருக்கின்றன.
தமிழ் மண்ணை ஆண்ட மாமன்னர்கள் அனைவரும் மகத்தான ஆன்மிக உணர்வுடையோராகத் திகழ்ந்திருக்கின்றனர். தமிழ்மொழி வளரவும் மக்களிடம் தெய்வ பக்தி தழைக்கவும் நமது பண்டைக்கால அரசர்கள் ஆற்றிய அருந்தொண்டு மிகமிகச் சிறப்பானவை. அவர்கள் சைவர்களாக இருப்பினும் சரி, வைணவர்களாக இருப்பினும் சரி, மக்களிடம் அறம் தழைக்க, ஆன்மிக மேம்பாடு சிறக்க மிக உயரிய பணியாற்றியிருக்கின்றனர். தாங்களும் தானம், தவம் போன்றவற்றால் மேம்பட்டு, மிகச்சிறந்த இறையடியார்களாகத் திகழ்ந்திருக்கின்றனர்.
எதிரிகளால் நெருங்க முடியாத எத்தனையோ கோட்டைகளைத் தமிழ் அரசர்கள் கட்டியதுண்டு. ஆகாயமளாவி நிற்கின்ற அந்த வலிய கோட்டைகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால், அரசர்கள் எழுப்பிவைத்த எண்ணற்ற ஆலயங்கள் இன்றளவும் எல்லா மக்களும் வணங்கி, வாழ்வு நலம் பெறும் வகையில் கீர்த்திச் சிறப்புகள் குன்றாமல் திகழ்கின்றன.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்கள் வாழ்ந்த ராஜமாளிகைகள் இவைதான் என்று நாம் எந்த மாளிகையையும் இன்று அடையாளம் காட்ட முடியாது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம் போன்றவற்றை நாம் இன்றும் காண்கிறோம், சென்று தரிசனம் செய்து மகிழ்கிறோம்.
பாண்டிய மன்னர்கள் எழுப்பிய மதுரை மீனாட்சி ஆலயம், திருவிளையாடற் புராணச் சிறப்புகளை எடுத்துரைத்தபடி கம்பீரமாக நின்றிலங்குகிறது. பத்தினித் தெய்வம், கண்ணகி வானவர் ரதத்திலேறி விண்ணுலகு சென்ற காட்சியை நேரில் கண்ட மலைக்குறவர்கள் கூறிய செய்தியைக் கேட்டு அதன் முழு வரலாற்றையும் விசாரித்தறிந்து, இமயத்தில் போய் எடுத்து வந்த கல்லால் சிலையமைத்து, கோயிலும் எழுப்பி, வழிபாடுகளைத் துவக்கி வைத்தான், சேரன் செங்குட்டுவன். இந்த ஆலயம் ‘மங்கல தேவி கோயில்’ என்று இன்றும் கம்பம், குமுளி மலைகளின் அருகில் காட்சியளிக்கிறது.
மகேந்திர பல்லவன் எழுப்பிய திருச்சி மலைக்கோயிலை, நந்திவர்ம பல்லவன் நிர்மாணித்த காஞ்சி வைகுண்டப் பெருமாள் ஆலயத்தை, ராஜசிம்ம பல்லவன் உருவாக்கிய காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை நாம் இன்றும் காண்கிறோம்.
இலங்கையில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய பழமையான ஆலயங்கள் ராமாயண காலத் தொடர்புடையனவாக உள்ளன. இராவணன் வழிபட்ட தொன்மைச் சிறப்புகள் இங்கு பேசப்படுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள பிரபல நகரங்கள் ஒவ்வொன்றும் ஓர் அற்புத ஆலயத்தின் பெருமைச் சிறப்புகளாலேயே பிரபலமடைந்து திகழ்வதை நாம் காணலாம். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இதுதான் உண்மை நிலை. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் என்று ஒவ்வொரு தலமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னும் சொல்லப் போனால், இந்த அருமையான ஆலயங்கள் இருப்பதால்தான் நாம் பல மாமன்னர்களின் வரலாறுகளையே அறிந்து கொள்ள முடிகிறது. ஆலயச் சுவர்களில், அம்மன்னர்கள் தமது ஆட்சிக்காலம், அளித்த கொடைகள், பெயர் மற்றும் மரபு பற்றிய பல தகவல்களைப் பொறித்து வைத்திருப்பதால்தான், வரலாற்று அறிஞர்களும் கல்வெட்டு ஆய்வாளர்களும் அவற்றை அடிப்படையாக வைத்து, நமது பண்டைய தமிழ் மன்னர்களின் சரிதத்தைத் தொகுத்து எழுதி வெளியிட்டு உலகறியச் செய்ய முடிந்தது.
சென்னைப் பட்டினம் என்னும் பெயருடன் இந்த நகரம் தோன்றியதும், வளர்ந்ததும் என்னவோ மிகப் பிற்காலத்தில், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர்தான். ஆனால், சென்னை நகரின் வடதிசையில் உள்ள திருவொற்றியூரும், தென்கோடியில் அமைந்துள்ள திருவான்மியூரும் மிகப்பழங்கால ஆலயங்களின் சிறப்புகளோடு உள்ளவைதான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் கூட இந்த ஆலயங்களில் உள்ளன.
திருமயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன்றவை பல்லவர்கால வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் திகழ்பவை. சென்னை நகரின் உள்ளும் புறமுமாக நாலாதிசையிலும் பல்வேறு பழங்காலச் சிறப்புமிக்க ஆலயங்கள் அமைந்துள்ளன. வளமான தொண்டை மண்டலத்தின் அழகிய பல பேரூர்களை உள்ளடக்கிக் தோன்றியது தான் சென்னை மாநகரம்.
திருஞான சம்பந்தர் பாடல்களின் வாயிலாக, அன்றைய திருமயிலை பெரிய நகரமாக இருந்தது என்று அறிய முடிகிறது. திருவொற்றியூர் பெரிய பட்டினமாகவே இருந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் தள்ளி இன்றைய பொன்னேரி மற்றும் பழவேற்காடு அருகே திருவான்மூர் என்று ஒரு பெரிய நகரம் இருந்திருக்கிறது. பவத்திரி, காகந்தி என்னும் பகுதிகளுடன் இணைந்து இது ஒரு பெரிய கடற்கரைப் பட்டினமாகப் பெரிய துறைமுகத்துடன் விளங்கியிருக்கிறது. ‘செல்லா நலவிசைப் பொலம் பூண் திரையன் பல் பூங்கானல் பவத்திரி’ என்று அகநானூற்றின் 340ம் பாடல் இந்த ஊரின் பெருமை பேசுகிறது. இங்கு யவனம், சீனம் போன்ற பல வெளிநாடுகளிலிருந்து வணிக மரக்கலங்கள் வந்திருக்கின்றன.
தமிழ் மன்னர்கள், தனிப்பெருஞ்சிறப்புடன் எண்ணற்ற ஆலயங்களை எழுப்பி, கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, இலக்கியம், ஆன்மிகம் என அனைத்தையும் மேம்படுத்தினார்கள். நமது மன்னர்களின் வரலாறு, நாம் வணங்கும் ஆலயங்களோடு இணைந்ததாக இருக்கிறது. ஆலயங்களின் வரலாற்றுடன்தான் நமது நாட்டின் வரலாறும் இலக்கியங்களின் வரலாறும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.
ஆற்றங்கரை நெடுக எத்தனை ஆலயங்கள்! மலை முகடுகளின் மீது எத்தனை, கடற்கரை நெடுக எத்தனை, அடர்ந்த காடுகளின் நடுவே எத்தனை எத்தனை...
இவை எல்லாம் எதற்காக?
மானுட வாழ்வை மேம்படுத்தவே நம் முன்னோர்கள் இந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்தார்கள். தேங்கிய குட்டைபோல் மனிதன் ஒரேயொரு சிற்றூருக்குள், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என முடங்கிக் கிடந்து விடக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் இத்தகு கீர்த்தி வாய்ந்த திருத்தலங்கள்!
ஒவ்வொரு திருத்தலத்திலும் மன்னர்களின் திருப்பணிகள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது, எத்தனையோ மகான்களின் அருட்சரிதங்களும் சந்தனமும் பன்னீருமாய் கலந்து மணக்கிறது.
யாரோ ஒரு மகான், எங்கோ ஒரு மலை மீது தவமிருந்திருப்பார் அல்லது காட்டிலோ, நதிக்கரையிலோ தனது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்திருப்பார். பின்னால் அந்த இடங்களில் யாரோ ஒரு மன்னன் கோயில் எழுப்பியிருப்பான். இப்படித்தான் எல்லா இடங்களிலும் செய்திகள் பதிவாகியிருக்கும். சில இடங்களில் மகான்களின் திருச்சமாதிகள் மீது ஆலயம் எழுப்பப்பட்டிருக்கும். சில இடங்களில் இறைவன் சிலருக்கு திவ்ய தரிசனம் அளித்த செய்திகள் தல புராணங்களாகப் பேசப்படும்.
ஆன்மிகத்தைப் பொருத்தவரை இந்திய தேசம் முழுக்க இதே நிலைதான் என்று நாம் உறுதியாகக் கூறலாம். இதற்கு இமயமும் குமரியும் சாட்சி. கங்கையும் காவிரியும் சாட்சி.
மொழியோ, பிரதேச எல்லைகளோ இங்கு எவரையும் பிரித்து வைத்துவிடாமல், ஆன்மிகம் சர்வ ஜாக்கிரதையாக பாரத மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வைத்திருந்தது. இன்றும் வைத்திருக்கிறது.
நன்றி - ஆன்மிகம் 1-2-2012




0 கருத்துகள்