அவர் கனவில் போய் நின்றார் கந்தப் பெருமான். நடந்தவற்றை எல்லாம் சொன்னார். மன்னர் துடித்தார்; ‘‘தெய்வமே! பலகாலம் தேடினாலும் பார்க்கக் கிடைக்காத உன்னைப் பழனித்தேவர் அடித்தாரா? வான் சுமந்த தேவர்களைக் காப்பாற்றிய நீ, மீன் கூடையைச் சுமந்தாயா? என்ன சோதனை இது?’’ எனக் கலங்கினார். பழனியாண்டவன் பதில் சொன்னார்;
‘‘மன்னா! கலங்காதே! பழனித்தேவனுக்கு ஈடு இணை கிடையாது. ஏழைக்கு உதவுவது என் கடமை. தடியால் அடித்தது, காவல்காத்த பழனித்தேவன் கடமை. என் தந்தையான சிவபெருமான் கல்லாலும் வில்லாலும் அடிபடவில்லையா? வருந்தாதே நீ!’’
‘‘பக்தனான பழனித்தேவனின் பெருமையை, உலகறியச் செய்யப்போகிறேன் நான். என்னை அடித்ததை உணர்ந்த பழனித் தேவன், இன்றிரவு தன் உடல் பகுதிகளை அறுத்து, தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்ளப் போகிறான். நிறுத்த வேண்டும் அதை. கண்ணும் கருத்துமாகக் காவல்காத்த அவன் கைகளுக்குக் கனகக் கடகம் அல்லவா அணிவிக்க வேண்டும்! அதைச் செய் நீ எனக்காக!’’ என்று அறிவுறுத்திய முருகப் பெருமான், மன்னரின் கனவிலிருந்து மறைந்தார்.
கனவு கலைந்த மன்னர், ‘‘பழனித் தேவருக்காகப் பழனி ஆண்டவன் என் கனவில் வந்து அருள்புரிந்தாரோ! ஆச்சரியம்!’’ என்று வாய்விட்டுச் சொல்லி, உடனே பொற்கொல்லர்களை அழைத்து, உத்தரவிட்டார். பொழுது விடிவதற்குள் இரண்டு தங்கக் கடகங்கள் தயாராயின.
பழனித்தேவர் தன் வீட்டில், எண்ணாதது எல்லாம் எண்ணிப் பழனியாண்டவனைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘‘உடனே உங்களை அழைத்து வரச் சொன்னார் அரசர்’’ என்ற குரல், பழனித்தேவரின் சிந்தனையைக் கலைத்தது. பழனித்தேவர் நிமிர்ந்து பார்த்தார்.
அரசாங்கக் காவலர்கள் பலர் நின்றிருந்தார்கள். பழனித்தேவர் திகைத்து, மனம் குழம்பினார்; ‘‘என்ன குற்றம் செய்தேன் நான்? ஓ...! ஒருவேளை இரவில் நான்செய்த தவறை மன்னர் தெரிந்து கொண்டிருக்கிறாரா? அப்படியிருந்தால் அதுவும் நல்லதுதான். எனக்கு நானே தண்டனை அளித்துக் கொள்வதைவிட, அரசரே தண்டனை அளிக்கத் தீர்மானித்திருக்கிறார் என்றால், அந்த ராஜ தண்டனையை ஏற்க வேண்டியதுதான். ஆனால், நான் தீர்மானித்தபடி, எனக்குத் தண்டனை தருவாரா அரசர் என்று பார்க்கலாம்’’ என்று பயத்துடன் போனார். அவர் பின்னால் போனார்கள் அரசாங்கக் காவலர்கள்.
ராஜ சபையில்...
புலவர் பெருமக்கள், பிரமுகர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் எனப் பலரும் இருந்தார்கள். என்றுமில்லாத பொலிவுடன் விளங்கியது சபை. அரசவைக்குள் நுழைந்த பழனித்தேவரை, அரசர் மிகுந்த பணிவோடு வரவேற்றார். அந்தப் பணிவு பழனித் தேவரின் இதயத்துடிப்பை அதிகமாக்கியது. அதுவரை அரச சபையைப் பார்க்காத அவர், மிரளமிரள விழித்தார். அதைக் கவனிக்காததைப் போல அரசர், பழனித்தேவரின் கைகளைப் பிடித்து அவரை உயர்ந்ததோர் ஆசனத்தில் உட்கார வைத்தார்.
அரசர் ஏதோ நாடகமாடுகிறார் என்று நினைத்த பழனித் தேவர், ‘‘மன்னா! எனக்குத் தர வேண்டிய தண்டனையை சீக்கிரம் கொடுங்கள்! இதோ! நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார். அரசர் அசரவில்லை; ‘‘நானும் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறேன். இன்னுமா தாமதம்? கொண்டு வாருங்கள் அதை!’’ என்று பணியாட்களைப் பார்த்துக் கர்ஜித்தார். நடந்தது அனைத்தையும் சபையில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ நடக்கப்போகிறது என்று மட்டும் புரிந்துகொண்ட அவர்கள், அரசரையும் பழனித்தேவரையும் மாறிமாறிப் பார்த்தார்கள். அதற்குள் காவலர்கள் ஒரு தங்கத் தாம்பாளத்தைக் கொண்டு வந்து, மன்னரிடம் நீட்டினார்கள். அதிலிருந்து இரண்டு தங்கக் கடகங்களை எடுத்துப் பழனித்தேவரின் கைகளில் அணிவித்தார் அரசர். அத்துடன் பீதாம்பரம் போர்த்தி, தங்கக் கட்டிகளையும் நவரத்தினங்களையும் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்தார்.
பழனித்தேவர் கூவினார்; ‘‘மன்னா! என்ன இது? என் கையை வெட்டி கால்களைத் துண்டியுங்கள்; அது நியாயம். தண்டனை அளிக்க வேண்டிய என் அங்கத்திற்குத் தங்கத்தாலான அணிகலன்களை மாட்டி, பொன்னாடை போர்த்தலாமா?’’ என்றார். ஒன்றும் புரியாவிட்டாலும், சபையில் இருந்தவர்கள் மிரண்டார்கள். ஆனால் அரசரோ கைகளைக் குவித்து, ‘‘பழனித்தேவரே! உங்களைப்பற்றி நன்றாகப் புரிந்து கொண்டேன் நான். பழனி யாண்டவன் என் கனவில் வந்து நடந்ததையெல்லாம் கூறினான். அவன் அருள் இல்லாவிட்டால் உங்களைப்பற்றி எங்களால் அறிந்து கொள்ள முடியுமா? இதுவரை உங்களைப்பற்றி அறியாதிருந்த நாங்கள் அல்லவா, உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!’’ எனப் பணிவோடு சொன்னார்.
அதன் பிறகு, குளத்து மீன் வரலாறு - பழனித்தேவர் காவல் - மீனவப் பெண் வேண்டுதல் - பழனியாண்டவன் செய்த உதவி - பழனித்தேவர் தடியால் அடித்தது - தன் கனவில் வந்து பழனியாண்டவர் அருளிய செய்தி - என அனைத்தையும் அரசர் சபையில் அறிவித்தார். அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆறுமுகனின் அன்பு பக்தர் ஒருவர் அருள் வந்து, ‘‘பழனித்தேவா! பக்தனே! உன்னை நான் நன்றாக அறிவேன். பிண்டத்தில், உனது உள்ளம்தான் எனது கோயில். அண்டத்தில் உள்ள எனது (பழனியாண்டவன்) சந்நதிக்கு வா!’’ எனச் சொல்லி அடங்கினார். கேட்டுக் கொண்டிருந்தவர்களின் மனம் உருகியது. ஆனால் அதைக் கேட்ட பழனித்தேவரோ, ஆசனத்தில் இருந்து குதித்தெழுந்து மலையைநோக்கி ஓடினார். அனைவரும் பின் தொடர்ந்து ஓடினார்கள்.
பழனித்தேவர் விரைந்தோடிப் பழனியாண்டவன் சந்நதியில் நின்று, ‘‘முருகா! முடிவில்லாத அருள் உடையவனே! மீன் கூடையைச் சுமந்து அறிவில்லாத என் கையால் அடியும் தாங்கினாயே! யோகிகளாலும் முனிவர்களாலும் அறிய முடியாத உன் திருவடிகளில் என்னைச் சேர்த்துக்கொள்!’’ என்று கூவிக் கீழே விழுந்தார். அப்போது பழனித்தேவரின் திருமேனியில் இருந்து அவரது ஆன்மா, ஒரு நட்சத்திர வடிவில் ஒளி வீசி பழனியாண்டவன் திருவடிகளில் மறைந்தது. அரசர் முதலான அனைவரும் அதைக் கண்டு மெய் சிலிர்த்துக் கைகளைக் குவித்தார்கள்.
ஏழைப் பெண்ணின் செயல்களைப் பார்ப்போம்...
அவள் தினந்தோறும் பழனிமலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரை அனைத்துப் படிகளையும் தூய்மைசெய்து, மாக் கோலம் இட்டாள். இரவு அர்த்த ஜாமப்பூஜை முடிந்ததும்,
‘‘இது பக்தர்கள் திருவடி பட்ட இடம்’’ எனச் சொல்லி, ஆலய மதிலைச் சுற்றித் தரையில் உருண்டு புரண்டு வலம் வந்தாள். கோயில் அதிகாரிகள் தங்கள் கனவில் வந்து கந்தக் கடவுள் சொன்னபடி ஏழைப் பெண்ணுக்குக் காலை - மாலை இரு வேளைகளிலும் பிரசாதம் தந்தார்கள். பழனியாண்டவன் சந்நதியில் பக்தியுடன் பலகாலம் தொண்டு செய்த அந்த ஏழைப்பெண், பழனியாண்டவன் திருவடிகளை அடைந்தாள்.
‘‘ஆனாய் எனை அருளாய் எனும் அரிவைக்கு ஒரு கூடை
நீளாசல சரம் ஈதரசூ நிசியார் கரவினனாத்
தானான் உறு பழனிப்பெயர் தடியால் அடி கொடுமே
வாளாளனை உயர்வாக்கிய மணியே! எனை மறவேல்!’’
- என இவ்வரலாற்றைப் பழந்தமிழ்ப் பாடல் பாடுகிறது.
நன்றி - ஆன்மிகம் 10-7-2025

0 கருத்துகள்