சோ : அது நமது விதியைப் பொறுத்தது; நமக்கு இருக்கிற தெய்வ நம்பிக்கையைப் பொறுத்தது. தெய்வத்தின் அனுக்ரஹம் நமக்குப் பரிபூர்ணமாகக் கிட்டினால், கிரஹ நிலைகள் நம்மை ஒன்றும் செய்து விடாது.
ஞானசம்பந்தருக்கு, மதுரையிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. மதுரை மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தில் பற்று கொண்டு, சமண மதத்தினர் சொல் கேட்டு, சைவர்களுக்குத் தொல்லை விளைவிக்கிறான். சைவம் க்ஷீண தசையை அடைகிறது. அப்போது, ராணி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தரை வேண்டி அவருக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர் மதுரைக்குப் புறப்படுகிறார். அப்போது அவருடன் இருந்த அப்பர் ஸ்வாமிகள் (திருநாவுக்கரசர்) சம்பந்தரைத் தடுக்கிறார். திருநாவுக்கரசர் வயதில் மிகவும் மூத்தவர்; சம்பந்தர் சிறு பையன். ஆனால், திருநாவுக்கரசருக்கு, சம்பந்தர் மீது பெரும் ஈடுபாடு உண்டு. சம்பந்தருக்கும் அப்பர் ஸ்வாமிகள் மீது பெரிய மரியாதையும் பக்தியும் உண்டு.
சம்பந்தர் புறப்பட்ட நேரம் சரியில்லை என்பதை, அப்பர் கவனிக்கிறார். ‘கிரஹ நிலைகள் சரியில்லை, இப்போது புறப்பட வேண்டாம்; தீமை நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்று சம்பந்தரை அப்பர் எச்சரிக்கிறார்.
ஆனால், சம்பந்தர் ‘சிவனுடைய பாதத்தைப் பற்றி நான் நிற்பதால், கிரஹங்கள் என்னை ஒன்றும் செய்துவிடாது’ என்று கூறுகிறார். ‘மூங்கிலின் அழகைக் கொண்ட தோள்களைப் படைத்த உமாதேவியை, ஒரு பாகமாகக் கொண்டவர்; விஷத்தை உட்கொண்ட கழுத்தைக் கொண்டவர்...’ என்று பொருள் கொண்ட வார்த்தைகளாகிய ‘வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்’ என்று ஆரம்பித்து அப்போது, சம்பந்தர் பாடிய பாடல்கள் – கோளறு திருப்பதிகம். இதைச் சொல்பவர்களை, கிரஹக் கோளாறுகள் ஒன்றும் செய்யாது என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்.
நன்றி - துக்ளக் 2014 (எங்கே பிராமணன் தொடரிலிருந்து...)

0 கருத்துகள்