Advertisement

Responsive Advertisement

அகத்தியர்- ஒருமைப்பாட்டின் அடையாளம்! - கோதை ஜோதிலட்சுமி


என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு ஒரு சித்த மருத்துவர் வருவதுண்டு. அவரது வீட்டுக்கு என்னுடைய தாத்தாவுடன் ஒருநாள் சென்றிருக்கிறேன். அங்கே அகத்தியர் தனது மனைவி லோபாமுத்ராவுடன் இருப்பது போன்ற படத்தை வைத்து பூஜை நடைபெற்றது. அந்தப் பூஜையில் மலர்களை விட, பச்சிலைகள், வில்வம், துளசி ஆகியவற்றையே பயன்படுத்தினார்கள். பச்சிலைகளின் மணம் அங்கே நிரம்பியிருந்தது. அப்போது மருத்துவர் ஒரு பாடலை எனக்கு கற்றுக் கொடுத்து சொல்லச் சொன்னார்: ‘ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே கடலுண்ட காருண்யரே கும்பமுனி குருவே சரணம் சரணம்’. இந்தப் பாடல் இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இந்தப் பாடலின் பொருள் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ‘‘இந்தப் பாடலைச் சொல்லிக்கொண்டே இருந்தால் ஆரோக்கியமாக இருப்பாய், நன்றாகப் படிப்பு வரும்’’ என்று சொன்னார் சித்த மருத்துவர். உண்மை தான்.

இந்தப் பாடலின் பொருள் தெரிந்தபோது அகத்தியரைத் துதிக்கும் பாடல் என்பதோடு அவர் ஒருமைப்பாட்டின் அடையாளம் என்ற புரிதலும் தோன்றியது. முதல் இரண்டு அடிகளால் தமிழுக்கு இலக்கணம் தந்தவர் சிவயோகியான சித்தர் என்று தமிழோடு அடையாளப் படுத்தப்படுகிறார். அடுத்த இரண்டு அடிகளும் கடலைக் குடித்தவர், குடத்தில் பிறந்தவர் என வடமொழி சொல்லும் புராணங்களோடு தொடர்புப் படுத்தப்படுகிறார். ஆக, பாரத தேசத்தை இணைக்கும் நம்பிக்கைகளுள் அகத்தியரின் வரலாறு முக்கியமானது.

தமிழர்கள் கொண்டாடும் அகத்தியர், முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான சிவபெருமானிடம் தமிழ் பயின்று தமிழ் இலக்கணம் தந்தவர். தமிழரின் அறிவுப் பொக்கிஷமான சித்த மருத்துவத்தைத் தந்தவரும் அவரே. அவர் இயற்றியதாக பதினான்கு நூல்கள் இருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அவர் பெயரால் தமிழில் கிடைக்கின்றன. அவற்றை அவரே இயற்றியிருப்பதாகவும், அவருக்குக் காணிகையாக்கும்படி பல அறிஞர்களும் எழுதி சமர்ப்பித்ததாகவும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் அகத்தியர் தந்த அளப்பரிய பங்களிப்பு காரணமாகவே, பின்னர் வந்த அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியை அவருக்கு சமர்ப்பித்துள்ளனர்.

அகத்தியர் நூல்கள் அனைத்தும் மருத்துவ அறிவியல் தொடர்பானவை. உடலியல் சார்ந்த நூல்கள் மட்டுமின்றி, மனநோய்கள் மற்றும் அதற்கான மருத்துவம் பற்றி விளக்கும் நூல்களும் அகத்தியர் இயற்றியதாகக் கிடைக்கின்றன. ‘அகத்திய சம்ஹிதை’ என்னும் வடமொழி வைத்திய நூல் ஒன்றும் இருக்கிறது. அதுவும் அகத்தியர் இயற்றியதே. இதனால் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியும் அவரது கண்டுபிடிப்புகளும் தமிழில் மட்டுமல்ல, சம்ஸ்க்ருதத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை புலப்படுகிறது. சித்தர்கள் பற்றிய பெருமிதம் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்நாளும் உண்டு.

மெய்யுணர்வு, மெய்யியல் என தன்னையறிதல் பற்றிய ஞானம் கொண்டவர்கள் சித்தர்கள். அவர்களால் அனல் மேல் இருக்க முடியும், புனல் மேல் நடக்க முடியும், கூடு விட்டுக்கூடு பாய்வது என ஓர் உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு உயிரைச் செலுத்த முடியும் என மக்கள் மனங்களில் நம்பிக்கை இன்றைக்கும் இருக்கிறது. விஞ்ஞானத்தைத் தாண்டியதே மெய்ஞானம் என்ற புரிதல் தமிழர்களிடம் ஆழமாக இருப்பதற்கு சித்தர்களே முழுமுதல் காரணம். அத்தகைய சித்தர்களில் முதன்மையானவராக இருப்பவரும் அகத்தியரே. அகத்தியர் மலை, அகத்தியர் அருவி, அகத்தியர் கோயில், அகஸ்தீஸ்வரர் என இறைவனின் திருநாமம் என்று தமிழரின் ஆன்மிகத் தேடலின் பொருளாக இருப்பவரும் அகத்தியர்.

தமிழ் மொழியோடு அகத்தியருக்கான தொடர்பும் பிரிக்கவியலாதது. அகத்தியம் தமிழின் முதல் இலக்கண நூல். அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் இன்றைக்குத் தமிழின் பழம்பெரும் இலக்கண நூலாக விளங்குகிறது. தொல்காப்பியரோடு சேர்த்து அகத்தியருக்கு 12 மாணாக்கர்கள் இருந்ததாகவும் அவர்களுள் பெண்பால் புலவரான காக்கைப் பாடினியும் இருந்தார் என்று புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூல் சொல்கிறது. அகத்தியரின் 12 சீடர்களும் செய்த நூலே பன்னிருபடலம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியன், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைபாடினி, நற்றத்தன், வாமணன் ஆகிய பன்னிருவர் அகத்தியரின் மாணாக்கர்கள் என்று பேரகத்தியத்திரட்டு என்னும் நூல் கூறுகிறது.

தமிழகத்துக்கு காவிரி கிடைத்த வரலாற்றிலும் அகத்தியர் இடம்பெற்றிருக்கிறார். தமிழ் மொழியில், சமயத்தில், ஞானத்தில் அகத்தியர் இப்படி இடம்பெற்றிருக்கிறார் என்றால் சம்ஸ்க்ருதத்தில் அகஸ்தியர் என இவர் போற்றப்பட்டு வருகிறார். வால்மீகி ராமாயணத்தில் அகஸ்தியர் ராமருக்குப் போரில் வெற்றி பெற சூரியனை வழிபடுமாறு கூறி, ‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்ற ஸ்லோகத்தை வழங்கியதாக இருக்கிறது. மந்திரபலம் கொண்ட ஆயுதங்களை ராமருக்கு வழங்கியதாகவும் வருகிறது. கம்பரின் ராமாயணத்திலும் அகத்தியர் போற்றப்படுகிறார். ‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ (36) என்று கூறுகிறார். ராமர் அகத்தியரின் பாதம் பணிந்து வணங்கினார் என்று சொல்லுமிடத்து அகத்தியரின் பெருமைகளை சொல்ல வந்த கம்பர் அவரை, பெருமாள் தனது பாதங்களால் மூவுலகையும் அளந்ததைப் போல அகத்தியர் தமிழால் இந்த உலகத்தை அளந்தவர் என்று புகழ்கிறார்.

ராமாயணத்தைத் தாண்டி ரிக் வேதத்தில் அகத்தியரின் 26 ரிக்குகள் இடம்பெற்றுள்ளன. வேதம் தந்த ரிஷிகளுள் ஒருவராக அகஸ்தியர் இருக்கிறார். அதோடு, அவர் வசிஷ்டரின் சகோதரரும் ஆவார். சப்தரிஷிகள் என்றும் சப்தரிஷி மண்டலம் என்றும் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. சப்தரிஷிகளுள் அகஸ்தியரும் ஒருவர். அகஸ்தியர் பற்றிய புராணச் செய்திகள் ஏராளம். அவர் கற்புக்கரசி என்று போற்றப்படும் லோபாமுத்ராவை மணந்தவர். அகஸ்தியரின் பொருட்டு லோபாமுத்ரா தனது கற்புத் திறத்தால் சூரியனை உதிக்காமல் நிறுத்தினார் என்ற கதை, இன்றைக்கும் கிராமப்புறங்கள் வரை அனைவரும் அறிந்ததே.

தமிழகத்தில் சித்தர் என்று போற்றப்பட்டால், பாரதத்தில் அவர் ரிஷி என அறியப்படுகிறார். மருத்துவத்துறையில் அவர் பாரதம் முழுவதும் மருத்துவத்தைத் கண்டறிந்து தந்தவர் என்று ஒரே விதத்தில் போற்றப்படுகிறார். புராணக் கதைகளில் சிவனோடும், ராமரோடும் தொடர்பு கொண்டவராக வருகிறார். அதனைத் தமிழ் இலக்கியங்களும் வழிமொழிகின்றன. வடதிசையில் இருந்து தென்திசை வந்து இங்கேயே தங்கி விட்டவர் என்பதையும் வடமொழி, தமிழ் இரண்டும் ஒப்புக் கொள்கின்றன. ஆக, பாரத தேசத்தில் மொழி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர் என்பதற்கு அகஸ்தியர் உதாரணமாக இருக்கிறார். பாரதம், அதன் கலாசாரம், நம்பிக்கை இவற்றால் ஒன்றுபட்டே இருந்தது என்பதை இவரது வரலாறு மெய்ப்பிக்கிறது.

தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு அகத்தியரும், அகஸ்தியரும் வெவ்வேறானவர்கள் என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு. அகத்தியரின் வரலாறு லோபாமுத்ராவே அவரது மனைவி என்று தெளிவாகச் சுட்டுகிறது. கடலுக்குள் ஒளிந்து கொண்ட தாரகன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக இந்திரன் முயன்றபோது அகத்தியர் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று கடல் நீர் முழுவதையும் குடித்து விடுகிறார். இதனால் வெளிப்பட்ட தாருகன் முதலான அரக்கர்களை இந்திரன் அழிக்கிறான். பின்னர் மீண்டும் அகத்தியர், தான் குடித்த கடல்நீரை வெளியே விட்டு கடலை நிலைப்படுத்துகிறார் என்று வடமொழிப் புராணம் கூறுகிறது.

கம்பரும் இந்த நிகழ்வைப் பதிவு செய்கிறார். ‘கடலெல்லாம் உண்டு, அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான்’ என்று அகத்தியர் கடல்நீர் முழுவதையும் குடித்த நிகழ்வைச் சொல்கிறார். கம்பரைக் காட்டிலும் தமிழுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்தவர்கள் யாருண்டு? அவரது சொல் நமக்கு ஆதாரம் ஆகும். ஆக, அகத்தியர் இந்த தேசம் முழுவதற்கும் பொதுவானவர்.

வடமொழியும் தமிழும் ஒன்றுக்கொன்று விரோதம் கொண்டவை; தென்னாடும் வடநாடும் வேறுபட்டவை என்பன போல வைக்கப்படும் கருத்துகள் அர்த்தமற்றவை. இரண்டும் நமக்குச் சொந்தமானவையே என்பது அகத்தியர் வரலாற்றால் நாம் உணர வேண்டியதாகும். தமிழுக்கு உயிர் தந்த அகத்தியர் இந்த மண்ணின் தேசிய சிந்தனைக்கும் உயிரூட்டுகிறார்.

தொன்மையும் மேன்மையும் கொண்ட தமிழ்மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; மேன்மேலும் வளர வேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் நமது மொழியின் வரலாற்றை அதனை நிலைநிறுத்தியிருக்கும் மகான்களின் ஒப்பற்ற பணிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சிவயப்படுதல் மட்டுமே மொழியைக் காத்துவிடாது. மொழி வாழும் காலம் வரையே அந்த இனமும் வாழும். ஆகவே தமிழ் மொழியை நாம் முழுமையாகப் பிழையறக் கற்க வேண்டும். நமது மொழியில் நிரம்பிக் கிடக்கும் முன்னோர்களின் அறிவியல் அறிவினைப் பாதுகாக்க வேண்டும். அதனை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்குக் காழ்ப்புணர்வற்ற விசாலமான பார்வை வேண்டும். நம் முன்னோர்கள் கொண்டிருந்த பரந்த மனப்பான்மையை, மொழியறிவை மெய்யுணர்வை நோக்கி நகர்வதே அதற்கான சிறந்த ஒரே வழி.

நன்றி - தினமணி 28-01-2025

கருத்துரையிடுக

0 கருத்துகள்