Advertisement

Responsive Advertisement

மியான்மாரில் தமிழர்கள் – ம(றை)றக்கப்பட்ட அடையாளத்தின் தேடல்...


இலங்கை, மலேசியாவிற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடாக மியான்மார் (பர்மா) விளங்குகிறது. சுமார் 5.50 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்த நாட்டில், ஏறத்தாழ 10 லட்சம் தமிழர்கள் குடியேறி வாழ்கின்றனர். எண்ணிக்கையில் பெருமளவில் இருந்தாலும், அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிலை மிகவும் பின்தங்கியதாகவே உள்ளது.

தமிழர்களின் மியான்மார் குடியேற்றம் பெரும்பாலும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பமானது. 19ஆம் நூற்றாண்டில் பர்மா இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்ததால், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். ரயில்வே கட்டுமானம், துறைமுக மேம்பாடு, எண்ணெய் மற்றும் சுரங்கத் தொழில், வேளாண்மை போன்ற துறைகளில் தமிழர்கள் முக்கிய பங்காற்றினர். சிலர் சிறு வணிகம், கல்வி, நிர்வாகம் போன்ற துறைகளிலும் ஈடுபட்டனர். சிலர் வட்டிக்கு பணம் கொடுத்தும் சிறு வங்கிகளாகவும் செயல்பட்டார்கள்.

ஆனால் 1948-இல் பர்மா சுதந்திரம் பெற்றபோது, தமிழர்களின் நிலைமை சிக்கலானதாக மாறியது. "மூலக்குடிமக்கள்" பட்டியலில் அவர்கள் இடம்பெறாததால், அரசியல் மற்றும் சமூக உரிமைகள் குறைக்கப்பட்டன.


மியான்மாரின் அரசியல் அமைப்பு நீண்டகாலமாக ராணுவ ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மியான்மார் குடியுரிமைச் சட்டத்தில் "மூல இனக்குழுக்கள்" பட்டியலில் தமிழர்கள் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் “இரண்டாம் நிலை குடிமக்கள்” போல நடத்தப்படுகிறார்கள். அரசு, நிலங்களை வாங்கும் உரிமை வழங்கப்படாமையால், தமிழர்கள் பெரும்பாலும் வாடகை நிலங்களில் அல்லது அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். தேர்தல் அரசியலில் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் இல்லை. அவர்களின் குரல் அரசியல் தளத்தில் கேட்கப்படுவதில்லை.

மியான்மாரின் கல்வியறிவு விகிதம் 90% ஆக இருந்தாலும், தமிழர்களின் கல்வி நிலை பின்தங்கியதாகவே உள்ளது. கல்வி கற்றாலும் அரசு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதால், பல குடும்பங்கள் குழந்தைகளை பள்ளிக் கல்வியிலேயே நிறுத்திவிடுகின்றன. தமிழர்கள் பெரும்பாலும் கூலி வேலை, விவசாயம், கைத்தொழில், சிறு வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபடுகின்றனர். மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று தொழிலாளராகப் பணிபுரியும் தமிழர்கள் அங்கிருந்து பணம் அனுப்பி குடும்பங்களை நடத்துகின்றனர்.

மியான்மாரில் தமிழர்கள் தங்கள் மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றனர். சில தமிழ் பள்ளிகள், சங்கங்கள், கோவில்கள் மூலம் மொழி பாதுகாக்கப்படுகிறது. ஆனால் தலைமுறை மாற்றத்தோடு தமிழ் பேசும் திறன் குறைந்து வருகிறது.


சைவ, வைணவ மற்றும் முருகன் கோவில்கள் தமிழர்களின் கலாச்சார மையமாக விளங்குகின்றன. திருவிழாக்கள் இன்னும் சமூக ஒற்றுமையை உயிர்வாழ வைத்திருக்கின்றன. பர்மிய மொழி மற்றும் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துவதால், தமிழ் கலாச்சார அடையாளம் மெல்ல சுருங்குகிறது.

தமிழர்கள் பெரும்பாலும் மத்திய தரத்திற்குக் கீழ் வாழ்கின்றனர். வேலைவாய்ப்புகள் குறைவதால், பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குள் சிக்குண்டுள்ளனர். தொழில் முன்னேற்றம் பெறும் வாய்ப்புகள் மிகக் குறைவு. வெளிநாடுகளில் இருந்து வரும் பணமே (Remittance) பல குடும்பங்களின் உயிர்நாடியாக உள்ளது.

தமிழ் மொழிக் கல்வி குறைவதால், அடுத்த தலைமுறையில் தமிழ் அடையாளமே மங்கும் அபாயம். குடியுரிமை பிரச்சினை நீடித்தால், தமிழர்கள் அரசியல் குரலற்ற சமூகமாகவே மாறிவிடுவார்கள். “மூல இனக்குழுவல்ல” என்ற நிலை, சமூக பாகுபாட்டை மேலும் வலுப்படுத்தும்.


மியான்மார் தமிழர்களின் உரிமைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கல்வி, மொழி, கலாச்சார பாதுகாப்புக்காக சர்வதேச அளவில் உதவித் திட்டங்கள் கொண்டு வர வேண்டும். குடியுரிமை, நில உரிமை, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் தமிழர்களுக்கான உரிமையை வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் சமூக பங்களிப்பை உணர்ந்து, அவர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும்.

மியான்மாரில் வாழும் தமிழர்கள் வரலாற்றுச் சுமையுடன் வாழும் மறக்கப்பட்ட மக்கள். கல்வியும் உழைப்பும் இருந்தும், உரிமைகள் மறுக்கப்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில், இந்திய அரசு, உலக தமிழ்ச் சமூகங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இணைந்து அவர்களுக்கான உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், இன்னும் சில தலைமுறைகளில் மியான்மாரில் தமிழர் அடையாளமே அழிந்து போகும் அபாயம் மிகுந்துள்ளது.
-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்