Advertisement

Responsive Advertisement

கண்ணன் கதை - 1 - பி.என்.பரசுராமன்



மகாவிஷ்ணுவின் மகிமை எப்போதும் நிறைந்திருக்கும் மதுராபுரி நகரில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ரதம் ஓடிக்கொண்டிருந்தது. தெருவெங்கும் பலவிதமான அலங்காரம். தெருவின் இரண்டு பக்கங்களிலும் மக்கள், கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொடியவனான கம்சன் தேர் ஓட்டினான். புதுமணத் தம்பதியான வசுதேவரும் தேவகியும் அந்தத் தேரில் உட்கார்ந்திருந்தனர். மங்கல வாத்தியங்களான சங்கு, மிருதங்கம், துந்துபி ஆகியவை முழங்கின. தேர் சீராக ஓடியது. கம்சன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்பட்டான்.

சத்தியவானான வசுதேவர் மீது உள்ள அளவற்ற அன்பினாலோ அல்லது ‘கம்சன் கூட ஒரு நல்ல காரியம் செய்கிறானே!’ என்ற எண்ணத்தாலோ மக்களும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவர் மகிழ்ச்சியையும் குறிப்பாக கம்சனின் நிம்மதியையும் அமைதியையும் குலைக்கும் விதமாக ஓர் அசரீரி கேட்டது.

‘‘மூடனே... கம்சா! நீ இப்போது அழைத்துச் செல்லும் இந்த தேவகியின் எட்டாவது கர்ப்பம் உன்னைக் கொல்லப் போகிறது!’’ என்றது.

அதைக் கேட்டதும் கம்சனுக்கு மரண பயம் வந்துவிட்டது. நல்லவன், தனக்கு ஏற்படும் நல்லதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வான். தீயவனோ தனக்கு உண்டாகும் ஆபத்தை, அடுத்தவர்களிடம் தள்ளி விடுவான்.


தீயவனான கம்சனும் இதையே செய்தான். தனக்கு மரணம் வரப் போகிறது என்றதும் தேரை நிறுத்தினான். ஒரு கையால் வாளை உருவி, மறு கையால் மணக் கோலத்தில் இருந்த தேவகியின் கூந்தலைப் பிடித்து அவளைக் கொல்ல முயன்றான்.

தடுத்தார் வசுதேவர், ‘‘போஜ வம்சத்துக்குப் புகழ் சேர்க்க வேண்டிய நீ, இப்படிச் செய்யலாமா? உன் தகுதிக்கு இது சரியா? போடு கத்தியைக் கீழே! தேவகியின் தலைமுடியை விடு! ஒவ்வொரு ஜீவன் பிறக்கும்போதும், அதன் மரணமும் நிச்சயிக்கப்படுகிறது. அது இன்றா, நாளையா அல்லது நூறு வருடங்கள் கழித்தா என்பது தெரியாது. மற்றபடி, மரணம் நிச்சயம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. மனிதன் எப்படி ஒரு காலைப் பூமியில் ஊன்றிக் கொண்டு அடுத்த காலைத் தூக்கி வைத்து நடக்கிறானோ அது போல, ஜீவன் வேறு ஓர் உடம்பை அடைந்து முந்தைய உடம்பை விடுகிறது. இதை உணரும் எவரும் மரணம் குறித்துப் பயப்பட மாட்டார்கள். விவரம் அறிந்த நீ, மனதில் இரக்கம் உடையவன். அதனால் தேவகியைக் கொல்லாதே!’’ என்று அறிவுரை சொன்னார்.

‘‘கொன்றே தீருவேன்!’’ என்று பிடிவாதம் பிடித்தான் கம்சன்.

சட்டென்று யோசனையில் ஆழ்ந்த வசுதேவர், ‘எப்படியாவது இதைத் தடுத்தாக வேண்டும். கம்சன் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயத்தைச் சொல்லியாவது, இந்தப் பாவத்தைத் தடுக்க வேண்டும். ‘பிறக்கும் குழந்தைகளைத் தருகிறேன்; தாயை விட்டுவிடு!’ என்று சொன்னால் இவன் மனம் ஒரு வேளை மாறலாம். மேலும், எனக்குக் குழந்தைகள் பிறக்கும் என்பது என்ன நிச்சயம்? அதுவரையில் கம்சன் உயிருடன் இருப்பான் என்பது என்ன நிச்சயம்? உலகமே அதிர்ஷ்டத்தில்தான் அடங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தா மனிதன் நடமாடுகிறான்? இந்தக் கொலையை முதலில் தடுக்க வேண்டும். மற்றவை தெய்வத்தின் கையில்!’ என்று தீர்மானித்த வசுதேவர், சிரித்தபடியே கம்சனை நோக்கித் திரும்பினார்.


‘‘கம்சா! நீ தேவகிக்கு பயப்படவில்லையே? இவளுக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளையால் உனக்கு மரணம் என்றுதானே அசரீரி சொன்னது? எட்டாவது பிள்ளை என்ன? மொத்தப் பிள்ளைகளையும் உன்னிடம் தந்து விடுகிறேன்!’’ என்றார் வசுதேவர்.

சற்று நேரம் யோசித்த கம்சன் அதற்கு ஒப்புக் கொண்டான். ‘அதுவும் சரிதானே?’ என்று தீர்மானித்தவன், தேவகியை உடனே விட்டுவிட்டான். அதன் பின் உத்தமர் வசுதேவர், மனைவியுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.

நன்றி - சக்தி விகடன் 25-06-2006

கருத்துரையிடுக

0 கருத்துகள்