நாம் வாழும் இந்தக் காலத்தில், நவீன தொழில்நுட்பம் ஒருபுறம் இளைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையைத் திறக்கிறது; மறுபுறம், அவர்களைத் தவறான வழியில் தள்ளும் அபாயகரமான செயலிகளும் பெருகி வருகின்றன. குறிப்பாக, இளைய சமுதாயம் இன்று எதிர்கொள்ளும் ஒரு கடுமையான சமூகச் சிக்கலாக, பணம் பறிக்கும் நோக்கத்துடன் இயங்கும் சில கட்டண அரட்டை (Paid Chatting) மற்றும் நேரலை வீடியோ (Live Video) செயலிகளின் ஆதிக்கம் உள்ளது.
இவற்றின் வேர் எங்கே? அடிப்படை காரணம் என்ன?
பகுத்தறியும் அறிவு குறைந்துக் காணப்படுவதால், தற்கால இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பலர் தாழ்வு மனப்பான்மையுடன் (Inferiority Complex) இருப்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உளவியல் பலவீனங்களையே சமூக விரோதக் கும்பல் தங்கள் முதலீடாகப் பயன்படுத்துகிறது. கல்வி, தோற்றம், அல்லது சமூகத் தகுதிகளில் தங்களைக் குறைத்து மதிப்பிடுவது, மற்றவர்களுடன் ஒப்பிடுவது, நிராகரிக்கப்படுவோமோ என்ற பயம்-இவையே இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு அடிப்படை. மேலும் சக நண்பர்களின் freakout தன்மை மற்றும் எல்லாவற்றிலும் அவர்கள் பெறும் வெற்றிகளைப் பார்க்கும்போது, "நாமும் அவர்களைப் போல இல்லையே" என்ற தகுதியின்மை உணர்வு (Feelings of Inadequacy) அவர்களுக்கு ஏற்படுகிறது.
அதே சமயம், தாங்கள் இப்படி இருப்பதால் எங்கே நம்மை அவர்கள் சேர்க்காமல் போய்விடுவார்களோ என்ற பயம் (Fear of Missing Out) அவர்களை இந்தச் செயலிகளை நோக்கி மேலும் தள்ளுகிறது.
நிஜ வாழ்வில் கிடைக்காத வரவேற்பையும், கவனத்தையும் அளிப்பதாக மயக்கி, இளைஞர்களின் இந்த உளவியல் பலவீனங்களை இந்தச் செயலிகள் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
Vibely, Friend, Echo, Tango, Chamath, Bigo Live, Azar போன்ற பல கட்டண அரட்டை மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் செயலிகள் இந்த ஆபத்தான பட்டியலில் உள்ளன.
இங்கு இத்தகைய ஆப்களில் பேசப்படும் உரையாடல்கள், நிஜமான உறவுகள் அல்ல. இவை 'Quasi-Social Engagement' என்று அழைக்கப்படும் போலியான சமூக ஈடுபாடுகளே. உண்மையான சவால்களோ, அர்ப்பணிப்புகளோ இல்லாத இந்த மேலோட்டமான உறவுகள், ஒருவருக்குத் தற்காலிக திருப்தியைத் தரலாம். ஏதோ சாதித்ததை போன்ற உணர்வினை அவர்களுக்குத் தரலாம்.
ஆனால், இது காலப்போக்கில் உண்மையானச் சமூகத் தொடர்புகளைத் தவிர்த்து, அவர்களை மேலும் தனிமைக்கும், தனிமனிதப் புரிதல் குறைபாடுகளுக்கும் ஆளாக்குகிறது.
ஒரு பதின்ம வயது இளைஞன், தன்னுடைய தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, நிஜ வாழ்வில் ஒரு பெண்ணுடன் பேசத் தயங்கும்போது, இந்தச் செயலிகளில் உள்ள பல பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணிக்கணக்கில் பேச ஆரம்பிக்கிறான். அவனுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைப்பதுபோல் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் பொன்னான நேரத்தையும், பணத்தையும் இந்தச் செயலிகள் உறிஞ்சுகின்றன.
அந்த இளைஞன் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலேயே, அவனுடைய தனிப்பட்ட தகவல்கள் (Personal Data) சமூக விரோதக் கும்பலால் திருடப்படுகின்றன. உரையாடல்கள், வீடியோ அழைப்புகள் மூலம் பெறப்பட்ட தனிப்பட்ட விவரங்களை வைத்து, பின்னர் அவனை மிரட்டிப் பணம் பறிக்கும் (Extortion) கொடூரச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தற்போதைய சூழலில், பணத்தின் தேவைக்காகவும், எளிதில் பணம் வருகிறது என்பதற்காகவும், கல்லூரிகளில் படிக்கும் நிறைய இளம் பெண்கள், இதன் சட்ட மற்றும் சமூக ஆபத்தை அறியாமல் இத்தகைய உரையாடல்களுக்குத் துணை போகிறார்கள். இவர்கள் ஏஜென்சிகள் மூலம் நியமிக்கப்பட்டு, பேசிய கால அளவிற்கேற்ப சம்பளம் பெறுகிறார்கள்.
மேலும், சில செயலிகள் தரும் நேரடி வீடியோ அழைப்பு வசதிகளில் எல்லை மீறிய கட்டுக்கடங்கா ஆபாசமும் கலந்திருக்கிறது. இதற்கு எந்தவித சென்சாரும் இல்லாததால் 10 வயது சிறுவர்கள் கூடப் பாதிக்கப்படுவது சமூகத்தின் அவலமாகும்.
இளைய சமுதாயத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இத்தகைய ஆபத்தான மற்றும் சமூக விரோதச் செயல்பாடுகளுக்குத் துணை போகும் செயலிகள் மீது நம் அரசாங்கங்கள் உடனடியாகக் கண்காணிக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும். தனிமனிதப் பாதுகாப்பை உறுதிசெய்யும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் உரையாடுவது அவசியம். அவர்கள் மனநலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்போது, தீர்மானிக்காமல் (Non-judgmental) அதைக் கேட்க வேண்டும். மேலும், பணம் பறிக்கும் கும்பலின் ஆபத்துகள் குறித்து அவர்களுக்கு தெளிவான விழிப்புணர்வை அளிக்க வேண்டும்.
இளைஞர்களே விழிப்படையுங்கள்!
தற்காலிக இன்பத்திற்காக இந்த மாய வலைகளில் சிக்க வேண்டாம்! உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து, புதிய திறன்களைக் கற்று, நிஜ சமூகத் தொடர்புகளைப் பேணுங்கள். போலி உறவுகளுக்குப் பின்னால் ஓடாமல், நிஜமான வாழ்வைத் தேடுங்கள். நாளை அவர்கள் உங்களை பின் தொடர்வார்கள்.
விழித்தெழுவோம்! இளைய சமுதாயத்தைக் காப்போம்!
-S.B.

0 கருத்துகள்