கம்சன், ‘‘என்னைக் கொல்ல வந்த இதை நான் கொன்றுவிட வேண்டும்!’’ என்று குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்து அதன் தலையை கல்லில் அடிக்க ஓங்கினான். அப்போது அவனே எதிர்பார்க்காத ஆச்சரியம் நடந்தது.
அவன் கைகளில் இருந்து விடுபட்ட குழந்தை, ஆகாயத்தில் உயர்ந்து துர்க்காதேவியாகி எட்டு திருக்கரங்களுடன் காட்சியளித்தாள். அந்தக் கரங்களில் வில், அம்பு, சூலம், கேடயம், கத்தி, சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவை இருந்தன. கந்தர்வர்கள், சித்தர்கள் போன்றோர் அவளை துதித்துக் கொண்டிருந்தனர்.
அம்பிகை, கம்சனை அழைத்து எச்சரித்தாள். ‘‘முட்டாளே! காலத்தை வெல்ல முடியாது. உன்னை அழிப்பவன் பிறந்துவிட்டான். நிச்சயம் உன்னை அழிப்பான். இரக்கம் காட்ட வேண்டிய குழந்தைகளை இனி கொல்லாதே!’’ என்று கூறி மறைந்தாள்.
இந்த இடத்தில், பாகவதமோ நாராயணீயமோ சொல்லாத ஓர் அரும் தகவலை ஒரு மலையாளக் கவிஞர் சொல்கிறார்:
‘ஆகாயத்தில் இருந்த அம்பிகை, ‘‘கம்சா! உன்னை எனது சூலத்தால் நானே குத்திக் கொல்ல முடியும். ஆனால், கொல்ல மாட்டேன். ஏனெனனில், தெரிந்தோ தெரியாமலோ, என் கால்களைப் பிடித்தாய்! திருவடிகளைப் பற்றிய தீயவனுக்கும் அருள் புரியும் தாய் நான். இப்போது நீ, தப்பித்துப்போ!’ என்று சொல்லி மறைந்தாள்.
கம்சன் மனம் திருந்தினான். ‘அம்பிகை சொன்ன வாக்கு உண்மை. இவர்கள் தோஷம் அற்றவர்கள்’ எனத் தீர்மானித்து, வசுதேவரையும் தேவகியையும் உடனே விடுதலை செய்தான். அவர்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்’ என்று சொல்கிறார் அந்தக் கவிஞர்.
அதெல்லாம் இருக்கட்டும். கோகுலத்தில் யசோதையின் பக்கத்தில் இருக்கும் கண்ணனைத் தேடி எல்லோரும் ஓடி வரப்போகிறார்கள். அதற்குள், நாம் அங்கே சென்று விடலாம், வாருங்கள்!
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006


0 கருத்துகள்