Advertisement

Responsive Advertisement

பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி - கவியரசு கண்ணதாசன்


திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை மரணத்தின்போதுதான் கழற்ற வேண்டும். 
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதுகூடக் கழற்றக் கூடாது. அவ்வளவு புனிதமானது அது.
 
ஓர் உத்தமியின் கழுத்திலுள்ள தாலியை யார் அபகரித்தாலும் அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத் திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக்க விரும்பினேன். 

நன்கு பாடக் கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன். 

ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர், நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையில் இருந்தார். அவர் மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை. அரக்கு மஞ்சளை, மஞ்சள் நூலில் கோத்து அணிந்திருந்தார். 

தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப் பட்டிருப்பதாக அந்த நடிகர் கூறினார். உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரையும் கூட்டிக் கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டுக்குப் போனேன். 

நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப் பட்டிருந்தன. 

தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன். 

அவர் பணத்தையும் வாங்கிக் கொண்டு, ‘‘ஏராளமான வட்டி பாக்கி இருக்கிறது. இதை வட்டிக்கு வரவு வைத்துக் கொள்கிறேன்; தாலியைத் தர முடியாது!'' என்று சொல்லிவிட்டார். ஆக, பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை. 

பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர் புதிய தாலியையே வாங்கி, தன் மனைவியின் கழுத்தில் கட்டினார். 

என் படம் நடந்து கொண்டிருந்த போதே, அந்த நடிகர் ‘இன்சால்வென்ட்’ ஆனார். ஆனால், மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும், பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணமும் வந்தது. ‘இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துகள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

அவர் மனைவி உத்தமி. புராண காலத்துச் சீதை. வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி. 

அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே... அவரது குடும்பம் பட்ட பாடும் அதில் ஏற்பட்ட குழப்பமும் அவர் நோயில் இழுத்துக் கிடந்து மாண்டதும் விவரிக்க முடியாத பெருங்கதை. 

அந்தத் ‘தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்துவிட்டது! இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டிவிட்டது. 

பாவத்தின் விலை, அவரது வாழ் நாளிலேயே கிடைத்துவிட்டது.

அர்த்தமுள்ள இந்துமதம் நூலிலிருந்து…

கருத்துரையிடுக

0 கருத்துகள்