‘தந்தை கடவுளுக்குப் பூஜை செய்கிறார். நானும் பூஜை செய்கிறேன். அப்படித்தான் எல்லோருமே பூஜை செய்வார்களா?’
அரிஸ்டாட்டிலிடம் அலெக்சாண்டர் விரும்பிக் கேட்ட கேள்வி இது. கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தயாராகிவிட்டான் அலெக்சாண்டர் என்பது புரிந்துவிட்டது.
‘ஆமாம், அதில் என்ன சந்தேகம்?’
‘இருக்கிறது. நம்முடைய அரண்மனையில் நிறைய பூஜை சாமான்களை வைத்துப் பூஜை செய்கிறோம். அப்படித்தான் எல்லா வீடுகளிலும் பூஜை நடக்குமா?’
பதில் சொல்லத் தயாரானார் அரிஸ்டாட்டில்.
‘நம் அரண்மனையில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கிரேக்கருடைய வீட்டிலும் பூஜை அறை தனியாக இருக்கும். அல்லது பூஜை செய்வதற்கென்று பிரத்யேகமாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அப்படி பூஜைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நெருப்பு குண்டம் இருக்கும். அதில் அனுதினமும் நெருப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும். அன்றாடம் சமைக்கிற பொருள்களை அப்படி எரிகின்ற நெருப்புக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். மது அருந்துவதற்கு முன்னர்கூட இரண்டு சொட்டு மதுவை தரையில் பூமி தெய்வத்துக்கு அர்ப்பணித்துவிட்டுத்தான் அருந்துவார்கள்.
தங்களுடைய மூதாதையர்களை அக்னியின் வடிவத்தில் வைத்து வணங்குவது கிரேக்கர்களின் நம்பிக்கை. சாம்பிராணி போன்ற பூஜைப்பொருள்கள் எல்லாம் அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படும்.”
அரிஸ்டாட்டில் சொல்லிக் கொண்டே போக, அலெக்சாண்டரின் மனத்தில் அடுத்த கேள்வி தயாராக இருந்தது.
‘நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள் என்று சொன்னாரே தந்தை, அது உண்மையா?’
‘ஆமாம் அலெக்சாண்டர். கிரேக்கர்களுக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான தெய்வங்கள் இருந்தன, இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்கும் அளவுக்கு ஏராளமான தெய்வங்கள். ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனியே ஆலயங்கள் இருக்கும். அத்தனையும் அந்தந்த நகரத்தில் இருப்பவர்கள் உருவாக்கியவை.
அதைப்போலவே ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஆலயத்துக்கும் புராணங்கள், கதைகள் எல்லாம் உண்டு. ராட்சதர்கள், மோகினிகள், பிசாசுகள், மந்திரம், சூனியம், குறி போன்ற சங்கதிகளில் கிரேக்கர்களுக்கு நாட்டம் அதிகம். நம்பிக்கையும் உண்டு.’
அலெக்சாண்டரின் புருவங்கள் ஆச்சரியத்தால் உயர்ந்தன. கண்கள் படபடத்தன.
‘தந்தை ஏதாவது ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது தும்மினால் கோபம் கொள்கிறாரே, இதற்கு என்ன அர்த்தம்?
கிரேக்கர்களுக்கு இருக்கும் முக்கியமான நம்பிக்கைகளுள் தும்மலும் ஒன்று. இதை அபசகுனமாகக் கருதுவார்கள். அதேபோல வெளியில் செல்லும்போது பூனை குறுக்கே வந்துவிட்டாலும் கெட்ட சகுனம்தான். உடனே தரையில் கிடக்கும் மூன்று கற்களை எடுத்து நடுத்தெருவில் போட்டுவிட்டுப் புறப்படுவார்கள். இரவு தூங்கும்போது கனவுகள் வருவது சகஜம். ஆனால் அதற்கும் சில அர்த்தங்களைப் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அதன் பலன்கள்மீது அலாதியான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.’
சொல்லிவிட்டு அலெக்சாண்டரின் முதுகைத் தட்டிக்கொடுத்தார் அரிஸ்டாட்டில்.
அதன் அர்த்தம் இன்றைய சந்தேக வகுப்பு போதும். வேறு பயிற்சிகள் இருக்கின்றன என்பதுதான். புன்னகை தவழப் புறப்பட்டான் அலெக்சாண்டர்.”
அலெக்சாண்டர் - ஆர்.முத்துக்குமார் அவர்களின் நூலிலிருந்து...

0 கருத்துகள்