Advertisement

Responsive Advertisement

'உடனடி' உணவுப் பொருட்களின் பெருக்கம் - வளர்ச்சியா? அபாயமா?


சென்ற வாரத்தில் உத்தர பிரதேசத்தில் நொய்டா நகரில், தீபாவளி பண்டிகை இனிப்புகளுக்கான, 550கிலோ போலியான பனீர்கள் பிடிப்பட்டது நாட்டையே உலுக்கியுள்ளது. அதன் விளைவாய் எழுந்தது தான் இந்த கட்டுரை. 

சமீபகாலமாக, 'ரெடி-டு-குக்' (Ready-to-Cook) உணவுகள் (சப்பாத்தி, பரோட்டா, கட் செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள்) மற்றும் பால் பொருட்கள் (பனீர், தயிர், சீஸ்) சந்தையில் சரளமாகக் கிடைப்பது நவீன வாழ்க்கை முறைக்கு பொருட்கள் எளிதில் கிடைக்கும் வசதியை அளித்தாலும், இவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகள், மக்கள் ஆரோக்கியத்தின் மீது ஒரு பெரிய கவலையை விதைக்கின்றன. இட்லி தோசை மாவும் தரமானதுதானா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

இந்தியாவில் பனீர் அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவாக மாறியுள்ளது என FSSAI சமூக வலைத்தளங்கள் மூலம் எச்சரித்துள்ளது. குறைந்த லாபத்திற்காக உணவகங்கள் போலியான பனீர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாக FSSAI சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்பு (FSSAI) நடப்பாண்டில் நடத்திய சோதனைகளில், 83% பனீர் மாதிரிகள் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியுள்ளன என்ற சோதனைகளின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதில், சுமார் 40% பனீர்கள் உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் பாமாயில், சோப்புத் தூள், யூரியா, மற்றும் செயற்கை ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


முன்பு விசேஷ நாட்களுக்கு மட்டுமே சமைக்கப்பட்டு, ஒரு 'பண்டிகை உணவாக' இருந்த பிரியாணி, இன்று தெருவுக்குத் தெரு, நகரமெங்கும், 24 மணி நேரமும் கிடைக்கும் ஒரு சாதாரணமான உணவாகிவிட்டது. 

உண்மையில், பிரியாணி மத்திய கிழக்கு மற்றும் முகலாய உணவுப் பண்பாட்டிலிருந்து வந்த ஒரு உணவே அன்றி, தமிழ்நாட்டின் நேரடிப் பாரம்பரிய உணவு அல்ல. இத்தனை கடைகளுக்கும் தேவையான இறைச்சி, மசாலாப் பொருட்களின் தரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? பயன்படுத்தப்படும் எண்ணெய் எத்தனை முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது? உணவு வகைகளுக்கு வண்ணம் சேர்க்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் (Artificial Colours) மற்றும் சுவையூட்டிகள் (Flavour Enhancers) ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளன. இதைவிட முக்கியமான ஒன்று அதில் உபயோகப்படுத்தும் நீண்ட பாஸ்மதி அரிசி உண்மையில் செயற்கையானதே. அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கிலோ 40 முதல் கிடைக்கிறது.

மீன், மட்டன் மற்றும் கோழி இறைச்சிகள் அனைத்தும் சூப்பர் மார்க்கெட்களிலும், வீட்டிற்கே டெலிவரி செய்யும் விதத்திலும் கிடைப்பது நல்லதா எனும் கேள்வியும் எழுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed Foods), துரித உணவுகள் (Fast Food), மற்றும் அதிகப்படியான சிவப்பு இறைச்சியின் நுகர்வு ஆகியவை குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்கின்றன என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பனீர் போன்ற கலப்பட உணவுகளில் காணப்படும் செயற்கை ரசாயனங்கள், யூரியா, மற்றும் நச்சுகள் போன்றவை நீண்ட கால அடிப்படையில் செரிமான மண்டலம் மற்றும் உடலின் பிற உறுப்புகளில் அபாயகரமான விளைவுகளை (புற்றுநோய், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு) ஏற்படுத்தக்கூடும்.

சரி, இவற்றில் இருந்து எப்படி தப்புவது. ஒரே பதில் தான் சுய கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு மட்டுமே. உணவுப் பொருட்களின் பேக்கேஜிங்கில் FSSAI உரிமம் எண் மற்றும் தரக் குறியீடுகள் உள்ளனவா எனப் பார்க்கவும். இதிலும் போலி இருக்கலாம், தற்போது தான் போட்டாஷாப் போன்ற அப்ளிகேஷன்களில் எதுவானாலும் செய்ய முடிகிறதே. 'ரெடி-டு-குக்' பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், காலாவதி தேதி, மற்றும் பாதுகாப்பிற்காகச் சேர்க்கப்பட்ட ரசாயனங்கள் (Preservatives) ஆகியவற்றைப் படித்து, முடிந்தவரை குறைவான ரசாயனங்கள் உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். பனீர், சப்பாத்தி போன்றவற்றை வீட்டிலேயே தயாரிப்பது, கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற தயாரிப்பைத் தவிர்க்க சிறந்த வழியாகும். பிரியாணி போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்து, பாரம்பரியமான, நம் மண் சார்ந்த, புதிதாக சமைத்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.

உடனடி உணவுப் பொருட்களின் பெருக்கம் ஒரு சமூக மற்றும் பொருளாதார மாற்றம். ஆனால், கலப்பட அபாயங்கள் உள்ள நிலையில், இந்த வளர்ச்சி நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு அபாயமாக மாறாமல் இருக்க, உணவு உற்பத்தியாளர்களின் நேர்மையும், அரசின் கடுமையான கண்காணிப்பும், நுகர்வோரின் விழிப்புணர்வும் இன்றியமையாதவை. விழிப்புணர்வுடன் இருங்கள், ஆரோக்கியமானதை உண்ணுங்கள்.

- S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்