Advertisement

Responsive Advertisement

சைப்ரஸ் - 'பூனைகளின் சொர்க்கம்'


மத்தியதரைக் கடலின் நீலப் பரப்பில் பட்டுத் துண்டு போலப் படர்ந்திருக்கும் அழகிய நாடு சைப்ரஸ் தீவு. நீண்ட வரலாறு, தங்கத் திட்டுக்கள் பதித்த கடற்கரைகள், செழுமையான கலாச்சாரம் எனப் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இந்த நாடு, உலக அரங்கில் தனித்து மிளிர்வதற்கு முக்கியக் காரணம் அதன் இரண்டாவது குடிமக்கள் — பூனைகள்! ஆமாங்க பூனைகள் தான். சைப்ரஸின் மக்கள் தொகைக்கு நிகராக, அல்லது அதை விஞ்சும் அளவுக்கு இங்கு பூனைகள் நிறைந்திருப்பது ஒரு ஆச்சரியமான உண்மையாகும். இந்தத் தீவு, பூனைகளின் சொர்க்கமாகவே திகழ்கிறது.


சைப்ரஸில் மனிதனுக்கும் பூனைக்கும் இடையேயான பிணைப்பு என்பது இன்று நேற்று பூத்ததல்ல; அது வரலாற்றின் கருவறையில் இருந்து தொட்டுத் தொடர்வது. கி.மு. 7500ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் கண்டுபிடிப்பில், ஒரு கல்லறையில் மனித எலும்புக்கூட்டுடன் ஓர் இளம் பூனையும் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம், சைப்ரஸ் மண்ணில் நிலவும் இந்தப் பாசப் பிணைப்பு, உலகிலேயே மிகப்பழமையான மனிதர்-பூனை உறவுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை, அந்தப் பாசம் ஓர் அணையாத தீபமாகத் திகழ்கிறது.


கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலத்தில், 4-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற புனித ஹெலனா (Saint Helena), புனித பூமியில் (Holy Lands) "உண்மையான சிலுவையைக்" கண்டறிந்த பிறகு, அங்கிருந்து இரண்டு படகு நிறையப் பூனைகளை ஏற்றி வந்தார். சைப்ரஸில் ஏற்பட்ட பாம்பு தொல்லையை சமாளிக்கவே இந்தப் பூனைகள் கொண்டு வரப்பட்டதாகப் பழங்கதை கூறுகிறது. இந்தப் பூனைகளின் தலைமுறையே இன்று சைப்ரஸின் தெருக்களில் கம்பீரமாக உலாவருகிறது என நம்பப்படுகிறது. மேலும், பூனைகளுக்கான புகலிடமாகச் செயல்படும் புனித நிக்கோலஸ் பூனைகள் மடாலயம் (St. Nicholas of the Cats) இன்றும் சைப்ரஸில் நிலைத்திருக்கிறது.


இன்றைய சைப்ரஸ், சுமார் 12 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு தீவு. ஆனால், தெருக்களில் உலவும், துறைமுகங்களில் சோம்பல் முறிக்கும், கஃபேக்களின் வெளிப்புறங்களில் காத்திருக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதை ஒத்ததாக அல்லது அதிகமாகவே மதிப்பிடப்படுகிறது. தட்பவெப்பநிலை சீராகவும், வெதுவெதுப்பாகவும் இருப்பது, மற்றும் மக்கள் அவற்றின் மீது வைத்திருக்கும் மாறாத பாசம் ஆகியவை இந்த இனம் பெருகக் காரணமாக அமைந்தன. சைப்ரஸின் பூனைகள் வெறும் விலங்குகள் அல்ல; அவை தீவின் 'இரண்டாவது குடிமக்களாகவே' மதிக்கப்படுகின்றன.


இந்தப் பூனைகள் அங்குள்ள மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. பலர் தங்கள் வீடுகளின் வாசலில் சிறு பாத்திரங்களில் நீர், உணவு வைத்து அவற்றைப் பாசத்துடன் பராமரிக்கின்றனர். அத்துடன், சைப்ரஸில் செயல்படும் பல தொண்டு நிறுவனங்கள், இந்தப் பூனைகளுக்கெனத் தனி தங்குமிடங்களையும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி அவற்றின் நலனைப் பேணி வருகின்றன.


சுற்றுலாப் பயணிகளுக்கு, சைப்ரஸின் பூனைகள் அந்தத் தீவின் அடையாளமாக மாறிவிட்டன. சைப்ரஸின் ஆழமான நீல வானமும், பசுமையான நிலப்பரப்பும், இங்குள்ள பூனைகளின் அமைதியும், விளையாட்டுத்தனமும் இணைந்து ஒரு தனித்துவமான மற்றும் கண்கவர் காட்சியை உருவாக்குகின்றன. சைப்ரஸ், உண்மையிலேயே பூனைகளின் தீவுதான்!

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்