Advertisement

Responsive Advertisement

வாடிய பயிரைக் கண்டால் வாட வேண்டும்


மனிதன் என்பவன் தெய்வமாகலாம். எப்படி? யாருக்கேனும் பசித்த நேரத்தில் ஒரு கவளம் ஆகாரம் யார் தருகிறானோ, அவனே இறைவன். புலால் உணவை ஒருவன் மறுக்கிறானா, அவனே இறைவன். இப்படி இரண்டு குணநலன்களையும் கொண்டவனே இறைவன். முதல் சேவையில் இவன் காய்ந்த வயிறை ஈரமாக்குகிறான்; அடுத்த சேவையில் தன் பசி தீர்க்க பிற உயிர்களைக் கொல்லாமல் இருக்கிறான். இந்த இரண்டு சேவைகளையும் மேற்கொள்பவன் இறைவனுக்கு ஒப்பாவான்.

இது சாஸ்திரங்கள் வலியுறுத்தும் உண்மை. ‘சன்மார்க்கம் என்றால் ‘தர்மம்’ என்று பொருள். சமயம் கடந்த சன்மார்க்கத்தை அறிமுகப்படுத்தியவர் அருட்பிரகாச வள்ளலார். 1867ல் வடலூரில் சத்திய தர்ம சாலையைத் தோற்றுவித்தவர் இவர். பிற உயிர்களுக்குச் சிறிதும் துன்பம் விளைவிக்காத தன்மைதான் ‘ஜீவ காருண்யம்’. இதுதான் முக்தி அடைவதற்கான முதற்படியாக அமைகிறது. வடலூரில் 1867ம் ஆண்டு வைகாசி 11ம் நாளில் வள்ளல் பெருமான் ஒரே நாளில் குடிநீர் நிலைகள் அமைத்தார்.

தர்ம சாலையை நிறுவினார். அன்னதான அறப்பணியையும் மேற்கொண்டார். முறையாகக் கல்வி பயிலாவிட்டாலும், இறைவனின் திருவருளைப் பெற்ற பாக்கியவான் வள்ளலார். அதாவது அவருக்குக் கல்வி பயிற்றுவிக்க மற்றவருக்குத் தகுதியில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் இறைவனே அவருக்கு ஆசானானான். ‘வேண்டும்’ என்று சொல்லியே ‘வேண்டாமை’யை நிலைநிறுத்தியவர் அவர். அதனால்தான், ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று பாடினார் அவர்.

பொருள் மீதான மோகத்தை விட்டொழித்தவர் அவர். யாரிடமும், எதற்காகவும், எப்போதும் அவர் பணத்தை யாரிடமும் யாசித்துப் பெறவில்லை. வள்ளலாரின் திருஅருட்பா மிக எளிமையானது. படிக்கும்போதே யாவராலும் பொருள் புரிந்துகொள்ளத் தக்கது. ஒரு பெரிய சாலையில் ஒரு கோர விபத்து நடந்துவிட்டது. விபத்துக்குள்ளான வாகனங்கள் நிலைதடுமாறி சாலையில் சிதறிக் கிடந்தன. வாகனப் போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டது.

மணிக்கணக்கில் இரு மருங்கிலும் வாகனங்கள் நின்றன. நெடுநேரமானதால் குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி எல்லோருமே பசியால் வாடினர். அந்த மக்கள் தம் பசி போக்கிட, எந்த உணவு கிடைத்தாலும் தம்முடைய சாதி, சமய, வேறுபாடுகளை மறந்து எல்லோரும் அந்த உணவைப் பகிர்ந்து கொண்டனர். அதாவது பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்; மனிதரிடையே ஏற்றத்தாழ்வும் ஒரு பொருட்டல்ல.

பயம், துன்பம், நோய் போன்றவற்றோடு மனிதர்கள் போராடலாம். வெகு காலம்கூட வாழலாம். ஆனால் நீண்ட காலம் பசியோடு போராட முடியாது. பசி வாட்டும். ஆகவே பசித்தோரின் பசியாற்றுவதும் ஜீவகாருண்யம்தான். கொல்லா நெறி பற்றி வேறெந்த கோட்பாடுகளிலும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லப்படவில்லை. ஆனால் இந்த நெறியை வள்ளல் பெருமான் சுத்த சன்மார்க்கத்தில் அழுத்தமாக உணர்த்தி உள்ளார்.

உழவுமாடு மனிதனுக்காக ஆலயமாகிய தன் சரீரம் தேய்ந்து போகும்வரை உழைத்து, உழைத்து மாய்ந்து போகிறது. ஆனால் அதனை சக்கையாய் பிழிந்தெடுக்கும் மனிதன், அதற்கு வயதாகி, அதன் உழைப்பு தனக்குத் தேவைப்படாதபோது, அதை இறைச்சிக் கடைக்கு விற்று விடுகிறான். இது எவ்வளவு பாவமான செயல்! எல்லா உயிர்களையும் தன்னுயிரைப்போல பார்க்கும் உணர்வை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ராமலிங்க அடிகளாரின் எதிர்பார்ப்பு.

புலால் உண்ணாதவர்கள், தெரிந்தே மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது அல்லது புலால் உணவுக்காக பணம் தருவதும்கூட ஒரு வகையில் சன்மார்க்க சங்க நெறிகளுக்கு முரண்பட்டதாகும். வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில் ஈடுபடுவோர்கள் நுழைவதற்குத் தடை இருந்தது. எல்லோரும் நற்செயல்களில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற வள்ளலாரின் கருத்தைப் பரப்புவதுதான் இந்தத் தடையின் நோக்கம்.

புராண காலத்தில்கூட வியாச முனிவர், சுக்கிர முனிவருக்கு வித்யாதானம் என்ற கல்விக் கொடை மற்றும் அன்னதானம் என்கிற பசியாற்றுதலைப் பற்றி முக்கியமாக போதித்திருக்கிறார்.
வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று வள்ளலார் வருந்திச் சொன்னார். அதாவது ஜீவகாருண்யம் என்பது புல்போன்ற அற்ப உயிர்களிடமும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதை அவர் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இதனால் நான், எனது என்ற பற்றுகள் மறைந்து ஞானம் மேலோங்குகிறது.

இன்றைய மனித சமுதாயம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில கோட்பாடுகளை வள்ளல் பெருமான் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்:

* கடவுள் ஒருவரே.
* அவரை ஜோதி வடிவில் உண்மையான அன்புகொண்டு வழிபட வேண்டும்.
* தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கூடாது.
* புலால் மறுத்தல் வேண்டும்.
* சாதி, சமய வேறுபாடுகள் முற்றிலுமாகக் களையப்பட வேண்டும்.
* எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஏழைகளின் பசியைத் தவிர்ப்பதே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
* அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்கும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் அனுசரிக்காமல் தவிர்க்க வேண்டும்.
* எதிலும் பொதுநலம் பேண வேண்டும்.

- கொளப்பாக்கம் கே.சந்தானம் நிகழ்த்திய உரையிலிருந்து தொகுத்தவர்: சுபஹேமா
நன்றி - ஆன்மிகம் 2011

கருத்துரையிடுக

0 கருத்துகள்