நம் பாரதப் பண்பாட்டில் வெற்றிலை வெறும் இலையன்று; அது பாரம்பரியம், ஆன்மீகம், ஆரோக்கியம் மற்றும் சமூக மரியாதையின் பிணைப்பு. வடமொழியில் 'நாகவல்லி' என்றும் 'தாம்பூலா' என்றும் போற்றப்படும் இந்த இலை, அதன் உருவ அழகாலும் மருத்துவச் சிறப்பாலும் பல்வேறு மொழிகளிலும் பிராந்தியங்களிலும் தனிச்சிறப்புடன் அழைக்கப்படுகிறது. குஜராத்தி, இந்தி, வங்காளம், மராத்தி போன்ற வடநாட்டு மொழிகளில் இது செல்லமாக 'பான்' (Paan) என வழங்கப்பட, தெற்கில் தெலுங்கில் 'தொம்மல ஆக்கு', மலையாளத்தில் 'வெற்றிலா', கன்னடத்தில் 'விடையலா' எனப் பல பெயர்களில் அதன் சிறப்பு கொண்டாடப்படுகிறது.
வெற்றிலைத் தாம்பூலத்தின் வரலாறு வெறும் சடங்கோடு மட்டும் நின்றுவிடவில்லை; அது நம் புராணங்களின் பக்கங்களில் பதிந்துள்ளது. மகாபாரதத்தில், ராஜசூய யாகத்தின்போது, முதல் தாம்பூல மரியாதையை கண்ணனுக்கு வழங்க சிசுபாலன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். இதன் விளைவாக, அறம் வெல்லும் விதமாக சிசுபாலன் வதம் செய்யப்பட்ட பின்னர், கண்ணனுக்கே அந்த முதல் தாம்பூலம் வழங்கப்படுகிறது. இது வெற்றியின், தர்மத்தின் சின்னமாக வெற்றிலையை நிலைநிறுத்தியது.
இராமாயணத்தில், அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், அவளுக்கு ஆறுதல் கூறி மீண்டும் இராமனிடம் திரும்புவதற்கு முன், மகிழ்ந்த சீதை அருகிலிருந்த வெற்றிலைக் கொடியை அனுமனுக்கு மாலையாகச் சூட்டினாள் என்று ஒரு கதை கூறுகிறது. அதனால்தான் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும் அடையாளமான ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் இன்றும் நிலவுகிறது. இது வெற்றிலைக்கு ஒரு தெய்வீக அங்கீகாரத்தைக் கொடுத்தது.
ஆன்மீகமும் ஐதீகங்களும்
வெற்றிலை வெறும் உணவுப் பொருளல்ல, அது தெய்வ ஸ்வரூபமாகப் போற்றப்படுகிறது. ஒரு வெற்றிலையில் மகாலட்சுமி ஆவாகனம் செய்திருப்பதாக ஐதீகம். இலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் வாணியும் (சரஸ்வதி), காம்பில் துர்க்கையும் உறைவதாக நம்பப்படுகிறது. கரும்பச்சை நிற வெற்றிலையை ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிற வெற்றிலையை பெண் வெற்றிலை என்றும் பிரித்து, வழிபாட்டில் உரிய முறையைக் கையாள்கின்றனர்.
இறைவழிபாட்டின்போது, வெற்றிலை-பாக்கு-தேங்காய்-வாழைப்பழம் ஆகியவற்றை நிவேதனமாக வைப்பது நம் வழக்கம். இதில்:
வெற்றிலை (நாகவல்லி) - நோயில்லாத உடல் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.
பாக்கு - செல்வச் செழிப்பை (பாக்கியத்தைக்) குறிக்கிறது.
வாழைப்பழம் - பாவ புண்ணிய விடுதலையைக் குறிக்கிறது.
தேங்காய் - தெளிந்த அறிவைத் தருகிறது.
வெற்றிலையின் ஒப்பற்ற மருத்துவக் குணங்கள்
வெற்றிலை அழகுக்கும் ஐதீகத்துக்கும் மட்டுமல்ல, அதன் மருத்துவக் குணங்களுக்காகவே நம் முன்னோர்களால் பெரிதும் போற்றப்பட்டது. ஆயுர்வேதத்தில் இதற்கு முக்கியமான இடமுண்டு.
செரிமானத்தை சீராக்கும் சிநேகிதன்
வெற்றிலை இயற்கையாகவே பசியைத் தூண்டும் பண்பு கொண்டது. உணவு உண்டபின் வெற்றிலை போடும் வழக்கம், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற கோளாறுகளை நீக்கவும் உதவுகிறது.
வெற்றிலையில் உள்ள நார்ச்சத்து (Fiber) மற்றும் சில சேர்மங்கள் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. வெறுமனே மென்று சாறு விழுங்குவது வயிற்றுப் புண், வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்க வல்லது.
சளி மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணி
வெற்றிலை ஒரு சிறந்த கோழை இளக்கியாகச் செயல்படுகிறது. இதன் சாற்றைக் குழந்தைகளுக்கு கோரோசனை அல்லது தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குறையும்.
வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி விளக்கில் சூடாக்கி மார்பில் பற்று போடுவதால் நெஞ்சுச் சளி, மூச்சுக்குழல் அலர்ஜி (Bronchitis) போன்றவை நீங்கி சுவாசப் பாதை சீராகிறது. வெற்றிலையின் ஆன்டி-மைக்ரோபியல் (Antimicrobial) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Antioxidant) பண்புகள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற சீதள நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
ஊட்டச்சத்து மிகுதி: வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி: இதில் உள்ள சவிக்கால் (Chavicol) எனும் வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
காயங்களை ஆற்றும்: காயங்கள் மற்றும் சிரங்குகளுக்கு வெற்றிலை சாற்றைத் தடவுவதன் மூலம் அவை விரைந்து ஆற உதவுகிறது.
சிறுநீரகக் கோளாறுகள்: வெற்றிலை சாறு சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்குச் சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு உதவுகிறது.
இவ்வாறு, வெறும் சடங்குப் பொருளாக மட்டுமின்றி, நம் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் அற்புதமான மருத்துவ மூலிகையாகவும் நாகவல்லி என்னும் வெற்றிலை திகழ்கிறது. இதன் பச்சைப் பசும் நிறம் ஆரோக்கியத்தையும், பாக்குடன் சேரும் அதன் சிவப்பு நிறம் மகிழ்ச்சியையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இது பண்பாடு, ஆன்மீகம், ஆரோக்கியம் என அனைத்திலும் இரண்டறக் கலந்திருக்கும் ஒரு வரப்பிரசாதமே! சும்மாவா சொன்னாங்க நம் பெரியவங்க.....
-S.B.





0 கருத்துகள்