மஹோதயபுரம் அன்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. போருக்கான ஆயத்தங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ‘‘யார் மீது போர் தொடுக்கப் போகிறோம்? எதற்காக இந்தப் போர்? எந்த இடத்தில் நிகழப் போகிறது?’’ - இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினர், உபதளபதிகள். ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க இயலவில்லை, படைத் தளபதிகளால். அவர்களுக்கே எந்த விவரமும் தெரியாது. மன்னர் அழைத்து, ‘‘உடனே நாற்படைகளும் ஆயத்தமாகட்டும். இந்தக் கணமே நாம் போருக்குப் புறப்படுகிறோம்’’ என ஆணையிட்டுவிட்டார். ராஜ கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்படுவது அவர்கள் கடமையாக இருந்தது. ஒருவேளை எதிரிகள் எவரேனும் படை திரட்டி வந்து, எல்லையில் நிற்கிறானோ என்னவோ? மஹோதயபுரம் எந்தக் கணத்திலும் முற்றுகை இடப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம்! உளவுத் துறை ஒற்றர்கள் இந்த அவசர நிலையை அரசர் பிரானிடம் ரகசியமாகத் தெரிவித்திருக்கலாம். அதன் விளைவாக அவர் இந்தக் கட்டளையைப் பிறப்பித்திருக்கலாம். விவரம் கேட்க இதுவல்ல நேரம்.
காலாட்படை, ரதங்கள், கஜங்கள், புரவிகள் எனப் பல பிரிவுகள் பரபரப்புடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஆயுத சாலையைத் திறந்து, குவிந்து கிடக்கும் வாள், வேல், ஈட்டி, கல்லெறி கவண்கள் போன்றவற்றை எடுத்துத் தூசு, துரு நீக்கித் துடைத்துப் பகிர்ந்தளிக்க வேண்டும். ‘படையை ஆயத்தம் செய்’ என ஆணையிட்ட மன்னர் அடுத்த கட்ட ஆணையில் இதர விவரங்களைத் தெரிவிக்க மாட்டாரா என்ன! மஹோதயபுரம் அரண்மனையில் அன்று, சற்று முன்பு வரைகூட எந்தப் பரபரப்பும் இல்லாமல், அமைதிதான் கோலோச்சியது. ராஜகூடத்தில் பெரியவர் ஒருவர் வந்தமர்ந்து ராமாயண கதா காலட்சேபம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். புராணக் கதைகளையும் இதிகாசக் கதைகளையும் விரித்துரைப்பதில் வல்லவர் அவர். மூல நூலிலிருந்து சில சமஸ்கிருத சுலோகங்களை அவர் சொன்னபோதும், மலையாள மொழிப் பாடல்களைப் பாடும்போதும், சில வாத்தியக் கலைஞர்கள் அவருடன் அமர்ந்து இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இசையும் பாட்டும் கதையும் கேட்டுக் கொண்டிருந்த சேர மன்னர் குலசேகரன் அதில் மிகவும் ஒன்றிப் போயிருந்தார். அவர் மாவீரர். சோழ, பாண்டிய நாடுகளில் அவர் பலமுறை போர்ப் பயணங்களை நிகழ்த்தி, வெற்றிகளைக் குவித்திருந்தார். குலசேகரன் புகழ் நாலா திசைகளிலும் பரவியிருந்த காலகட்டம் அது. எதற்கும் அஞ்சாத குணமும் எவரையும் வெற்றி கொள்ளும் ஆற்றலும் கொண்டிருந்தவரான குலசேகர மன்னர், எளிதில் உணர்ச்சிவயப்படுகிறவராகவும் இருந்தார்.
மக்கள் தங்கள் துயரங்களை வந்து முறையிடும்போது, அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மன்னர் மனம் நெகிழ்ந்து, கண்கள் கசிவதைப் பலரும் பலமுறை கண்டிருக்கின்றனர். குலசேகர மன்னரிடம் வீரமும் உண்டு; நெஞ்சில் ஈரமும் உண்டு என்பது நாடறிந்த செய்தியாக இருந்தது. அதை மறுபடி ஒருமுறை நிரூபிப்பது போன்ற சம்பவம் அன்று நிகழ்ந்தது.
ராமாயணக் கதையை விஸ்தாரமாகச் சொல்லிவந்த பெரியவர், ராமனின் அவதார மகிமையையும்... அவர் ராஜரிஷி விசுவாமித்திரரோடு கானகம் சென்று, தாடகையை வதைத்த விதத்தினையும்... அகலிகையின் சாப விமோசன நிகழ்வினையும்... தசரத மைந்தன் மிதிலாபுரியில் ஜானகியை மணந்த கோலாகலத்தையும்... பரசுராமனின் வில்லை வளைத்து அவனுடைய கர்வம் அடக்கியதையும்... சிற்றன்னை கைகேயி கேட்ட வரம் காரணமாக அயோத்தி நீங்கி, ஆரண்யம் வர நேர்ந்ததையும்... சீதாபிராட்டியும் கால் நோக ராமன்பின் ஏகுவதையும்... கங்கைக் கரையில் குகன் தோழமை ராமனுக்கு ஏற்பட்டதையும்… வனம் புகுந்த ராமனைத் தேடி இளையவன் பரதன் வந்து, அண்ணனைப் பணிந்து, பாதுகை பெற்றுத் திரும்பியதையும்... நேர்மையே வடிவான ராமன் ஆரண்யத்தில் பர்ணசாலை அமைத்து வசிக்கையில் இலங்கை வேந்தனின் இளைய சகோதரி சூர்ப்பணகை வந்து மோக நாடகமாட, அவள் மூக்கை இளையாழ்வார் இலக்குவன் அறிந்து விரட்டியதுமான சம்பவங்களை உருக்கமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
சினங்கொண்ட சூர்ப்பனகை கர-தூஷணர்களிடம் சென்று முறையிட்டு, ராம-லட்சுமணர்கள் மீது போர் தொடுக்கத் தூண்ட, கரன், தனது பதினான்கு படைத்தளபதிகளின் துணையுடன் பதினான்காயிரம் அரக்கர் சேனையுடன் சித்திரகூட வனம் புகுந்து போரிடத் துவங்கியதையும், சீதாபிராட்டிக்குத் துணையாக இலக்குவனை இருக்கச் செய்த ராமன், தன்னந்தனியே கோதண்டத்துடன் புறப்பட்டு வந்து, அரக்கர் சேனையை எதிர்கொள்ளத் துணிந்ததையும் அப்பெரியவர் விவரித்தபோது, ‘‘ஆ! என்னே இது அநியாயம்! என் ராம பிரானுக்கு உதவ எவருமில்லையா? கொடிய அரக்கர் சேனை முன் அண்ணல் தனியே நிற்கிறாரா? பெரியவரே, போதும் நிறுத்தும். இனி இங்கு அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருக்க என்னால் இயலாது. நான்... நானே என் சேனையுடன் சென்று அண்ணலுக்கு உதவுவேன். அரக்கர் சேனையைத் துவம்சம் செய்யாமல் திரும்பேன். இது சத்தியம்...’’ என்றவாறே எழுந்து நின்றார் மன்னர் குலசேகரன். அப்போதுதான் அவர் உடனே படைத் தலைவர்களை அழைத்து, ‘‘ஆயத்தமாகட்டும் நம் சேனை’’ எனக் கட்டளை பிறப்பித்திருந்தார். ‘‘நிறுத்துங்கள் சுவாமி. மேற்கொண்டு கதை சொல்ல வேண்டாம்...’’ என்று கையை உயர்த்தி, அரசர் கட்டளையிட்டதால் கதை சொல்வதை நிறுத்திய பெரியவர், அடுத்து அங்கே நிகழ்ந்தவை அனைத்தும் வேடிக்கை என்றெண்ணினார். ஆனால், குலசேகர வர்மர் கோபம் அடங்காமல் இருப்பதையும் அங்கே நிஜமாகவே போர்ப் பயண ஏற்பாடுகள் நிகழ்வதையும் அறிந்து ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.
நன்றி - ஆன்மிகம் நவம்பர் 2012

0 கருத்துகள்