மத்திய அமெரிக்காவின் யூகத்தான் தீபகற்பம் — உலகப் புகழ்பெற்ற மாயன் நாகரிகத்தின் தாயகம். மாயன் மக்கள் பிரமாண்டக் கோயில்கள், பிரமிட்கள், சாலைகள் கட்டியதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, அவர்களின் முன்னோடிகள் இந்த நிலப்பரப்பை மாற்றியமைத்திருந்தனர் என்பதை புதிய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள், பெலீஸ் நாட்டில் உள்ள ஈரநிலப் பகுதிகளில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான மண் கால்வாய் வலையமைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கியமான ஆய்வு Science Advances இதழில் வெளியிடப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது. “ட்ரோன் மற்றும் Google Earth படங்களைப் பயன்படுத்தியதால், பல மைல்கள் நீளமான சிக்சாக் (ZigZag) வடிவிலான கால்வாய்களை அடையாளம் காண முடிந்தது,” என்று ஆய்வுக் குழுவின் உறுப்பினரான நியூ ஹாம்ஷயர் பல்கலைக்கழக தொல்லியலாளர் எலனார் ஹாரிசன்-பக் கூறினார்.
இந்தக் குழு பின்னர் Crooked Tree Wildlife Sanctuary பகுதியில் அகழாய்வு மேற்கொண்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கால்வாய்கள் மற்றும் நீர் குளங்கள், கடல் நீர் அல்லாத நண்ணீர் மீன்கள் — குறிப்பாக காட்பிஷ் (catfish) போன்றவற்றை பிடிக்க வடிவமைக்கப்பட்டிருந்தன.
அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கூரான முனை கொண்ட ஈட்டி ஆயுதங்கள் (barbed spearpoints) மீன்களை குத்தி பிடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வெர்மான்ட் பல்கலைக்கழகத்தின் மரீகா ப்ரௌவர் புர்க் தெரிவித்தார்.
ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது, இந்தக் கால்வாய் அமைப்புகள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு யூகத்தான் கடற்கரையில் வாழ்ந்த அல்லது அங்கு இடம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்டவை. மேலும், அவை சுமார் 1,000 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டன. இது, மாயன் நாகரிகம் உருவாகத் தொடங்கிய Formative Period காலத்துடன் ஒட்டியிருந்தது.
“இவ்வளவு பழமையான காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளனர் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கட்டுமான திறனும் சமூக ஒழுங்கும் ஏற்கனவே வளர்ந்திருந்ததை அறியலாம்,” என பிட்ட்ஸ்பர்க் பல்கலைக்கழக தொல்லியல் நிபுணர் கிளேர் ஈபர்ட் கூறினார்.
இந்த மீன்பிடி கால்வாய்கள், அக்கால மக்களுக்கு உணவுத்தொகையை விரிவுபடுத்தவும், மக்கள் தொகை வளர்ச்சியைத் தாங்கவும் உதவின. இந்த அடித்தளமே பின்னர் மாயன் நாகரிகம் உருவாக பொருளாதார மற்றும் சமூக அடிப்படையாக அமைந்தது.
இந்த ஆய்வு, மனிதனின் பொறியியல் திறனும் சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்வுமுறையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வடிவெடுத்திருந்ததை நிரூபிக்கிறது. யூகத்தான் மண்ணில் தோன்றிய இந்த மண் கால்வாய்கள், இன்று மாயன் பிரமிட்களைப் போலவே, மனிதன் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய சான்றாக நின்றுள்ளன.
Source AP
-S.B.
.webp)


.webp)

0 கருத்துகள்