Advertisement

Responsive Advertisement

கிரிப்டோகரன்சிகளுக்கு ஓர் ஒழுங்குமுறை நிறுவனம் ஏன் அவசியம்? - கோமான் ஶ்ரீ பாலாஜி


(நான் ஐந்து வருடமாக இந்த உலகில் பயணித்து வருகிறேன். என் மனதில் தோன்றியதை கட்டுரையாக அளித்துள்ளேன். கருத்துக்களை பகிரலாம்.)

இன்றைய டிஜிட்டல் உலகில் கிரிப்டோகரன்சிகள் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. பிட்காயின் (Bitcoin) முதல் சமீபத்தில் வெளியான காயின் வரை, இந்தப் புதிய வகை டிஜிட்டல் நாணயங்கள் நிதி உலகை அதுவும் குறிப்பாக இளைஞர்களை ஆட்டிப்படைத்து, பாரம்பரிய வங்கி முறைகளுக்கு ஒரு மாற்று வழியை வழங்குகின்றன. இது நிச்சயம் வரவேற்கப் பட வேண்டிய ஒன்று.

உலகெங்கிலும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து வருகின்றன. சமீபத்திய செய்திகள் சுமார் 60 சதவீதம் க்ரிப்டோ காயின்கள் Whales என்று சொல்லப்படும் பெரு முதலீட்டாளர்களால் வாங்கப் படுகின்றன என்பது உண்மை. சில வாரங்களுக்கு முன் ETH இப்படித்தான் வாங்கப்பட்டது. ஆனால், இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு இணையாக, அவற்றில் ஒழுங்குமுறை இல்லாதது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

கிரிப்டோகரன்சிகளுக்கு ஒரு வலுவான ஒழுங்குமுறை அமைப்பு இல்லாவிட்டால், அவை உலகளாவிய அளவில் உள்ள அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுவது மிகவும் கடினம். அதை பற்றி பார்ப்போம்.

ஏன் ஒரு ஒழுங்குமுறை நிறுவனம் அவசியம்?

கிரிப்டோகரன்சிகள் பெரும்பாலும் பரவலாக்கப்பட்ட (decentralized) தன்மையைக் கொண்டுள்ளன. அதுதான் அதன் பலமே. அதாவது, எந்த ஒரு மத்திய அதிகார அமைப்பாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. இது ஒருபுறம் சுதந்திரத்தை அளித்தாலும், மறுபுறம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.

ஒரு ஒழுங்குமுறை நிறுவனம் இருக்கும்போது, முதலீட்டாளர்களின் நிதி பாதுகாக்கப்படும். முறையான வழிகாட்டுதல்கள், தணிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மூலம், கிரிப்டோ சந்தையில் ஏற்படும் மோசடிகள் மற்றும் நிதி கையாளுதல்களைத் தடுக்க முடியும். இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கிரிப்டோவில் முதலீடு செய்ய நம்பிக்கையை அளிக்கும்.

பல நாடுகள் கிரிப்டோகரன்சிகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க தயங்குகின்றன. ஏனென்றால் ஒழுங்குமுறை இல்லாததால், சட்டவிரோத செயல்களுக்கு (money laundering, பயங்கரவாதத்திற்கான நிதி ஒதுக்கீடு) அவை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

ஒரு சர்வதேச அல்லது தேசிய அளவிலான ஒழுங்குமுறை நிறுவனம் இருந்தால் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதற்கான தெளிவான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கும். இது ஒவ்வொரு நாட்டிற்கும் கிரிப்டோகரன்சிகளை அங்கீகரிக்கவும், சட்டபூர்வமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தவும் ஒரு தெளிவான கட்டமைப்பை வழங்கும். அப்போதுதான் அனைத்து நாடுகளும் பொதுவான ஒரு புரிதலுடன் கிரிப்டோவை ஏற்றுக்கொள்ள முடியும்.

கிரிப்டோ சந்தை மிகவும் நிலையற்றது. High Volatile. ஒரு நாளில் அதன் மதிப்பு வெகு கணிசமாக உயரலாம் அல்லது மிகவும் கீழேக் குறையலாம். இது முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தலாம். பங்குச்சந்தையில் உள்ளதைப் போன்று Upper Circuit மற்றும் Lower Circuit முறைகள் எப்படி பங்குகளை அதிக லாபத்திற்கோ அதிக நட்டத்திற்போ செல்ல விடாமல் தடுக்கிறதோ அதேபோன்று இருந்தால் பெரும் முதலைகள் சந்தை கையாளுதல்களைத் தடுக்கவும், அதிகப்படியான ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். இது கிரிப்டோ சந்தைக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுத்து, ஒட்டுமொத்த நிதி அமைப்புக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும்.

தற்போது, கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்யும் சாதாரண மக்கள், எந்தவிதமான சட்டப்பூர்வ பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர். கிரிப்டோ பரிமாற்றங்கள் அல்லது பிற தளங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண எந்த முறையான வழியும் இல்லை. நம்முடைய Pass Phrase மறந்துவிட்டால் அவ்வளவுதான், ஏன் பிட்காயின் உருவாக்கிய நாகமோட்டாவாலும் கூட ஒன்றும் செய்ய முடியாது. என்ன செய்தாலும் கிடைக்காது. இதனை தவிர்க்க ஒரு ஒழுங்குமுறை நிறுவனம், நுகர்வோர் புகார்களை விசாரிக்கவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஒரு நெறிமுறையை உருவாக்கும். இது கிரிப்டோ உலகில் நுகர்வோர் நலன்களை உறுதி செய்யும். பாதுகாக்கும்.

ஒழுங்குமுறை என்பது புதுமைகளைத் தடுக்கும் என்று சிலர் வாதிடலாம். ஆனால், உண்மையில், ஒரு தெளிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு புதுமைகளைத் தூண்டும். நிறுவனங்களுக்கு விதிகள் தெளிவாக இருக்கும்போது, அவர்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்க உருவாக்க மக்களும் நம்பிக்கையுடன் முதலீடு செய்வார்கள். சட்டப்பூர்வ நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது, நிறுவனங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயங்கும். ஒரு ஒழுங்குமுறை நிறுவனம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் கிரிப்டோ தொழில்நுட்பங்களை வளர்க்க உதவும்.

ஒழுங்குமுறை நிறுவனத்தின் பங்கு அதாவது அதன் செயல்பாடு என்னவாக இருக்கும்?

கிரிப்டோ பரிமாற்றங்கள் செயல்பட உரிமங்களை வழங்குவது மற்றும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது.

நிதி மோசடிகள், money laundering மற்றும் பிற சட்டவிரோத செயல்களைத் தடுக்க கடுமையான விதிகளை உருவாக்குவது.

கிரிப்டோ முதலீடுகள் தொடர்பான ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

கிரிப்டோ லாபங்களுக்கு வரி விதிக்கும் முறை குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவது.

பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, கிரிப்டோ தொடர்பான சர்வதேச தரநிலைகளை உருவாக்குவது. என அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

இறுதியாக, கிரிப்டோகரன்சிகள் நிதி உலகின் எதிர்காலத்தின் ஒரு முக்கிய பகுதியாக உருவாகி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. அவற்றின் முழு திறனை அடையவும், உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படவும், ஒரு வலுவான மற்றும் தெளிவான ஒழுங்குமுறை அமைப்பு இன்றியமையாதது. ஒரு திறம்பட்ட ஒழுங்குமுறை நிறுவனம் ஒன்றை சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் இணைந்து, கிரிப்டோ சந்தையில் நம்பிக்கையை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாத்து, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்து, அனைத்து நாடுகளும் கிரிப்டோகரன்சிகளை ஒரு மதிப்புமிக்க டிஜிட்டல் சொத்தாக ஏற்றுக்கொள்ள ஒரு தெளிவான பாதையை உருவாக்கும். இது கிரிப்டோகரன்சிகளை வெறும் ஒரு தொழில்நுட்ப புதுமையாக இருந்து, உலகளாவிய நிதி அமைப்பின் நம்பகமான பகுதியாக மாற்றும்.

இது ஐந்து வருடமாக இந்த உலகில் பயணிக்கும் ஒரு சாதாரணமானவனின் குரல். இது மேலும் ஒலிக்குமா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்