Advertisement

Responsive Advertisement

அசோகன் காதலி (முன்னுரை) - அரு.ராமநாதன்


நம் சுதந்திரக் கொடியில் இருப்பது அசோகச் சக்கரம்! அது நம் புராதனக் கலாசாரத்தைக் குறிக்கும் ஓர் அற்புதச் சின்னம். அன்பையும் அஹிம்சையையும் சமதர்மத்தையும் குறிக்கும் அந்தத் தர்மச் சக்கரம், அசோகன் ஸ்தூபியொன்றில் காணப்படுகிறது.

கி.மு. 273-232க்கு இடையில், மகதப்பேரரசை அரசாண்ட அசோகன், அதாவது சுமார் 2200 வருஷங்களுக்கு முன் வாழ்ந்த மூன்றாம் மௌரிய மன்னனான அசோகச் சக்கரவர்த்தி, இந்திய சரித்திரத்திலேயே ஈடும் எடுப்புமற்ற தலை சிறந்த அரசனாக விளங்குகிறான்!

அவன்தான் முதன்முதலில் முடியரசின் ஏதேச்சாதிகாரத் தன்மைகளைத் தவிர்த்து, மக்களுக்காக மக்களால் ஆளப்படும் குடியரசு தத்துவத்தை (State Socialism) அரசியலில் கையாண்டு வெற்றி கண்டவன். அவன்தான் முதன்முதலில், அன்பையும் அஹிம்சா சமதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்ட, எல்லோரும் ஓர் குலம் என்ற சாதிமதச் சார்பற்ற ஒரு புது அரசியல் திட்டத்தை, உலகிற்குக் காட்டியவன். அவன் தன் அதிகாரிகளை ஒரு வரம்புக்கு உட்படுத்தி ஒரு சிறு அதிகாரியின் மூலமாவது நிர்வாக ஊழலும் கொடுங்கோன்மையும் தலை காட்டாதவாறு மக்கள் குழுக்களையும் பரிசோதகர்களையும் ஏற்படுத்தி எல்லோருக்கும் பாரபட்சமின்றி நீதியும் கருணையும் கிடைக்குமாறு செய்தான். அவன் தன் கல்வெட்டு ஒன்றில் தேச மக்களுக்கு அரசன் தந்தையைப் போன்றவன் என்றும், அதிகாரிகள் குழந்தைகளை அன்புடன் வளர்க்கும் செவிலித்தாய் போன்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறான். அவன் காலத்தில், ஆரியர், ஆரியர் அல்லாதார் என்ற பேதங்களும், ஜாதி உயர்வு தாழ்வு என்ற பிணக்குகளும், மக்களைப் பிரிக்கும் பல சனாதன தர்மக் கொள்கைகளும் உடைத்தெறியப்பட்டு எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர், எம்மதமும் சம்மதம் என்ற சமதர்மக் கொள்கை அரசியல் மூலம் மக்கள் மனதில் வலியுறுத்தப்பட்டது. புத்தர் போதித்த ஜீவகாருண்ய கொள்கைகளையும், மக்கள் அதிகாரிகள் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் நாடெங்கும் அசோகன் பரப்பினான்.

தன்னாட்டிலுமின்றி பிற நாட்டினரும் அந்த அன்புக் கொள்கையின் இன்பத்தைப் பெற வேண்டுமென்று, இலங்கை, யவனம், தமிழ்நாடு, சிரியா போன்ற பல திசைகட்கும் தூதர்களை அனுப்பினான். அவன் பேரரசு, செந்தமிழ் நாடுகளைத் தவிர, இந்தியா முழுவதும் பரவியிருந்தது. அன்பினாலன்றி வாளோடு வருபவர் எவரையும் தென்னாட்டில் நுழைய விடாத தமிழ் வேந்தர்கள், அசோகன் அனுப்பிய தூதர்களை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள். அசோகன் கொள்கைகளை அறிந்து உள்ளம் மகிழ்ந்தார்கள். இத்தகைய கொள்கைகள் தன் காலத்தோடு மறந்து விடாமல் என்றென்றும் காலத்தால் அழியாமல் நிலைத்திருக்க வேண்டுமென்று அசோகன், பிரம்மாண்டமான தர்ம ஸ்தூபிகளையும் கல்வெட்டுகளையும் நாடெங்கும் எழுப்பினான், சரித்திரத்தில் என்றும் மறையாத புகழ் கொண்டான்.

ஒரு சமயம் அசோகனின் தந்தையான பிந்துசார மன்னன், தனக்கு யவனர் மதுவும் அத்திப் பழமும் ஒரு கிரேக்க தத்துவஞானியும் வேண்டுமென்று சிரியா மன்னனுக்கு எழுதிக் கேட்டானாம், அதற்குச் சிரியா மன்னன், யவனர் மதுவும் அத்திப் பழமும் அனுப்பி, தத்துவ ஞானியை விலை கொடுத்து வாங்கும் வழக்கம் தன்னாட்டில் இல்லை என்று பதில் எழுதினானாம். தந்தையைப் போலவே அசோகனும் பல நாட்டு தத்துவங்களையும் ஆராய்ந்தான். அவற்றிலுள்ள நன்மைகளை எல்லாம் திரட்டி, புத்தரின் அறவழியைப் பின்பற்றி ஒரு அன்பு சமுதாயத்தை உருவாக்கினான். அவனுக்கு ஆதிக்க வெறி இல்லை. கலிங்கப்போர் வெற்றிக்குப் பின், தன் முன்னோர்கள் எவரும் கைப்பற்ற முடியாத தமிழ் நாட்டின் மீதும் படையெடுத்துப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தையும் கை விட்டான். அன்பால் உலகம் முழுவதையும் ஆளலாம் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டான். இத்தகைய உயர்ந்த பண்புகள் வாய்ந்த உத்தம மன்னன், புத்த மதத்தைப் பின்பற்றுவதற்கு முன்னால் மிகவும் கொடியவனாய் இருந்தான் என்றும், தன் 99 சகோதரர்களைக் கொன்ற குருதி வெள்ளத்தில் நீந்தித்தான் சிம்மாசனம் ஏறினான் என்றும், கலிங்கப் போரின் வெற்றியால் ஏற்பட்ட எண்ணற்ற உயிர் கொலைகளைக் கண்ட பிறகுதான் மனம் மாறி புத்தரின் அறவழிகளைப் பின்பற்றினான் என்றும் சில சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். அவனுடைய கல்வெட்டுகளின் வாசகப் போக்கைப் பார்க்கும்போது அவன் ஓரளவு கொடியவனாகத்தான் இருந்தான் என்றும் கருத முடிகிறது. அசோகனே தன் கல்வெட்டு ஒன்றில், தான் தன்ம யாத்திரை புரிவதற்கு முன்னால் விகார யாத்திரை புரிந்ததாகச் சொல்லுகிறான்.

அவனுக்கு ஐந்து பத்தினிகள் உண்டென்றும், அவர்களில் காரூவகி என்பவள் அசோகனின் பிரீதிக்கு மிகவும் பாத்திரமானவள் என்றும் சரித்திராசிரியர்கள் சொல்லுகிறார்கள். அவள் அசோகனின் காதலியாக இருந்தாள் என்றும், அவள் அசோகனின் தர்ம காரியங்களில் பெரிதும் பங்கெடுத்துக் கொண்டவள் என்பதும் அசோகன் கல்வெட்டு ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் இ.பி.ஹாவெல் என்ற சரித்திராசிரியர் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

இக்குறிப்புகளைக் கொண்டு, அசோகன் ஹிம்சை வழியில் இருந்து அஹிம்சை வழி திரும்பியதற்குக் கலிங்கப்போர் மட்டும் காரணமல்ல, காரூவகியின் காதலும் ஒன்றாகும் என்ற அடிப்படையான கருத்தை வைத்துக் கொண்டு, இந்தக் கற்பனைக் கதையை உருவாக்கினேன்.

இக்கதையைப் பின்னுவதற்கும், சரித்திர ஆராய்ச்சி செய்வதற்கும் உதவிய முக்கிய நூல்கள்:

1. A Political and Cultural History Of India Vol.1 by R. Sathianatha Iyer M.A.L.T.
2. The History Of Aryan rule in INDIA by E.B.Howel
3. இந்தியர் வரலாறு, முதல் பாகம் by S.K.கோவிந்தசாமி பிள்ளை அவர்கள், எம். ஏ.
4. The Historical Inscriptions Of Southern India By Robert Sewell and S.K. Aiyangar.
5. ASOKA, an article by David Bury.
6. Collected works of R.G. Bhandarker Vol.III

பிரேமா பிரசுரம் 1957ல் வெளியிட்ட வரலாற்று புதினத்தின் முன்னுரை இது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்