Advertisement

Responsive Advertisement

ஆப்பிரிக்காவின் 'சே குவேரா'! - கோமான் ஶ்ரீ பாலாஜி

"ஆஹா! நாம் சே குவேரா வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே!" என்ற ஏக்கம், சே குவேராவின் படம் அச்சிடப்பட்ட பனியன் அணிந்திருக்கும் பல புரட்சிகர இளைஞர்களின் உள்ளத்தில் நீண்ட நாட்களாக தீவிரமாக இருந்தது. என்னையும் சேர்த்துத்தான் அந்த உணர்வு இருந்தது. ஆனாலும், இன்று அந்த ஏக்கம் பலரிடமும் குறைந்து விட்டது. காரணம், ஆப்பிரிக்காவில்தான் மீண்டும் ஒரு சே குவேரா உருவெடுத்திருக்கிறார். தனது தீவிரமான புரட்சிகர கருத்துகள், தாராளவாதத்தை எதிர்ப்பது, நாட்டிற்கான அர்ப்பணிப்பு, மற்றும் சர்வதேச அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றின் காரணமாக மேற்கு ஆப்பிரிக்காவின் சே குவேரா என்று அழைக்கப்படுகிறார். உலகின் வல்லரசு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக போராடி, அவர்களுக்கு சவாலாக நிற்கிறார் ஒருவர். அவர் தான் இப்ராஹிம் ட்ராவோரே. பலர் அவரைப் பார்த்து, "சே குவேரா மீண்டும் பிறந்தாரோ?" என்று கேட்கும் அளவுக்கு அவரது செயல்கள் புரட்சிகரமானதாக இருக்கின்றன.

ஆனால், ட்ராவோரே பற்றி அறியுமுன், அவருக்குப் முன்னோடியான ஆப்பிரிக்காவின் சே குவேரா, தாமஸ் சங்காரா பற்றிய சிறு அறிமுகம் அவசியம். அதனைப் பற்றி அறிந்தால் தான் நாம் இந்த புரட்சியாளர் இப்ராஹிம் குறித்து அறிய முடியும்.

யார் இந்த சங்காரா? அவருக்கும் இப்ராஹிமுக்கும் என்ன தொடர்பு? பார்ப்போம்…

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடாக இருந்த அப்பர் வோல்ட்டா (Upper Volta), பிரெஞ்சு காலனியேற்ற நாடாக இருந்து 1960 ஆகஸ்ட்டில் சுதந்திரம் பெற்றது. ஆனால், அந்த சுதந்திரம் பெயரளவிலேயே இருந்தது; அடிமைத்தனம் மறு வடிவில் தொடர்ந்தது. பிரான்ஸின் கட்டுப்பாட்டில் தான் ஆட்சி நடந்தது. மக்களுக்கான வறுமை, ஊழல் மற்றும் வெளிநாட்டு கட்டுப்பாடு தொடர்ந்தது. இத்தகைய சூழலில், 33 வயதான இளம் இராணுவ அதிகாரியான தாமஸ் சங்காரா தனது நண்பர்களுடன் இணைந்து மாபெரும் இராணுவப் புரட்சியை முன்னெடுத்தார்.

1983-ல் நடந்த அந்த இராணுவப் புரட்சியின் மூலம் சங்காரா ஆட்சியை கைப்பற்றினார்.


தாமஸ் சங்காராவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள்

தாமஸ் சங்காரா 1949-ல் அப்பர் வோல்ட்டாவின் யாக்கோ நகரில் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் சங்காரா ஒரு இராணுவ வீரர், தாய் மார்கரிட் ஒரு விவசாயி. சங்காரா சிறுவயதில் சமூக நீதி, சமத்துவம் பற்றி ஆழமாக சிந்தித்தார். பத்து வயதில் கத்தோலிக்கப் பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியர்களும் மாணவர்களும் இடையேயான சகஜமான சமத்துவமின்மை அவருக்கு பெரிய காயமாக ஆனது. இது அவரது சமூக நீதி பற்றிய அடித்தளக் கொள்கையாய் மாறியது.

1966-ல், 17 வயதிலேயே சங்காரா இராணுவ பயிற்சிக்காக மாலியில் சேர்ந்தார். அங்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி மற்றும் வியட்நாம் போராட்டங்களை அவற்றின் தாக்கங்களை அறிந்தார். இதுவே அவரது அரசியல் சிந்தனைகளில் புது பொது உடைமை மனப்பான்மையை உருவாக்கியது.

1983-ல் சங்காரா மற்றும் பிளைஸ் கொம்பாரே இரு நண்பர்களும் ஒரு பெரிய இராணுவப் புரட்சியை முன்னெடுத்து, சங்காரா நாட்டின் அதிபர் ஆனார். ஆரம்பத்தில் கொம்பாரே-ம் அவருடன் இருந்தார்; ஆனால் காலப்போக்கில் அரசியல் நோக்கங்களில் வழக்கமாக இருக்கும் முரண்களின் காரணமாக வேறுபாடு வந்தது. 1987-ல் சங்காரா கொம்பாரேவை பதவியிலிருந்து நீக்கினார்.


அதிபராக சங்காராவின் புரட்சிகரப் பயணங்கள்

சங்காரா அதிகாரத்திற்கு வந்தவுடன், தனது நாட்டுப் பெயரை மாற்றி "பர்கினா ஃபாசோ" ("ஊழலற்ற மக்களின் தேசம்" அல்லது "நேர்மையானவர்களின் தேசம்") என அறிவித்தார். இது ஒரு பெயர் மாற்றம் மட்டுமல்ல; அது புதிய புரட்சிப் பாதையின் தொடக்கம். அவர் நாட்டின் கொடியையும் அதன் அடிப்படையில் மாற்றி, சிவப்பு (புரட்சி), பச்சை (வளம்), மஞ்சள் (கனிம வளங்கள்) நிறங்களுடன் நடுவில் ஒரு நட்சத்திரம் (புரட்சியின் ஒளி) வைத்து புதிய அடையாளம் கொண்டார்.

பர்கினா ஃபாசோவின் தலைநகரான ஒவாகடூகூவின் சாலைகளில் சாதாரண சைக்கிளில் அலுவலகம் சென்றதற்காகவும், மக்களுடன் இணைந்ததால் சங்காரா மக்களின் இதயத்தில் "மக்களின் அதிபர்" என்ற அடையாளம் பெற்றார். ஒரு சமயத்தில் அவர் கூறினார், "எனக்கு பாதுகாப்பு எனது மக்கள். மக்கள் பசியால் வாடும்போது நான் ஆடம்பரமாகச் செல்ல முடியாது." எத்தனை சத்தியமான உண்மை.

சங்காராவின் கொள்கைகளும் சாதனைகளும்

சங்காரா வெளிநாட்டுச் கடன்கள் மற்றும் நிதியுதவிகளை நிராகரித்து, "நாம் சுயசார்புடன் நமது கால்களில் நிற்க வேண்டும்" என்ற கொள்கையுடன் நாட்டின் கனிம வளங்களை தேசியமயமாக்கினார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் கூறினார். “எந்தக் கை எங்கள் வாய்க்கு உணவு தருகிறதோ அந்தக் கை எங்கள் கழுத்தையும் பிடிக்கும்.” எத்தனை நிதர்சனமான உண்மை. ஒரு புரட்சியாளனுக்குள் ஒளிந்திருக்கும் திடமான நம்பிக்கை. பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிலக்கிழார்களின் நிலங்களைப் பறித்து உழவர்களுக்கு பங்கீடு செய்தார். சிறிய நாட்டிலே வர்க்க புரட்சி வடிவமைத்து தந்ததோடு மட்டுமல்லாமல் பத்து மில்லியன் மரங்கள் நடும் திட்டம் மூலம் நாடு பாலைவனமாவதை தடுப்பதற்கான முயற்சியும் அவர் முன்னெடுத்தது அவரது சமூக எதிர்கால சிந்தனைகளை உலகிற்கு சொல்லிற்று. பசுமை வளம் அவரது பார்வையில் மூலதனமானது.

பெண்களின் உரிமைகள் பாதுகாத்திட கட்டாய திருமணம், பலதார மணம் போன்ற கொடூர பாரம்பரியங்களை சட்டரீதியாகத் தடை செய்தார். பெண்களை உயர்ந்த பதவிகளில் நியமித்தார். நினைத்துப் பாருங்கள். ஒரு மிகவும் பின் தங்கிய பகுதியில் இத்தனையும் சாதித்து காட்டிய வலிமை அந்த புரட்சியாளன் உள்ளே புருந்திருந்தது. 2.5 மில்லியன் குழந்தைகளுக்கு மஞ்சள் காய்ச்சல், தட்டம்மை தடுப்பு சிகிச்சைகளை வழங்கி, எழுத்தறிவுத்திட்டம் மூலம் மக்கள் கல்விக்குத் தரம் என எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டிற்காக அவர் போட்ட திட்டங்கள். அப்பப்பா? ஒன்று இரண்டல்ல?

சங்காரா மிகவும் எளிமையாக வாழ்ந்தார்; ஒரு சமயம் மரக்கன்று நடும்போது தானே குழி தோண்டி பேசினாரர் அவர். "ஒரு அதிபர் சின்னச் சின்ன வேலைகள் கூடச் செய்ய வேண்டும்; அப்படியிருப்பதால்தான் பொதுமக்களும் முடியாது என்று எண்ணவே எழாது. எழுவும் கூடாது."

சங்காராவின் ஆட்சிக்கு எதிரான சவால்கள்

புதிய சமூகப்பணிகள் மற்றும் நிர்வாக ஒழுங்கை நிலைநிறுத்த தனக்கு கடுமையான அதிகார மேலாண்மை தேவைப்பட்டது. இதனால் பழைய பூர்ஷ்வா தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டு, பிற்போக்கு ஊடக சுதந்திரம் புரட்சி திட்டங்களின் அறிமுகத்திற்காக பறிக்கப்பட்டது. அக்காலத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. அதிருப்தி தோன்றியவர்களிடம் தாக்கம் அதிகரித்தது. இவருக்கு எதிராக நாட்டிலும் வெளிநாட்டிலும் பல அருவருப்பான சதிகள் மற்றும் சக்திகள் உருவாயின.

இந்நிலையில், 1987 அக்டோபர் 15 அன்று, பிளைஸ் கொம்பாரா, பிரான்ஸ் ஆதரவோடு இவருக்கு எதிராய் புரட்சி செய்து அன்றே சங்காராவை படுகொலைச் செய்தார்.

அதற்கு ஒரு வாரம் முன்பு சங்காரா கூறிய சொற்கள் இன்றும் அதிர்கிறது.

“புரட்சியாளர்கள் கொல்லப்படலாம். ஆனால், அவர்களின் எண்ணங்கள் யாராலும் கொல்ல முடியாது.”


இன்று சங்காரா உயிரோடு இல்லை, ஆனால் அவர் விதைத்த விதைகள் இன்று மரமாய் வளர்ந்திருக்கின்றன. அவர் விதைத்த விதை இப்ராஹிம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணி வேருக்கே சவால் விடும் அளவில் அடுத்த சேகுவாராவாக நாம் போற்ற வேண்டிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறதென்றால் அதற்காக மக்கள் நலனுக்காகப் போராடிய ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக நின்று நிலைத்துப் பேசும்..

சரியாக 30 வருடங்களுக்குப் பிறகு அவர் கூறிய “புரட்சியாளர்கள் கொல்லப்படலாம். ஆனால், அவர்களின் எண்ணங்கள் யாராலும் கொல்ல முடியாது” மேலும் நிறைந்த அர்த்தத்தை கொண்டுள்ளன. அதை பற்றிய ஓர் விரிவான ஆராய்ச்சியை அடுத்து பார்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்