கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் குறிப்பிட தக்க அளவில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித திரைப்படமும் வெளிவரவில்லை. பல பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் கூட இந்த 2025 இல் தோல்வியையே தழுவியுள்ளன. 2025ஆம் வருடத்தில் ஒன்பது மாதங்கள் முடிந்த பிறகும் ஒன்றிரண்டு சிறிய பட்ஜெட் படங்களை தவிர நல்ல படங்களை நாம் பார்ப்பதற்கான வாய்ப்பினை தமிழ் திரையுலகம் ஏற்படுத்தித் தரவில்லை.
Stardom எனப்படும் நடிகர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதால் இப்படிப்பட்ட ஒரு கடினமான சூழலுக்கு தமிழ் திரையுலகம் சென்றுள்ளதாக கருதுகிறேன். ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இன்றைக்கு திரைப்படங்களை திரையரங்குகளில் சென்று மக்கள் பார்ப்பதற்கான தேவை என்பது குறைந்து வருவதை ஒரு காரணமாக கூறினாலும் நல்ல படங்களை ரசிப்பதற்கு ரசிகர்கள் தவறுவதில்லை.
OTT தளங்களில் பல மொழி திரைப்படங்கள், வெளிநாட்டு திரைப்படங்கள் உட்பட பல படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு திரைப்படங்களை அதனுடைய அசலான மொழியில் பார்ப்பதோடு நமக்கு தேவையான சப்டைட்டில் மூலம் கதைகளை புரிந்து கொள்ள வாய்ப்புகளும் உள்ளது. மேலும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் உள்ளிட்ட பழமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
முன்பெல்லாம் கொரியன் மற்றும் ஈரானிய படங்களை பார்த்து அதன் கதைக்கருவில் படங்களை உருவாக்கிய ஒரு நிகழ்வும் நாம் அறிந்ததே. குறிப்பாக பல கொரியன் படங்கள் அப்பட்டமாக இங்கே மறுவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு நான்கைந்து வருடங்களில் தான் புதிய இளைய தலைமுறை இயக்குநர்கள் வந்த பிறகு இவ்வாறு கொரிய படங்களை தழுவல்களை உரிமம் பெற்று அதனை டைட்டில் கார்டில் போடுவது வரை முன்னேற்றம் அடைந்து இருக்கின்றோம். எனினும் குறிப்பிடத் தகுந்த அளவில் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் இல்லாதது சற்று வருத்தமே.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்துள்ள ரோந்து, மீஷா ஆகிய படங்களை OTT தளத்தில் பார்த்தேன். எளிதில் யூகிக்க முடியாத கதைக்களத்தை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், எங்கிருந்தோ துவங்கி எங்கெங்கோ சென்று முடிகின்றன. பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டு நம்மை இரண்டு மணி நேரம் இருக்கையில் கட்டி போடும் விதத்தில் அமைந்திருக்கின்றன. இந்த படங்களை பார்க்கும் போது நமது தமிழ் படங்கள் எங்கு உள்ளது? என்று நன்றாக அறிக முடிகிறது. இந்த நிலையில் நாம் இன்னும் கூட ஆதர்ச நாயகர்ளை வெள்ளை திரையில் பார்த்து கொண்டாடுவதையும், சில்லறைகளை சிதற விடுவதும் என்று இருப்பது புரிகிறது.
சமுதாயத்தில் வேறு கலை வடிவங்களில் சொல்ல இயலாத சிக்கலான கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக பொட்டில் அறைந்தால் போல் சொல்லும் நல்ல இயக்குனர்களைக் கொண்டிருந்த தமிழ் திரை உலகத்திற்கு இப்படி ஒரு நிலைமை என்பது சற்று கவலை அளிப்பதாக உள்ளது. தீபாவளி, பொங்கல் என வரிசை கட்டி படங்களை தியேட்டரில் சென்று குதூகலித்துப் பார்த்த பல நினைவுகள் என் கண்ணில் விளையாடுகிறது. என்னதான் விஞ்ஞான மாற்றத்தில் கால ஓட்டத்தில் பல இடர்பாடுகளை திரைத்துறை சந்தித்தாலும் நல்ல கதைக்களம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் கொண்டாட தவறுவதே இல்லை.
சமூக நீதி கருத்துக்களை சாமானியர்கள் புரிந்து கொள்ள உதவும் மாபெரும் ஊடகத்தை தமிழ் சமூகம் சரிவர பயன்படுத்தவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சமுதாயத்தில் பல ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய திரைத்துறை என்பது கால ஓட்டத்தில் அழிந்து போகாமல் தடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமான திரைத்துறையில் உள்ள இயக்குனர்கள் கதாசிரியர்கள் நடிகர்கள் என அனைவருக்கும் இதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிற்கு உள்ளாகின்றனர். கனவு தொழிற்சாலையை காப்பாற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு அதிகமாக உள்ளது.
நல்ல கதை அம்சங்கள் கொண்ட தமிழ் படங்களை பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம்!!!!!
A.கேசவன்,
DO (PLI) காஞ்சிபுரம்
Mobile : 9894473600
0 கருத்துகள்