Advertisement

Responsive Advertisement

‘லே' 'லடாக்’கில் நடப்பது என்ன - நேபாள கிளர்ச்சி போல் ஆகுமா?


லே அபெக்ஸ் பாடி (LAB)
இன் இளைஞர் பிரிவின் தலைமையில் 'லே'வில் செப்டம்பர் 24, 2024 அன்று நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கக் கோரி நடைபெற்ற 35 நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து இந்தக் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டங்களின் தீவிரம் எது? அதன் ஆழமான அரசியல் பின்னணி என்ன? லடாக் தனது உரிமைக்கான தேடலில் எங்கு நிற்கிறது? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போமா…


லடாக்கில் நிலவும் அமைதியின்மை, இது ஏதோ ஒரு நாளில் நேர்ந்த திடீர் நிகழ்வு அல்ல. இது ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது புதிய பரிமாணத்தைப் பெற்றது. அது அப்போது நீண்டகாலமாக விரும்பப்பட்ட அரசியல் இலக்காக 'லே'வால் வரவேற்கப்பட்டாலும், ஆரம்பகால உற்சாகம் விரைவில் மறைந்தது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு உருவான புதிய நிர்வாக அமைப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட 'லே' மற்றும் கார்கில் கவுன்சில்களின் அதிகாரங்கள் மங்கிவிட்டன, தேர்ந்தெடுக்கப்படாத லெப்டினன்ட்-கவர்னர் உண்மையான அதிகார மையமாக உருவெடுத்தார்.

தற்போதைய நெருக்கடியின் மையத்தில் உள்ள முக்கிய கோரிக்கைகள் எவை என்றால், 'லே'விற்கு மாநில அந்தஸ்து தரவேண்டும். ஒரு முழு மாநிலமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை. இரண்டாவதாக ஆறாவது அட்டவணை சேர்க்கை. அது என்னவென்றால் லடாக் மக்களின் நிலம், கலாச்சாரம் மற்றும் வேலைகளைப் பாதுகாக்க, இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் பழங்குடிப் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை.

முன்னதாக 2019ல், யூனியன் பிரதேசமாக மாறியதில் 'லே'யும் கார்கில்லும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தன—'லே' வரவேற்றது, கார்கில் எதிர்த்தது. இருப்பினும், இப்போது இரு மாவட்டத் தலைமைகளும் யூனியன் பிரதேச அந்தஸ்து நடைமுறையில் தங்களுக்கு இருந்த வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையும் பறிக்கப்பட்டுவிட்டன என்ற பொதுவான உணர்வில் ஒன்றிணைந்துள்ளன.

லடாக் நிர்வாகத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் சுமார் ₹6,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில், வெறும் 9 சதவீதம் மட்டுமே இரண்டு கவுன்சில்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது; மீதமுள்ளவை லெப்டினன்ட்-கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், லடாக்கின் குறுகிய ஆறு மாதங்களுக்கும் குறைவான பணிக்காலம் ஏனென்றால் முழுவதும் பனி சூழ்ந்து எங்கும் செல்ல முடியாத காலத்தில் எதற்கும் செலவிடப்படாத நிதியை முடக்குகிறது. ஆகஸ்ட் 2019-க்கு முன் அனுமதிக்கப்பட்ட நிதியை மாற்றும் கொள்கை இப்போது இல்லை, இதனால் செலவிடப்படாத நிதிகள் காலாவதியாகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதால், உள்ளூர் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. மேலும், மக்கள்தொகை மாற்றம் குறித்த அச்சங்கள் மற்றும் வெளியிலிருந்து புதிதுபுதிதாக வரும் பெரும் முதலாளிகள் பற்றிய கவலைகளும் உள்ளன. இந்த உள்நாட்டு உணர்வுகளைத் தணிக்க கடுமையான குடியிருப்பு விதிகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அதிகார பறிப்பு பற்றிய உள்ளூர் மனக்கசப்பைக் குறைக்க முடியவில்லை.


வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வானிலை ஆர்வலரும் லடாக் மாநில உரிமை ஆர்வலருமான சோனம் வாங்சுக் செப்டம்பர் 26 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார். அவரது "ஆத்திரமூட்டும்" பேச்சுக்கள், செப்டம்பர் 24 அன்று 'லே'வில் வன்முறைக்கு வழிவகுத்தன என்று லடாக் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. 

அதிகாரிகள் அவரது தடுப்புக்காவல் "பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும்" மேலும் பாரபட்சமான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் அவசியம் என்று கூறினர். இருப்பினும், சோனம் வாங்சுக் போன்ற ஒரு உயர்மட்ட ஆர்வலரை NSA இன் கீழ் கைது செய்தது, உள்ளூர் மக்களின் கோபத்தைத் தணிக்க எந்த உதவியும் செய்யவில்லை.

லடாக்கின் தற்போதைய குழப்பம், ஒரு எச்சரிக்கையை வழங்குகிறது: இந்தியாவின் எல்லைப் பகுதிகள் தொடர்பான முடிவுகளை அவசரமாகவோ அல்லது போதுமான புரிதல் இல்லாமலோ எடுக்க முடியாது. லடாக் ஒரு முழு மாநிலமாக மாறுவது பலரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, ஏனெனில் அதன் சிறிய மக்கள் தொகை (சுமார் 3 லட்சம்) மற்றும் பரந்த புவியியல். மேலும், லே மற்றும் கார்கிலுக்கு இடையேயான வரலாற்று ரீதியான பிரிவுகள், ஒரு பொதுவான இலக்கில் தற்காலிகமாக ஒன்றிணைந்திருந்தாலும், மத்திய அரசுக்கு ஒரு கவலையாக உள்ளது.

லடாக்கின் கோரிக்கைகள், இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வது பற்றியது அல்ல, மாறாக சுய மாநில அந்தஸ்தைப் பெறுவது பற்றியது, உள்ளூர் சமூகங்கள் தங்கள் நிலத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கும் முடிவுகளில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

இந்தப் போராட்டம் நேபாளத்தை போல் மாறுமா?

லடாக் நிர்வாகம், சோனம் வாங்சுக்கின் உரைகளில் நேபாள கிளர்ச்சி மற்றும் அரபு வசந்தம் (Arab Spring) பற்றிய குறிப்புகள் வன்முறைக்கு வழிவகுத்தன என்று குறிப்பிட்டுள்ளது. நேபாளப் போராட்டங்கள் (குறிப்பாக 2006 மக்கள் இயக்கம்) ஒரு முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிறுவ உதவியது, அதே சமயம் அரபு வசந்தம் (Arab Spring) என்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களைக் குறிக்கிறது, இது பல நாடுகளில் அரசாங்க மாற்றத்திற்கு வழிவகுத்தது, ஆனால் சிலவற்றில் உள்நாட்டுப் போராகவும் மாறியது.

லடாக்கின் கோரிக்கைகள் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்படுவது பற்றியவை, இது இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளூர் சுயராஜ்யத்தை நாடுகிறது. இது பிரிந்து செல்லும் இயக்கம் அல்ல; மாறாக, இது சுய மரியாதையையும் பாதுகாப்பையும் நாடும் ஒரு முயற்சி. சோனம் வாங்சுக் போன்ற ஆர்வலர்கள் வன்முறைக்குத் தூண்டப்படுவதாகக் கூறப்பட்டாலும், லடாக்கின் அடிப்படை இயக்கத்தின் நோக்கம் நேபாளத்தில் இருந்ததைப்போல் ஒரு அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்தை நோக்கியதாக இல்லாமல், இந்திய ஒன்றியத்திற்குள் அதிக அதிகாரமளிக்கப்பட்ட ஒரு அமைப்பை நோக்கியதாக இருக்கிறது.

ஆயினும், லடாக்கின் கோபத்தை முறையாகத் தணிக்கத் தவறினால், அது மேலும் தீவிரமடையவும், கட்டுப்படுத்த முடியாத வடிவங்களை எடுக்கவும் கூடும். மத்திய அரசுக்கும் லடாக் தலைமைக்கும் இடையே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுமா அல்லது இந்தப் போராட்டம் மேலும் வன்முறையாக மாறுமா என்பதை தீர்மானிக்கும். 

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்