Advertisement

Responsive Advertisement

உலக அரங்கில் சிரியாவின் 'Return Back' - கோமான் ஶ்ரீ பாலாஜி

நியூயார்க் - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80-வது அமர்வில் நேற்றிரவு சிரியாவின் அதிபர் அஹ்மத் அல்-ஷராவின் first appearance, உலக அரசியல் அரங்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மிகவும் முக்கியமான தருணமாக அமைந்தது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1967-க்குப் பிறகு ஐ.நா.வில் உரையாற்றிய முதல் சிரியத் தலைவராக அல்-ஷரா திகழ்கிறார். இது அந்நாட்டின் புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. 


சிரியா, பிரான்ஸ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1946ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது.

அதன்பின் 1960 தொடக்கத்தில் அங்கு ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். மற்ற எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போல அவர் நடத்தி வந்தார். அப்போது ஆட்சிக்கு எதிராக கலக குரல்கள் வந்து கொண்டு இருந்தது.


ஹபீஸ் அல் அசாத் அவ்வப்போது கொஞ்சம் நன்றாகவே நடந்து கொண்டார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். ஆனால் அங்கு 90 சதவிகித மக்கள் சன்னி. அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். ஆனால் அதற்கு அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி மக்கள் இருந்தார்கள்.

அப்போது 1998 தொடக்கத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார்.ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

விதியின் குரூரம் இங்குதான் விளையாடியது. பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத்திற்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது. நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் எந்த அறிவும் இல்லை.

ஹபீஸ் 2000ல் மரணம் அடைந்தார். பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எதிர்காலம் அவர்களுக்கு வேறு விதமான திட்டங்களோடு காத்து இருந்தது.


பஷர் அல் ஆசாத் வந்ததும் சன்னி ஷியா பிரச்சனையை உருவாக்கினார். இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி மக்கள் முற்றிலும் அகற்றப்பட்டார்கள். அரசின் அனைத்து பிரிவில் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டனர். ஆசை ஆசையாக காத்து இருந்த மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்பா 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார். மகன் 24 வருடமாக ஆட்சி செய்தார். இந்த 54 வருடங்களில் யாருக்கும் வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை என்று மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது.


அஹ்மத் அல்-ஷரா கடந்த டிசம்பரில் அசாத் குடும்பத்தின் பல ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் போராட்டத்திற்குத் தலைமையேற்று, அதன் பிறகு ஆட்சியில் அமர்ந்தார். அவரது இந்த ஐ.நா. உரை, போர்க்களத் தளபதியிலிருந்து உலகத் தலைவராக அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான Starting Point. 

அல்-ஷராவின் இந்த ஏற்றம் ஆச்சரியமானது. அவர் முன்பு ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (H.T.S) என்ற இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழுவின் தலைவராக, அபு மொஹம்மத் அல்-ஜோலானி என்ற போர்ப் பெயரில் அறியப்பட்டவர். முன்னதாக, அவர் அல்-கைதாவுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என்று கருதப்பட்டதுடன், அமெரிக்கா இவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசும் அறிவித்திருந்தது.


ஆனால் இன்று நியூயார்க்கில், அவர் இராணுவ உடையைக் கைவிட்டு, கச்சிதமான, நேர்த்தியான சூட் அணிந்து தோன்றினார். பார்வையாளர்கள் இதை உலக அரங்கிற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு "ஈர்ப்பு நடவடிக்கை" மற்றும் புதிய அரசியல் பிம்பத்தை உருவாக்கும் முயற்சி எனக் கூறினர்.

இந்த மாற்றத்திற்கு அமெரிக்காவின் உயர்மட்ட ஆதரவு பெரிதும் உதவியது. ஐ.நா.வுக்குப் புறப்படுவதற்கு முன், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். 

இதற்கு முன்னதாக, மே மாதத்தில் சவுதி அரேபியாவில் டிரம்பைச் சந்தித்தபோது, டிரம்ப் அல்-ஷராவை "வலிமையான மற்றும் ஈர்க்கும் நபர்" என்று வர்ணித்தது வாஷிங்டனின் ஆதரவைக் காட்டுவதாக அமைந்ததுடன், சிரியா மீதான வரலாற்றுச் சிறப்புமிக்க தடைகளை நீக்குவதற்கான வழியைத் திறந்தது. சிரியா மீண்டும் உள்நாட்டுப் போருக்குச் செல்லாமல் இருக்க அல்-ஷராவே சிறந்த விருப்பம் என்றும், "வேறு எந்தத் திட்டமும் இல்லை" என்றும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.


ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய உரையில், அல்-ஷரா "புதிய சிரியா"வின் உருவத்தைக் காட்டுவதில் கவனம் செலுத்தினார். "சிரியா, 60 ஆண்டுகால சர்வாதிகாரத்துக்குப் பிறகு உலகில் தனது இடத்தைத் மீட்டெடுக்கிறது" என்று அறிவித்த அவர், நாட்டின் சீர்குலைந்த பொருளாதாரத்தைப் பற்றிய அவலத்தைப் பேசினார்.

அவரது பேச்சின் முக்கிய இலக்கு, சிரியா மீதான சர்வதேசத் தடைகளை நீக்குவதுதான். குறிப்பாக 2019-ல் கொண்டு வரப்பட்ட கடுமையான சீசர் சிரியா சிவிலியன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள தடைகள் சிரிய மக்களைக் கட்டுப்படுத்துகின்றன என்றும், அவற்றை நீக்குவது நாட்டின் மீட்புக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் வாதிட்டார். அத்துடன், அசாத் ஆட்சியில் தடைகளைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட பல பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் தொழிலான கேப்டகான் (Captagon) வியாபாரத்தை அழிப்பதாக அவர் உறுதி அளித்தார்.

நியூயார்க்கில் அல்-ஷரா கவனம் பெற்றாலும், இந்த நிகழ்வு சிரியாவின் ஆழமான உள்நாட்டு அமைதியின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அல்-ஷரா அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சிக்கு உறுதியளித்தாலும், சிரியாவில் உள்ள சிறுபான்மைக் குழுக்கள் இன்னமும் கவலை கொண்டிருக்கின்றன.


உள்நாட்டில், அவரது முன்னாள் எச்.டி.எஸ் தோழர்களே உண்மையான அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். பழைய ஆட்சி வீழ்ந்த பிறகு பிரிவினை வன்முறைகள் வெடித்துள்ளன. குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், ஸ்வீடா மாகாணத்திலும் அலவைட் மற்றும் ட்ரூஸ் சமூகங்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

ஐ.நா.வுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டங்கள் இந்த உள்நாட்டுப் பிரிவினையைக் காட்டின. சில வெளிநாட்டுச் சிரியர்கள் சர்வாதிகார முடிவை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டாடினர். ஆனால், மற்றவர்கள் அல்-ஷராவை ஒரு முன்னாள் அல்-கைதா உறுப்பினராகக் கண்டித்து, அவர் தலைமைக்குத் தகுதியற்றவர் என்று கூறினர்.

மாற்று நீதி (Transitional Justice) பற்றி பேசிய அல்-ஷரா, சிரியாவில் "உண்மை கண்டறியும் குழுக்களை" (Truth-finding committees) உருவாக்கியுள்ளதாக அறிவித்ததுடன், இந்த ஆண்டு நடந்த கொலைகளை பற்றி விசாரிக்க ஐ.நா.வை அழைத்தார். குற்றவாளிகளைத் தண்டிப்பதாக உறுதியளித்தார். இருப்பினும், உள்நாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லையெனப் பல சிரியர்கள் புகார் செய்வதால் சந்தேகம் நீடிக்கிறது. விசாரணைகள் முடியும் வரை அரசு பொது அறிவிப்புகளைத் தவிர்ப்பது, நீதியை தாமதப்படுத்தும் உத்தி என்று அவர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலுடனான உறவைப் பற்றிப் பேசிய அல்-ஷரா, இஸ்ரேலின் கொள்கைகளையும் இராணுவ நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார். இவை சிரியாவுக்கு சர்வதேச ஆதரவை குறைக்கின்றன என்று கூறிய அவர், 1974 ஆம் ஆண்டு பிரிவினை ஒப்பந்தத்துக்குத் திரும்ப வேண்டும் என்று கோரினார். பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறிய அவர், அதே சமயம், அமெரிக்க ஆதரவுடனான ஆப்ரகாம் ஒப்பந்தங்களில் (Abraham Accords) சிரியா சேரப்போவதில்லை என்று திட்டவட்டமாக நிராகரித்தார். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் காசா போர் காரணமாக, இஸ்ரேலுடன் சாதாரண உறவு சாத்தியமில்லை என்று அவர் வாதிட்டார்.

அல்-ஷராவின் ஐ.நா. அறிமுகம், சிரியாவில் அமைதியை விரும்பும் சர்வதேச ஆசையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக அமைந்தாலும், நாட்டின் பிராந்தியப் பிரிவுகள், தொடரும் பிரிவினை வன்முறை, மாற்று நீதிக்கான போராட்டம் மற்றும் போர், பொருளாதாரச் சரிவிலிருந்து மீளும் மக்களின் அவசரத் தேவைகள் ஆகியவற்றை அவர் உண்மையாகத் தீர்க்காவிட்டால், சிரியாவின் இந்த புதிய தொடக்கம் விரைவில் சிதைந்து போகலாம். உலக சமூகத்தில் சிரியாவின் இந்த "மீள் வருகை" பல எதிர்பார்ப்புகளையும், அதே அளவு அபாயங்களையும் கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்