Advertisement

Responsive Advertisement

தனி மனிதனுக்கும், சமூக மனிதனுக்கும்… - அஜயன் பாலா


அவன் பாவம், வாய்பேச இயலாதவன். ஆனால், உழைப்பாளி. பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே பணம் இருந்தது. பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன். கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால், அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க, அந்த வாய்பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக்கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி, டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க, இருவருக்கும் சண்டை. கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப், தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலை கீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய்பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபடாது. ஏனென்றால், அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை, ஏழைதான் திருடுவான்.

இந்தத் தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அந்த மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி, டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமை அல்லவா?

அதை அவர் செய்தார். அவர்தான்... கார்ல் மார்க்ஸ். அந்தச் சமயத்தில் அவர் செய்த புரட்சி, கம்யூனிசம்; அதற்காக அவர் மேற்கொண்ட பாதைக்குப் பெயர்தான்... மார்க்ஸியம்! 

பேருந்தை, கால வெள்ளமாகவும்... டிப்டாப் ஆசாமியை முதலாளி எனப்படும் பூர்ஷ்வாக்களாகவும், அதிகாரமற்ற காரணத்தால் வாய்பேச இயலாதவனாகிப்போன அந்த ஏழையை, தொழிலாளியாகவும், பண்ணை அடிமையாகவும் எனச் சற்றே மாற்றி, மேலே சொன்ன சம்பவத்தைப் பார்த்தால், உலக வரலாற்றில் மார்க்ஸின் பங்களிப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடியும்!

யார், கார்ல் மார்க்ஸ்?

காலம் எப்படி கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதோ, அப்படியே மனித குல வரலாற்றையும் மார்க்ஸுக்கு முன் - மார்க்ஸுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தளவு தன் சிந்தனைகளாலும், கோட்பாடுகளாலும் இந்த உலகத்தைச் சீரமைத்த சிற்பியாக இருந்தவர், கார்ல் மார்க்ஸ்!

2008ல் அஜயன் பாலா எழுதிய கார்ல் மார்க்ஸ் என்னும் நூலுக்கான முதல் அத்தியாயத்தின் ஒரு பகுதி…


கருத்துரையிடுக

0 கருத்துகள்