Advertisement

Responsive Advertisement

வேலையில் புரொமோஷன், கைநிறையச் சம்பளம் வேண்டுமா..? - உங்களுக்கு உதவும் கரியர் ரகசியங்கள்!

புத்தகம்: Career Management – Secrets
ஆசிரியர்: Carolyn Boyes
பதிப்பகம்:‎ HarperCollins Business (UK)

நாம் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்துவரும் வேலையில் அதாவது, கரியரில் ஜொலிக்க வேண்டும்; அடுத்தடுத்து புரொமோஷனும், கைநிறையச் சம்பளமும் கிடைக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய நோக்கமாக இருக்கிறது. ஆனால், பலருக்கும் இந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. நாம் என்ன செய்தால், இந்த நோக்கம் நிறைவேறும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறது ‘கரியர் மேனேஜ்மென்ட் சீக்ரெட்ஸ்’ என்கிற புத்தகம். லண்டனில் வசிக்கும் கரோலின் போயஸ் எழுதிய புத்தகம் இது.


வெற்றிக்கு வழிவகுக்கும் 3 விஷயங்கள்...

‘‘ஒருவருடைய கரியர் எப்போது சிறப்பானதாக இருக்கிறது? அது மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கும்போதுதான். எதெல்லாம் ஒருவரின் கரியரை மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகரமானதாகவும் ஆக்குகிறது எனில், கரியரில் ஒருவர் கொண்டுள்ள ஆர்வம் (Passion), நோக்கம் (Purpose) மற்றும் கொள்கை (Principles) என்கிற மூன்றும்தான்.

நம்மில் பலருக்கும் இன்றைக்கு இருக்கிற கரியர் என்பது எதிர்பாராமல் நடந்ததாகவே இருக்கும். ஏதோ ஒரு வேலை என்று செல்ல ஆரம்பித்து அதில் வெற்றி பெற்றிருப்போம். அல்லது அதில் எக்கச்சக்கமாக சிக்கிக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்போம். இதற்கு மாறாக, ஒரு தொழில் முனைவோராகவோ, கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்வாகவோ அல்லது வெறும் பார்ட் டைம் பணியாளராகவோ நாமே முடிவு செய்து நம்முடைய கரியரை செதுக்கினால் எப்படி இருக்கும்..? நம்முடைய வாழ்க்கையில் நமக்கு முழுக்கட்டுப்பாடும் இருக்கும், முழுப்பொறுப்பும் இருக்கும் இல்லையா?’’ என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

திட்டமிடுதல் முக்கியம் பாஸ்...

‘‘அடப் போங்கப்பா... 10, 15 வருடத்துக்கு மேலாக ஒரு துறையில் ஆக்சிடென்டலாக புகுந்து பயணித்தாகிவிட்டது. இப்போது போய் கரியர் மேனேஜ்மென்ட், கரியரின் மீது நமக்கு இருக்கவேண்டிய கன்ட்ரோல் என்றெல்லாம் சொல்கிறீர்களே... இதெல்லாம் சாத்தியமா என்கிறீர்களா?

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் நான் பல்வேறு நபர்களுக்கு கரியர் குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறேன். குறிப்பாக, இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்வது என்பது குறித்து குழம்பிப் போயிருக்கும் நபர்களே அதிகம். அதில் பலரும் பல ஆண்டு காலம் ஒரு துறையில் பணிபுரிந்தவர்களே.

ஒரு சிலர் கரியரை ஆரம்பிக்கும் தருணத்தில் இருப்பவர்கள். ஒருவர் எந்த பின்புலத்துடன் உருவெடுக்கிறார், அவருக்கு என்ன வயது, எந்தளவுக்கு அவர் இருக்கும் கரியரில் வெற்றிகரமாக இருக்கிறார் என்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அடுத்து என்ன செய்யப் போகிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்கும்போது, அனைத்து வகையான நபர்களுமே ஒரே மாதிரியான சிக்கல்களையும் கேள்விகளையுமே எதிர்கொள்கின்றனர். ஏனென்றால், இவர்கள் அனைவரும் எது நமக்கு உகந்தது, எது அவர்களுடைய குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்கு, எப்படி அதற்கேற்ற திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து சிந்தனை செய்வதற்கு தேவையான நேரத்தைப் பொதுவாக ஒதுக்குவதேயில்லை.

இதில் கொடுமையான விஷயம், நம்மில் சிலர் இருக்கும் கரியரில் வெற்றிக்கான ரகசியங்களில் சிலவற்றைத் தெரிந்துகொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றை நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்பதே நிஜம். இந்த ரகசியங்களைத் தொகுத்து வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்று சொல்லும் புத்தகத்தின் ஆசிரியர், கரியர் முன்னேற்றத்துக்கான வழிகளைச் சொல்கிறார்.

கேட்க வேண்டிய கேள்விகள்...

‘‘உங்கள் கரியருக்கு நீங்களே பொறுப்பா அல்லது அதுவாக நடப்பதுதான் உங்களுடைய கரியர் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பது முதலில் நீங்கள் பதில் காணவேண்டிய முக்கியமான கேள்வி.

அதுவாக நடப்பது என்பதெல்லாம் அந்தக் கால மனநிலை. வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய உலகில் நீங்கள் உங்களுடைய வேகமான கரியர் பயணத்தில் சற்று நிதானித்து நின்று யோசித்து செயல்பட வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகிறது. ஏனென்றால், வேகமாக மாறிவரும் இந்த உலகில் உங்கள் வாழ்நாள் (ஆக்டிவ் வாழ்நாள்) முழுக்க ஒரு வேலை நிரந்தரமாக இருக்கும் என்கிற உத்தரவாதம் இல்லை. அல்லது நீங்கள் வேலைக்கு சேருகிற கம்பெனி அத்தனை வருடங்கள் நிலைத்திருக்கும் என்கிற உத்தரவாதமும் இல்லை. நீங்கள் வேலைக்கு சேருகிற தொழில்துறையே எத்தனை வருடங்கள் நிலைத்திருக்கும் என்ற கேள்விக்குக் கூட விடை இல்லாத சூழலில்தான் இன்றைக்கு வாழ்கிறோம்.

வேலை வேண்டாம்; பிசினஸ்மேன் ஆகிவிட்டால்...

இந்த மாதிரியான வேகமான மாற்றங்களைக் கொண்ட உலகில் பேசாமல் நான் தொழில்முனைவோர் ஆகிவிட்டால் என்கிற கேள்வி உங்களுக்குள் தோன்றலாம். ஏனென்றால், தொழில்முனைவோர் என்பவர் உலக நிகழ்வுகளால் தாக்கம் ஏற்படக்கூடியவர் அல்ல. உலகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வல்லவர்.

நீங்கள் பின்வரும் கேள்விகளை உங்களிடம் நீங்களே கேளுங்கள். உங்களுடைய நிலைமையை நீங்களே உருவாக்கும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா அல்லது மற்றவர்களுடைய நடவடிக்கை உங்களுடைய நிலைமையை நிர்ணயிக்கிறதா? ஒரு தொழில் முனைவோராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது எதற்கும் அடங்கிப்போகிற செயலற்ற தன்மையுடன் (passive) இருக்கப் போகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் நீங்கள் உங்களுடைய கரியருக்கு எந்த அளவுக்கு சரியான அளவில் பொறுப்பேற்றுக் கொள்பவர் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

சுயவேலை வாய்ப்பில் இருப்பவர்களும் தொழில்முனைவோரே ஆவார். ஏனென்றால், அன்றாடம் அவர்களுடைய கரியரில் வெற்றி பெற அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படுகின்றனர். அதே சமயம், பெரியதோ சிறியதோ எந்தவிதமான நிறுவனமானாலும் சரி, அதில் பணிபுரிபவர்கள் அடங்கிப்போகிற செயலற்ற தன்மையையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

அன்றாடம் சரியான நேரத்தில் சென்று கொடுத்த வேலையை சரிவர முடித்தால், ஆயுசுக்கும் (30-35 வருடத்துக்கு) பிரச்னை இருக்காது என்கிற நினைப்பில் செயல்படுகின்றனர். இது இன்றைய உலகில் சாத்தியமா என்று சிந்தியுங்கள்.

உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்...

கரியர் மேனேஜ்மென்ட் என்பதை வெற்றிகரமாக கையாள முதலில் நீங்கள் உங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும். இதற்கு கரியர் சார்ந்த பர்சனல் இன்வென்ட்ரி (உங்களைப் பற்றிய கரியர் குறித்த பட்டியல்) ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

எதிலெல்லாம் நீங்கள் தலைசிறந்தவர் என்று பட்டியலிட வேண்டும். வெறுமனே திறமை மற்றும் அறிவு குறித்த பட்டியல் இல்லை இது. இயல்பாகவே உங்களுக்கு இருக்கும் திறன் மற்றும் எதிலெல்லாம் நீங்கள் அதிக பலம் கொண்டவர் என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.

மனிதர்களைக் கையாளுதல், ஐடியாக்களை உருவாக்குதல், உடல் உழைப்பு/இயந்திரங்களை இயக்குதல், டேட்டாக்களை உபயோகித்தல் என்பவற்றில் நீங்கள் சூப்பர், சராசரி, மோசம் என்று வகைப்படுத்திப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே இவற்றில் எதையெல்லாம் உபயோகித்திருக்கிறீர்கள், எது உங்களுக்கு இயல்பாகவே சிறப்பாக வருகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உங்களிடம் இருக்கும் திறன் மற்றும் உபயோகித்து பார்த்த திறன் என இரண்டையும் சேர்த்துப் பார்த்து, எதில் நீங்கள் திறமைமிக்கவர் மற்றும் எவற்றில் எல்லாம் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதைப் பட்டியலிட வேண்டும். இதுவே உங்களை கரியரில் வெற்றியாளராக்கும் திறமைகளின் பட்டியலாகும்.

குறிப்பாக, மனிதர்களைக் கையாளுதல், ஐடியாக்களை உருவாக்குதல், உடல் உழைப்பு/இயந்திரங்களைப் பயன்படுத்துதல், டேட்டாக்களை உபயோகித்தல் போன்றவற்றில் இயல்பாகவே நீங்கள் எதில் சிறந்தவர் என்பதை உணர்ந்துகொள்ள இது மிகவும் உதவும்.

அடுத்து, நீங்கள் பார்க்கவேண்டியது உங்களுடைய கரியரில் நீங்கள் இதுவரை சாதித்தது என்ன என்பதை. அது என்ன சாதனை? எடுத்த காரியத்தில் எவற்றை எல்லாம் வெற்றிகரமாக முடித்துள்ளீர்களோ, அது எல்லாமே சாதனைதான். இதற்கு ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் இருந்த சூழ்நிலை (Situation), அப்போது நீங்கள் செய்த வேலை (Task), உங்கள் வேலையில் நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுத்திய நடவடிக்கைகள் (Action), அந்த காரியத்தில் கிடைத்த முடிவு (வெற்றி/நன்மை, செலவுக் குறைப்பு/பணம் சேமித்தல், பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைப்பு, அதிக திறனுடன் செயல்படுதல் போன்ற) போன்றவற்றை பட்டியலிட்டுப் பார்க்கவேண்டும். இப்படிப் பார்த்தால், உங்களுடைய கரியரில் இதுவரை நீங்கள் என்ன சாதனைகளை செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இதை வைத்து நீங்கள் என்ன மாதிரியான திறமைகளைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

அதிர்ஷ்டமும் முக்கியம்...

கரியரில் வெற்றி என்பது அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விஷயம் என்கிற எண்ணம் நம்மில் பலரிடம் இருக்கிறது. நம் வாழ்க்கைப் பயணத்தில் அதிர்ஷ்டத்துக்கு எந்தளவுக்கு பங்களிப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு கரியரிலும் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் நாம் எங்கே போக வேண்டும், எப்படிப் போக வேண்டும் என்பதையும் நாம்தான் தீர்மானித்து நடை முறைப்படுத்தவேண்டும். போகும் இடத்தை சீக்கிரமாகவோ, சரியான தருணத்திலோ சென்றடையச் செய்வதற்கு ஓரளவுக்கு அதிர்ஷ்டம் உதவுகிறது. ஆனால், போக வேண்டிய இடத்தையும் பாதையையும் தீர்மானிக்காமல் இருந்துவிட்டால் பயணம் என்பதே ஆரம்பிக்காது. இதனாலேயே உங்களுடைய கரியர் குறித்த ஒரு முழுமையான தொலைநோக்கு பார்வையை நீங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அப்படியொரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தால்தான் அடுத்தபடியாக நாம் செய்யவேண்டியது என்ன என்பது குறித்து நாம் தெளிவான ஐடியாவை கொண்டிருப்போம். உங்களுடைய கரியர் வெற்றிக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை ஒரு கணமும் மறந்துவிடாதீர்கள்’’ என்று கூறி முடிக்கிறார் ஆசிரியர்.

100% அர்ப்பணிப்புக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், கரியர் வெற்றிக்கு அவசியமான ரோல் மாடல் மற்றும் ரோல் மாடலின் பங்கு, உங்களை நீங்களே பிராண்ட் செய்துகொள்ள வேண்டியதன் அவசியம், எதிலும் உங்களுடைய முத்திரையை பதிக்க வேண்டியதன் அவசியம், நெட்வொர்க்கின் அத்தியாவசியம், நிறுவனத்துக்குள் பிரபலமான புள்ளியாய் இருக்க வேண்டியதன் அவசியம், கரியரில் இதுவரை செய்த விஷயங்களுக்கான ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், மற்றவர்கள் நம்முடைய ஐடியாக்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்குக் கூறவேண்டியதன் அவசியம், உள்ளுணர்வை மதித்து நடப்பதின் பலன்கள் என பல்வேறு விஷயங்கள் தனித்தனி அத்தியாயங்களாக இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

கரியரில் முன்னேறத் துடிப்பவர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை படித்துப் பயன் பெறலாம்.

நன்றி - நாணயம் விகடன் 19-04-2024

கருத்துரையிடுக

0 கருத்துகள்